அரசாங்கம் மூன்றாம் பாலினமாக அறிவித்தாலும் திருநங்கைகளுக்கு இந்தச் சமூகத்தில் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை. குடும்பம், சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொது வாழ்க்கை என அனைத்திலும் அவர்கள் புறக்கணிக்கப்புக்கு ஆளாகிறார்கள். வீட்டை விட்டு வெளியேற்றப்படும் திருநங்கைகள் சந்திக்கும் அவமானங்களும் சொல்லில் அடங்காதவை. ஆனால் இப்படியான புறக்கணிப்புகளைக் கண்டு துவண்டுவிடாமல் சவால்களைச் சந்தித்துத் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் திருநங்கை ஜெயா. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயா, இன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.
எல்லாத் திருநங்கைகளையும் போலத்தான் ஜெயாவின் வாழ்க்கையும். கூலித் தொழிலாளி முத்து - ஜெயகாந்தி தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஜெயபிரகாஷ். இவருக்கு 14-வது வயதில் ஏற்பட்ட மாற்றம், வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிலைக்குக் கொண்டு சென்றது. தன் உடலுக்குள் நிகழ்கிற பாலின மாற்றத்தை மறைக்கவும் முடியாமல், பெற்றோரிடம் அதை முழுமையாகப் பகிர்ந்துகொள்ளவும் முடியாமல் தவித்தார் ஜெயபிரகாஷ். அவரது நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த நண்பர்கள் அவரை ஜெயா என்று அழைக்கத் தொடங்கினர். ஜெயாவின் செயல்களுக்கு அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு. ஓர் ஆண் மகனைப் போல நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் வலியுறுத்த, ஜெயா தன்னை ஒரு பெண்ணாகவே உணர்ந்தார்.
வழிகாட்டிய தோழி
வீட்டின் எதிர்ப்புக்கும் பல்வேறு போராட்டங்களுக்கும் இடையே பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. (சமூகவியல்) பாடத்தில் சேர்ந்தார். அங்கும் ஜெயாவுக்கு அவமானம்தான் பரிசாகக் கிடைத்தது. சக மாணவர்களின் கேலியையும் கிண்டலையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தினார். ஆதரிக்க யாருமின்றி நிராதரவாகத் தவித்தவர், பாதுகாப்பு தேடி பெங்களூரு சென்றார். அங்கு ஓராண்டு இருந்தவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கொளத்தூர் கிராமத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். அப்போது ஜெயாவுக்கு திருநங்கைகள் ஜனனியம்மாள், ஈஸ்வரி, அர்ச்சனா, அம்மு, மீனா ஆகியோர் அடைக்கலம் தந்தனர். அவர்களுடன் வசித்து வந்தவருக்கு, சிறுநாத்தூரில் வசிக்கும் தோழி திலகவதி மூலம் புது வழி பிறந்தது.
குருவின் ஆசியோடு
ஒட்டுமொத்த சமூகமே புறக்கணிக்கும் திருநங்கைகளுக்கும் அரசுப் பணி கிடைக்கும் என்ற உத்வேகத்தைத் தோழி திலகவதி உருவாக்கினார். அந்தத் தகவலை, தன்னை நான்கு ஆண்டுகளாக அரவணைத்துப் பாதுகாத்த தன்னுடைய குரு ஜனனியம்மாளிடம் பகிர்ந்துகொண்டார். அவரும் உடனடியாக விண்ணபிக்கும்படி சொல்ல, சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்தார் ஜெயா. அவரது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த அதிகாரிகள், ஆட்சியர் அ.ஞானசேகரன் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அவரும், விண்ணப்பத்தை ஆய்வு செய்து திருநங்கைக்குப் பணி வாய்ப்பு வழங்க பரிந்துரைத்தார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணிக்குத் தேர்வானார் ஜெயா. பணி நியமன ஆணையை ஆட்சியரிடம் இருந்து பெற்ற ஜெயா, தனது குரு ஜனனியம்மாள் ஆசியுடன் கடந்த மார்ச் 3-ம் தேதி பணியில் சேர்ந்தார். இதன் மூலம் தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்குச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
‘மிஸ்’ என்று அழைக்கிறார்கள்
தன்னுடைய பணி குறித்து திருநங்கை ஜெயா கூறும்போது, “முதல் நாள் பணிக்கு வரும்போது கொஞ்சம் படபடப்பாக இருந்தது. ஆனால் பள்ளிக்கு வந்ததும் எனக்குக் கிடைத்த வரவேற்பு, என்னிடம் இருந்த அத்தனை பயத்தையும் போக்கியது. ஒவ்வொரு நாளும் உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை எடுத்து கொடுப்பதுதான் என் வேலை. அதிகாரிகள் கொடுத்துள்ள கால அட்டவனைப்படி, தினசரி உணவு தயாரிக்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள், சமையலர், மாணவர்கள் என எல்லோரும் அன்பாகப் பழகுகின்றனர். அதிலும், பிள்ளைகள் ‘மிஸ்’ என்று அழைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தங்களுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று அழைத்த அந்த ஒரு கணம் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. பாசமாக அழைத்த பிள்ளைகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறேன். பிள்ளைகளின் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பிள்ளைகளுக்குப் பாடமும் சொல்லித் தருகிறேன்” என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார் ஜெயா.
பெற்றோருடன் வாழ வேண்டும்
அரசு வேலை கிடைத்ததும், தன் பெற்றோரைச் சந்தித்தார் ஜெயா. தங்களுடன் தங்கிவிடுமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டாலும் பள்ளியிலிருந்து வீடு தொலைவாக இருப்பதால், அவர்களுடன் தங்க முடியவில்லை என்கிறார் ஜெயா.
“என்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டித்தார்களே தவிர, வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறவில்லை. அப்போது பாதிக்கப் பட்ட உறவு, சத்துணவுப் பணிக்குப் பிறகு மீண்டும் மலர்ந்துள்ளது. பெற்றோருடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் மற்றவர்களைப் போல் எனக்கும் உள்ளது. எதிர்காலத்தில் பணி மாற்றம் கிடைத்தால், எனது பெற்றோருடன் தங்குவேன். அதுவரை, எனக்கு அடைக்கலம் கொடுத்த சக நண்பர்களுடன்தான் (திருநங்கைகள்) தங்கி இருப்பேன். உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது ஈடேறியுள்ளது. எனக்கு வழிகாட்டிய தோழி திலகவதி மற்றும் உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய முதல் மாத ஊதியத்தை, நான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வி உபகரணங்கள் வாங்கவும் கீழ்பென்னாத்தூரில் உள்ள பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுக்காகவும் செலவிடுவேன்” என்று சொல்கிறார் ஜெயா.
பணியை உணர்ந்து பணியாற்றுகிறார்
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.வெங்டேசன் கூறும்போது, “திருநங்கை ஜெயாவுக்கு, பணயில் மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான நேரத்துக்குப் பள்ளி வந்துவிடுகிறார். தன்னுடைய பணி என்ன என்பதை உணர்ந்து பணியாற்றுகிறார். சத்துணவு அமைப்பாளர் பணி மூலம், அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்திலும் அந்தஸ்து கிடைத்துள்ளது. மாணவர்களின் பெற்றோரும் வரவேற்கின்றனர்” என்றார்.
மாணவர்களோடு அமர்ந்து பாடம் கற்றுத் தருகிறார் ஜெயா. வேலையும் அங்கீகாரமும் கிடைத்தால் திருநங்கைகளின் வாழ்வும் வசந்தமாகும் என்பதற்கு ஜெயா போன்றவர்கள் உதாரணம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago