எங்க ஊரு வாசம்: குமரிகள் எல்லோரும் ஆவாரம் பூக்காடு!

By பாரததேவி

பொங்கல் வைக்காதவர்கள் அன்றி ஊருக்குள் இருக்கும் அனைவருக்கும் இந்தப் பொங்கல், வெண்கலக் கிண்ணத்தில் நெய்யின் வாசம் கொண்டுபோய் சேர்க்கும். ஆட்டுக்கிடையைப் பார்த்துக்கொண்டிருப்போருக்கு மட்டுமல்ல, கிணற்றங்கரையிலும் சிறு புரச இலையில் பொங்கல் வைத்து சூடம் ஏற்றி, சாமி கும்பிடுவார்கள். அந்தப் பொங்கச் சோறு, கிணற்றுக் கமலைக்கும் அந்தப் பக்கமாய் வரும் பறவைகளுக்கும்தான்.

ஆண்கள், மந்தையின் மர நிழல்களை நோக்கிக் கிளம்பிவிடுவார்கள். ஆடு புலி ஆட்டம் ஆடியவாறு ஊர் வம்பும் பேசத்தான். அவர்கள் விளையாட்டில், பேச்சில் ஈட்டுபட்டிருந்தாலும்கூட அவர்களின் நெஞ்சில் மாட்டுக்காடிகளின் நினைவுதான் இருக்கும். தைப்பொங்கலின் மூன்று நாட்களுக்கும் காடிகள் வெறுமையாக இருக்கக் கூடாது. தீவனங்களை நிறைத்துக்கொண்டே இருப்பார்கள். பருத்தி விதையோடு புண்ணாக்கும் சேர்ந்து மூன்று நேரமும் தவறாமல் தண்ணீர் விடுவதால் காளைகளுக்கும் பசுக்களுக்கும் வயிறு புடைத்திருக்கும். அதனால் அவற்றின் வால் வீச்சு இங்கும் அங்குமாய் சரசமாடும்.

பெண்களுக்கு அடுப்பு வேலை செய்து மாளாது. எல்லோருடையை தோட்டங்களிலும் கத்திரிக்காய், சீனி அவரைக்காய் என்று காய்ப்பதோடு பிஞ்சை கரையோரங்களில் பூசணிக்காய், சுரைக்காய், தண்ணிக்காய், பீர்க்கங்காய் என்று காய்த்து செழித்துக் கிடக்கும். எந்தத் தோட்டத்திலும் இப்படி வரும் நல்ல நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் யாரும் காய் பிடுங்கிக்கொள்ளலாம். பெரும்பாலும் வெஞ்சனத்துக்குப் பூசணிக்காயும் கத்திரிக்காயும்தான். பீர்க்கங்காய்களை யாரும் பறிப்பதில்லை. ஏனென்றால் பாம்பு ஏறிய பீர்க்கங்காய் கசப்பாக இருக்கும் என்பதால் தின்று பார்த்து, அதுவும் அதன் தோலைச் செறப்பான் கொண்டு சீவி அறுக்க வேண்டும். அதிக வேலை என்பதால் அதை யாரும் இப்படி ஒரு நல்ல நாளைக்குப் பிடுங்க மாட்டார்கள்.

மற்றபடி பெரிய, பெரிய மொடாப் பானைகளில் காலை நேரத்திலேயே உலை கட்டிவிடுவார்கள். நெல்லுச் சோறு என்பதால் பிள்ளைகள் எல்லாம் எந்த நேரமும் வட்டிலும் கையுமாகத்தான் உட்கார்ந்திருப்பார்கள். கரும்பு, பனங்கிழங்கு எல்லாம் அதன் பிறகுதான். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று படி, நான்கு படி அரிசி என்று வெந்துகொண்டிருக்கும். கிழவிகள் காய்களை அறுத்துக் குமிக்க, குமரிகள் வெஞ்சனத்துக்காக வறுத்த மசாலை அம்மி, அம்மியாக மூன்று,

நான்கு முறை அரைத்து வழிப்பார்கள். கடைசியாக ரசத்துக்காக மிளகு, சீரகத்தோடு பூண்டு, வத்தல் என்று அரைத்து முடிக்கும்போது கையில் எரிச்சல் ஆரம்பமாகிவிடும்.

நல்ல நாள் அன்று கண்டிப்பாகப் பருப்பு கடைய வேண்டும். ஒரு சட்டி பருப்பு, ஒரு சட்டி காய், ஒரு பெரிய பானை நிறைய ரசம் என்று வைத்து முடிக்கு முன்பே சிறுவர்கள் வீட்டைச் சுத்த ஆரம்பித்துவிடுவார்கள். குமரிகள் மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு, சந்தையில் அம்மாக்கள் எடுத்துவந்த சேலையை இடுப்பு நிறைய கொசுவம் போட்டு உடுத்திக்கொள்வார்கள். சீவி, சிக்கெடுத்த கொண்டைகளில் ஊர்ப் பண்டாரம் கொடுத்த மரிக்கொழுந்து மண மணக்கும். இருகவுறாகத் தொங்கும் ‘வளர்த்த’ காதிலும், கழுத்திலும் கணுக்கணுவாகக் கோர்வை போட்ட ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்க அவர்களே ஒரு ஆவாரம் பூக்காடாக நடமாடுவார்கள். கைகளில் புதிய ரப்பர் வளையல். கண் மை, பவுடர் இவற்றுக்கு எந்த வேலையும் இல்லை. மஞ்சள் பூசிய முகத்தில் புள்ளிவைத்தாற்போல கருத்த பொட்டு, உதட்டில் வெற்றிலைச் சிவப்பு, காலில் தண்டையோடு கொலுசுச் சத்தமும் சேர்ந்து குலுங்கும். விரல்களில் மருதாணி.

குமரிகள் யாரும் இனி வீட்டுப் பக்கம் திரும்பவும் மாட்டார்கள். ஒரு வேலையும் செய்யவும் மாட்டார்கள். அதுக்குத்தான் ஆத்தா, சின்னாத்தா, பாட்டி, அத்தை என்று ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்களே. பொழுது அடையுமுன்பே சேத்திக்காரிகளோடு சேர்ந்துகொண்டு தோளில் கைபோட்டவாறு மந்தைக்கு வருவார்கள்.

இடுப்பில் ஒரு வேட்டியோடு திரண்ட தோள்களும் அகண்ட மார்புமாக நிற்கும் இளவட்டங்களுக்கு இவர்களைப் பார்க்கையில் ஜல்லிக்கட்டுக் காளைகளாக மனம் துள்ளும். சிறு பிள்ளைகளை விட்டு, தனக்குப் பிடித்தவளிடம் சுண்ணாம்பு கேட்டுத் தூது அனுப்ப, அவர்கள் பதிலுக்கு எள்ளுருண்டையைக் கொடுக்க, பகல் முழுக்க விளையாட்டுத்தான். ஒரு சில பெண்கள் ரகசியமாகத் தனக்குப் பிடித்த ஆண்களுக்குச் சுண்ணாம்பு கொடுத்தனுப்ப, அவர்கள் கிளுகிளுத்துப் போவார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்