மோர் குடித்த ஆண்கள் உடனே பருத்திவிதையை உரல் உரலாகப் போட்டு நாலைந்து உரல் ஆட்டுவார்கள். இத்தனை நாளும் ஒரு உரலிலேயே ஆட்டி முடித்துவிட்டு அதன் வாசத்திலேயே அத்தனை மடுகளுக்கும் தண்ணீர் காட்டி முடித்துவிடுபவர்கள் இன்று நாலைந்து உரல் என்று ஆட்டி, தவிடு போட்டு மாடுகளை அன்போடு தடவிக் கொடுத்து தண்ணீர் விடுவார்கள்.
அன்றையை தினம் இவர்களுக்கு தைப்பொங்கல் கிடையாது. சொல்லப் போனால் முக்கியமான மாடுகளுக்குத்தான்! பிறகு கொட்டத்தை (தொழு) சுத்தமாகப் பெருக்கி எடுப்பார்கள். குண்டும் குழியும் சவதியாக இருக்குமிடத்தில் இளவட்டங்கள் இரண்டு நாளைக்கு முன்னமே கிணறு வெட்டிய காரைமண்ணைச் சுமந்து கொண்டுவந்து போட்டு மேடு, பள்ளமில்லாமல் சமதரையாக நிரத்தியிருப்பார்கள்.
அதோடு மாடுகளுக்கு அன்றைய தினம் வழக்கமாகப் போடும் கேப்பைத் தட்டை, குருதவாலி தட்டை ஆகியவை கிடையாது. படப்புக்கு அடியில் பத்திரப்படுத்தியிருக்கும் நிலக்கடலை செடி, பயத்தான் நெற்றுக்களைக் குத்திப் புடைத்தெடுத்த பொட்டு (தோல்) ஆகியவற்றைப் போடுவார்கள்.
தங்களுக்குத் தீனி போடும் எஜமான்களைத் தினமும் ஆசையாகப் பார்த்து அவர்களை உரசியும் நக்கியும் கொடுக்கும் மாடுகள் இன்று அவர்களைத் தங்கள் கரிய விழிகளால் ஒரு முறை பார்த்துவிட்டு ஆவலாகக் காடியில் கிடக்கும் தீவனங்களைத் திங்க ஆரம்பிக்கும்.
பசுக்களுக்கெல்லாம் அருகம்புல், மத்தேங்கா புல், சாமிப்புல், முள்முருங்கை என்று முதல் நாள் அறுத்து வந்த பசிய புல் வகைகளைப் போடுவார்கள். அவற்றைப் போட்டவர்களுக்கு நன்றி கூறும் விதமாக பசுக்கள் தங்களின் தலையை ஆட்டிவிட்டு தீவனங்களைத் திங்க ஆரம்பிக்கும். அதன் பால் சுரந்த காம்புகள் அப்போதே பாலைப் பீய்ச்சியடிக்கத் தயாராக இருக்கும். அதன் கன்றுகுட்டிகளுக்குப் பச்சைப்புல்லின் மீது கவனம் செல்லாது. தாயின் பால் சுரந்த மடி மீதுதான் அவற்றின் கவனமெல்லாம். அதனால் கட்டிய கயிற்றை அறுத்துவிடுவது போல அவற்றின் கால்கள் நிலைகொள்ளாமல் தவிக்கும். ம்மா, ம்மா என்ற அவற்றின் தவிப்புக் குரல்கள் நம் நெஞ்சை நெகிழச்செய்துவிடும்.
இவற்றின் குரலுக்காகவே சீக்கிரம் பால் கறக்க ஆண்கள் வந்துவிடுவார்கள். வழக்கமாக இரண்டு, மூன்று சொம்பு பால் கறப்பவர்கள் அன்று ஒரு சொம்பு பாலை மட்டும் கறுந்துவிட்டு கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டு விடுவார்கள். மடியை முட்டி, முட்டி வாய் நிறைந்த நுரையோடு பால் குடிக்கும் கன்றுகளுக்கு அன்று தைப்பொங்கல் உற்சாகம்தான்.
இன்னும் காலை இருட்டு கலையவில்லை. வழக்கமாய் இந்நேரத்துக்கு அவ்வப்போது சிறகுகளை நோண்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் சேவல்களும் கோழிகளும் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டதோடு அல்லாமல், ஒவ்வொரு வீட்டின் முன்பும் தோசை சுடும் நெருப்பு வெளிச்சத்தைக் கண்டும் சிறகுகளை நெஞ்சில் அடித்தவாறு கூரையிலிருந்து தெருக்களில் இறங்கி கொக்கரித்துக்கொண்டு அங்குமிங்கும் அலையும். அன்று நாய்களுக்கும் பூனைகளுக்கும்கூட உறக்கம் இல்லை. நாய்கள் எல்லாம் தோசைக்காக வந்து அடுப்பின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களை மெல்ல உரச அவற்றுக்கு இரண்டொரு தோசை போடப்படும். பூனைகளுக்கு வெறும் தோசை பிடிக்காது. பால் தோசைதான் பிடிக்கும் என்பதால் அவற்றுக்கு பால் மண தோசை கிடைக்கும்.
இந்த அடுப்பின் தீ வெளிச்சத்துக்கு வீட்டின் முன்னால் இருந்த வேப்பமரத்தில் அடைந் திருந்த குருவிகள் மரத்தைவிட்டு ஒரு சுற்று பறந்து பிறகு இருட்டுக்காக இடம் தேடி ஓட, அணில்கள் சரட்டெனக் கீழிறங்கி எரிந்துகொண்டிருக்கும் தீ வெளிச் சத்தைப் பார்த்து மருண்டு திக்கு திசை தெரியாமல் ஓட்டம் பிடிக்கும்.
வீடுகளில், படப்புகளில், வண்டிகளில், கூனைகளில் (நீர் இறைக்கப் பயன்படும் கருவி), கண்ணுபூளைச் செடி, மாவிலை, வேப்பங்குழை, கம்பந்தட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காப்பு கட்டிய ஆண்கள் தங்கள் பிஞ்சையை நோக்கி புறப்பட்டு விடுவார்கள். அப்படிப் போகும் போது தங்கள் பிள்ளைகளில் மூத்த பிள்ளைகளை மட்டும் கூப்பிட, அவர்களுக்குச் சிணுக்கமாயிருக்கும். அம்மாவை உரசிக்கொண்டிருக்கும் இந்த உரசல் எப்போதும் கிடைக்காது.
குளிருக்கு இதமான தீயின் கதகதப்பில் உட்கார்ந்தவாறு சுடச்சுட தோசை தின்றுகொண்டிருக்கும் பிள்ளைகளுக்குத் தங்கள் அய்யா கூப்பிடுவதைக் கேட்கையில் எரிச்சலாயிருக்கும். ஆனாலும் அந்த எரிச்சலினூடே ஒரு குறுகுறுப்பான சந்தோஷமும் இருக்கும். ஏனென்ன்றால் அய்யாவுன் போகும்போது அவர் இவனை அணைத்தவாறு பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டு வருவார். அது கேட்க சுவாரசியமாக இருக்கும். அதனால் அவசரமாக எழுந்தவர்கள் முதல் நாள் குப்பைமேட்டில் பிடுங்கி நிறைய மண் சேர்த்து தண்ணீர் ஊற்றியதில் ஈரப்பதம் கொண்டிருக்கும் சிறு கன்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago