அவளுக்கு முன் ஒரு உலகம்
இயக்குநர்: நிஷா பஹுஜா
தயாரிப்பாளர்: அனுராக் காஷ்யப்
முற்றிலும் இரு வேறு உலகங்கள், பெண்ணுடல் மீது அவை நிகழ்த்தும் போர்கள், ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று விரிகிறது The world before her ஆவணப்படம். 2012-ல் வெளியான படம், பல நாடுகளில் திரையிடப்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியா வந்திருக்கிறது.
இதுவரை படம்பிடிக்கப்படாத விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்களுக்கான அமைப்பான துர்கா வாகினியின் வளாகத்தில் பிராச்சி என்கிற பெண்ணுடன் தொடங்குகிறது படம். அவருடனான அறிமுகத்திற்குப் பிறகு மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கான பயிற்சி முகாமை அறிமுகப்படுத்துகிறது.
இந்து ராஜ்ஜியத்தைக் காப்பாற்றத் தயாராகும் பெண்கள் ஒரு புறம், இந்தியாவின் மிக முக்கியமான அழகிப் போட்டியை வெல்லத் தயாராகும் பெண்கள் மறுபுறம் என்று முற்றிலும் இரு வெவ்வேறான உலகங்களுக்குள் பயணப்படும் இந்தத் திரைப்படம், எந்தப் பாசாங்கும் இல்லாமல் அந்த உலகங்களை முன் வைக்கிறது.
பரிஷத்திற்கு வேலை பார்க்கத் திருமணத்தை நிராகரிக்கும், இந்துத்வாவிற்காகக் கொலை செய்யத் தயங்காத பிராச்சி, காஷ்மீரைக் கேட்டால் கழுத்தை அறுப்போம் என்று பாடுகிற, முஸ்லிம் நண்பர்களே இல்லையென்று பெருமைப்படுகிற சின்மயி – பெரும்பாலானவர்கள் நுழைந்து பார்க்காத இவர்களது உலகத்திற்குள் இந்தப் படம் நுழைகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது பொய் சொன்னதற்காகத் தந்தை போட்ட சூட்டைப் பெருமையாகக் காட்டுகிறார் பிராச்சி. “அது அவளுக்கு ஒரு பாடம்” என்று சிலாகிக்கிறார் தந்தை.
“பிறந்தவுடன் பெண் குழந்தைகளைக் கொல்லும் ஒரு சமூகத்தில் என் தந்தை என்னை வாழ அனுமதித்திருக்கிறார். அதற்கு நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று பிராச்சி அழும் கூர்மையான காட்சியில் மிக ஆழமான கேள்விகளை எழுப்புகிறது திரைப்படம். “நான் திருமணத்தை வேண்டாம் என்று சொல்கிறேன், ஆனால் நாளை துர்கா வாகினியில் பயிற்சி பெறும் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவேன், இந்த முரண்பாடு புரிகிறது. ஆனால் பரிஷத்தான் என் வாழ்க்கை” என்கிறார் பிராச்சி.
இவர்களது உலகத்திற்கும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கும் பெண்களின் உலகத்திற்கும் என்ன ஒற்றுமை இருந்துவிட முடியும் என்று ஒரு பார்வையாளருக்குத் தோன்றலாம். அந்த எண்ணத்தை அடித்து நொறுக்குகிறார் பூஜா சோப்ரா. 2009-ல் மிஸ் இந்தியாவாகத் தேர்வு செய்யப்பட்ட இவரை இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்ததால் கொல்லச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் தந்தை. அதைச் செய்ய முடியாமல் அவரிடமிருந்து பிரிந்து மகள்களைத் தனியாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் தாய். தந்தையால் நிராகரிக்கப்பட்ட பெண் மிஸ் இந்தியாவாக முடிசூடுகிறார்.
பெண் சக்தி, பெண் முன்னேற்றம் என்று அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் பேசினாலும் உண்மையிலேயே அந்தப் போட்டிகளில் அவர்கள் பண்டங்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதை அந்தப் பயிற்சி முகாமின் வாயிலாகவே அம்பலப்படுத்துகிறது திரைப்படம். ஒரு காட்சியில் அழகிப் போட்டியின் இயக்குனர் சொல்கிறாரென்று முகங்களை மறைத்துக்கொண்டு வெறும் கால்களை மட்டுமே காட்டி பூனை நடை போடுகிறார்கள் போட்டியாளர்கள். தனது சுயமதிப்பிற்கு எதிரான செயல் என்றாலும் செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார் ஒரு போட்டியாளர்.
ஒன்றோடு ஒன்று முரண்படும் இரு வெவ்வேறு உலகங்கள் எப்படிப் பெண்ணுடல் மீது வெவ்வேறு வடிவங்களிலான தாக்குதல்களைக் கட்டவழித்துவிடுகின்றன என்பதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது இந்தத் திரைப்படம்.
எதையும் பூடகமாகச் சொல்லாமல் நேரடியான காட்சிகளாகவே சொல்லும் படம், பெண் மீதான வன்முறைகளின் வேர்கள் பற்றிய தீவிரமான சிந்தனைகளைத் தூண்டுகிறது. இன்று பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் தாண்டிப் பெண்மீதான வன்முறை எவ்வளவு ஆழமாக எல்லா நிலைகளிலும் எல்லா உலகங்களிலும் விரவியிருக்கிறது, காலம் காலமாக அது எப்படித் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்கள் வழியாக சமூக அங்கீகாரம் பெறுகிறது என்று பல சிந்தனைகளை எழுப்புகிறது இந்த ஆவணப்படம்.
படம் எந்த முன்முடிவும் இல்லாமல் தொடங்குகிறது. எந்தத் தீர்ப்பும் எழுதாமல் முடிகிறது. ஆனால் பல கேள்விகளை விட்டுச்செல்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago