விவாதம்: பெண்கள் பிழைத்திருப்பதே குற்றமா?

By பிருந்தா சீனிவாசன்

இன்று பெண்கள் எல்லா நிலைகளிலும் ஆண்களுக்குச் சமமான இடத்தை எட்டிவிட்டதைப் போன்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. உண்மையில் குடும்ப அமைப்புக்குள் தொடங்கி சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் பெண், ஆணுக்கு அடங்கி நடக்க நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகிறாள். சமூகத்தின் பண்பாடு, தூய்மை, புனிதம், கவுரவம் அனைத்துமே பெண்களின் மீதும் அவர்களுடைய செயல்பாடுகளின் மீதும் திணிக்கப்படுவதைக் காட்டிலும் பெண்ணடிமைத்தனத்துக்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

குறிப்பாக, ஆன்மிகத்தின் பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அடக்குமுறை எல்லை கடந்தது. வழிபாட்டில் தொடங்கி, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் ஆணுக்கு முன்னுரிமையும் பெண்ணுக்கு உரிமை மறுப்புமே தொடர்ந்துவருகிறது. ஆனால், அந்த உரிமை மறுப்பைக்கூடப் பெண்கள் தங்களுக்கான தனித்துவமாக நினைத்து மகிழ்கிற அளவுக்கு அவர்களுக்குத் தெளிவும் புரிதலும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில்தான் ஆணாதிக்கவாதிகளின் வெற்றியும் அடங்கியிருக்கிறது. திணிக்கப்பட்ட நியதிகளை ஏற்றுக்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கிறவரை எதுவும் பிரச்சினை இல்லை. ஏன் என்று எதிர்க் கேள்வி கேட்கிற போதுதான் அடக்குமுறையின் கோர முகம் வெளிப்படுகிறது.

பெண்கள் தங்கள் மீது திணிக்கப்படுகிற சங்கிலிகளைத் தகர்த்தெறிய முற்படும் போதெல்லாம் அச்சுறுத்தப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள். இதற்குச் சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிர மாநிலம் சனி பகவான் கோயில் சம்பவமும் அதைத் தொடர்ந்த சர்ச்சைகளும்தான்.

வழிபாட்டிலும் பாகுபாடு

மகாராஷ்டிர மாநிலம் சிங்கணாபூரில் இருக்கும் சனீஸ்வரர் கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. நானூறு ஆண்டு காலத் தடையை எதிர்த்து, திருப்தி தேசாய் தலைமையில் அவரது ‘பூமாதா படை’யைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ‘கடவுளை வழிபடுவதில் ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது. வழிபாடு என்பது பெண்களின் அடிப்படை உரிமை. அதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை’ என்று குறிப்பிட்ட மும்பை உயர் நீதிமன்றம், பெண்களும் கோயில் கருவறைக்குள் நுழைந்து வழிபடலாம் எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் பெண்கள் கோயில் கருவறைக்குள் சென்று வழிபட்டுவருகின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த துவாரகா சாரதாபீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா, “சனீஸ்வரரின் பார்வை பெண்களுக்கு உகந்தது அல்ல. அதனால்தான் பெண்கள் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இது போன்ற நியதிகளை அவர்கள் மீறினால் அவர்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரிக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். தவிர, “பெண்கள் இதுபோன்ற செயல்களால் வெற்றிக் களிப்பு அடைவதைவிட போதைப் பழக்கங்களில் இருந்து ஆண்களை மீட்க வேண்டும். காரணம் போதைப் பொருட்களின் பயன்பாட்டால்தான் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. கேரள கோயிலில் சமீபத்தில் நடந்த பட்டாசு வெடிப்பு மரணங்களுக்கு பெண்கள் இப்படி கட்டுப்பாட்டை மீறியதுதான் காரணம்” என்றும் சொல்லியிருக்கிறார்.

தொடரும் அச்சுறுத்தல்

மடாதிபதியின் இந்தப் பேச்சு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. சனீஸ்வரனின் தரிசனம் குறித்து சோதிட சாஸ்திரமோ வேறு சாஸ்திரங்களோ கூறியிருப்பதைப் பெண்களுக்குச் சொல்ல அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அதை எப்படிச் சொல்லியிருக்க வேண்டும்? அவர் எப்படிச் சொல்லியிருக்கிறார்? பாலியல் வன்முறை அதிகரிக்கும் என்கிறார். இந்த நாட்டில், பெண்களை எச்சரிக்க வேண்டுமென்றால் அவர்களைப் பாலியல் வன்முறையைக் காட்டி அச்சுறுத்த வேண்டும் என்று சாமியார்களுக்குக்கூடத் தோன்றுகிறது என்றால் அது எப்படிப்பட்ட சூழல்? வழிபாடு செய்யச் செல்லும் பெண்களின் பக்திக்கும், தாங்களும் வழிபட வேண்டும் என்னும் அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்திருந்தால் சங்கராச்சாரியார் இப்படிப் பேசியிருப்பாரா?

வழிபாட்டில் ஆணுக்குக் கிடைக்கிற உரிமை தனக்கும் வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பது தவறா? அப்படி மீறினால் அவள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவாள் என்று ஒரு மடாதிபதி சொல்கிற அளவுக்குத்தான் பெண்ணுக்கு இங்கே மரியாதையும் பாதுகாப்பும் கிடைக்கிறது. ஏற்கெனவே அடிப்படைக் கல்வி மறுப்பு, வேலை மற்றும் ஊதியப் பாகுபாடு, குடும்ப வன்முறைகள், பாலியல் அச்சுறுத்தல்கள் என்று பல்வேறு போராட்டங்களுக்கு நடுவேதான் ஒரு பெண் இங்கே வாழ வேண்டியிருக்கிறது. அவை போதாதென்று ஸ்வரூபானந்தா போன்ற மடாதிபதிகள் போகிற போக்கில் விஷ விதைகளைத் தூவிச் செல்கிறார்கள். பெண்களை எப்போதும் அடிமைப்படுத்தி ஆள நினைக்கும் ஆண்களுக்குத் தெம்பளிக்க இந்த வார்த்தைகள் போதாதா? இது போன்ற வார்த்தைகள், பெண்கள் இந்தச் சமூகத்தில் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்களைக்கூட வேரோடு சாய்த்துவிடக்கூடியவை அல்லவா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

31 mins ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்