குடிநீர் தட்டுப்பாடு, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி, பட்டா வழங்காமல் காலம் தாழ்த்துவது, சீரற்ற சாலைகள், பெண்களுக்குப் பணியிடத்தில் சிக்கல், குடும்ப வன்முறை... இப்படி எங்கெல்லாம் அநீதி தலைதூக்குகிறதோ அங்கே நீதி கேட்டு ஒலிக்கும் சுகந்தியின் குரலைக் கேட்கலாம். முதுகலைப் படிப்புடன் ஆசிரியர் பயிற்சியும் முடித்தவர், ஆசிரியர் பணிக்குப் போகாமல் பொதுச்சேவைக்கு வந்தது அவரே எதிர்பாராதது.
அனைத்திந்திய ஜனநாயகர் மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகப் பணியாற்றிவரும் சுகந்தி, விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். அப்பா, அம்மா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள். அதனால் சுகந்தியும் அரசுப் பள்ளியில் படித்தார். இவர் கல்லூரியில் படித்துமுடித்த போதுதான் அறிவொளி இயக்கம் அறிமுகமானது. அதுதான் சுகந்தியின் பாதையை மாற்றிப்போட்டது. சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கவுசல்யாவைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தவரிடம் பேசினோம்.
ஒளி கூட்டிய அறிவொளி
“அது 1991-ன்னு நினைக்கிறேன். கிராமத்துல இருக்கற எழுதப் படிக்கத் தெரியாதவங்களுக்கு அறிவொளி இயக்கம் சார்பாக இரவு நேர வகுப்புகள் நடக்கும். வகுப்பு நடத்துறவங்களுக்குப் பயிற்சி அளிக்க என்னைக் கூப்பிட்டாங்க. எங்க அப்பாவும் என்னை சந்தோஷமா அனுப்பிவச்சார். வயல் வேலை, தீப்பெட்டி ஒட்டுறது, பட்டாசு தயாரிக்கறதுன்னு பகல் முழுக்க வேலை செஞ்சிட்டு வர்றவங்களுக்கு இரவு ஏழு மணிக்கு மேல வகுப்பு எடுக்கறது ரொம்ப சவாலா இருந்தது. களைச்சுப் போய் வர்றவங்களை உற்சாகப்படுத்தி பாடம் நடத்துவோம். எடுத்ததுமே வளைவு வடிவத்துல இருக்கற அ, ஆ மாதிரியான எழுத்துக்களைச் சொல்லித் தராம, பார்த்ததுமே எளிதில் புரிகிற பட்டா, படி, பினாமி போன்ற வார்த்தைகளைச் சொல்லித் தருவோம். அப்படியே பட்டா, பினாமி என்றால் என்ன என்றும் கிராமத்து மக்களுக்கு விளக்குவோம்” என்று இருபது வருடங்களுக்கு முன்னால் பயணித்தபடியே சொல்கிறார் சுகந்தி.
பிரம்மாண்ட பெண்ணுலகம்
சில வருடங்களில் அறிவொளி திட்டம் கைவிடப்பட்டது. கிராம மக்களுக்கு அறிவுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் நிறைவு கண்ட சுகந்திக்கு, தனியார் பள்ளி வேலைக்குச் செல்வதில் உடன்பாடு இல்லை. அறிவொளி இயக்கப் பணிகளில் இருந்தபோது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தோடு அறிமுகம் ஏற்பட்டது. அதன் முதல் மாநில தலைவர் கே.பி. ஜானகி அம்மாள் பங்கேற்ற சாத்தூர் கூட்டத்தில் சுகந்தி கலந்துகொண்டார். அங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்கள் சுகந்தியின் அரசியல் பார்வையை விசாலமாக்கின. அதுவரை கிராமப்புறப் பெண்கள், அவர்கள் படும் துயரங்களை மட்டுமே பார்த்திருந்தவருக்கு அவற்றைத் தாண்டியும் உலகம் மிகப் பெரியது என்பது புரிந்தது. இவ்வளவு உழைக்கும் பெண்கள் இருக்கிறார்களா, அவர்களுக்கு இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றனவா என்று வியந்துபோனார். உடனே தன்னையும் இயக்கச் செயல்பாடுகளில் இணைத்துக்கொண்டார். ஆனால், அவரது அந்த நடவடிக்கைக்கு வீட்டில் வரவேற்பு இல்லை.
“நான் திருமணத்துக்கு முன்பு இது போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடுவது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிடிக்கவில்லை. பேராசிரியர் மாடசாமி அய்யா போன்றவர்கள் வந்து எடுத்துச் சொன்னதும் அப்பா சம்மதித்தார். பொது வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு அதிகாலை வீடு திரும்பும் போது கிராமத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். அதை அப்பாதான் தயங்கியபடியே என்னிடம் சொல்வார். என்ன செய்வது? பொது வாழ்க்கைக்கு வரும்போது இது போன்ற அவதூறுகளையும் ஏச்சுப் பேச்சுக்களையும் சகித்துக்கொள்ளத்தானே வேண்டும்?” என்கிற சுகந்தியின் கேள்வி, அவர் கடந்துவந்த அவமானங்களைப் பிரதிபலிக்கிறது.
போராட்டமே வாழ்க்கை
13 வருட இயக்கப் பணி சுகந்தியை விருதுநகர் மாவட்டச் செயலாளராக உயர்த்தியது. 1995-ம் ஆண்டு வாக்கில் 13 வயதுச் சிறுமியை மூன்று பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்ற வழக்கை இயக்கம் சார்பில் நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடுகிறார் இவர்.
“குற்றவாளிகள் மூன்று பேரும் 13 முறை வாய்தா வாங்கினாங்க. நாங்க சிறப்பு அரசு வழக்கறிஞர் வேணும்னு கோரிக்கை மனு போட்டோம். கடைசியில் அந்த மூன்று பேருக்கும் மதுரை உயர் நீதிமன்றத்துல தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால பாலியல் வன்முறை வழக்கில் இப்படியொரு தீர்ப்பு மைல் கல்லா அமைஞ்சது” என்று சொல்லும் சுகந்தி, பெண்களுக்குத் தொடர்ந்து அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைகளைத் தன் இயக்கத் தொண்டர்கள் மூலமாகச் செய்துவருகிறார்.
இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு மனித மனங்களில் வன்முறையும் வளர்ந்திருக்கிறது என்கிறார் அவர். இன்று பெண்கள் படித்து, வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்தாலும் தங்களது ஏ.டி.எம். அட்டையைக் கணவரிடம் கொடுத்துவிட்டு வாழும் அவலநிலையும் நீடிக்கத்தான் செய்கிறது என்றும் சுகந்தி குறிப்பிடுகிறார்.
“கிராமப்புறங்களில்கூடப் பெண்கள் ஓரளவு தங்களுக்கு நேரும் அவலங்களைத் துணிந்து வெளியே சொல்கிறார்கள். ஆனால் நகரங்களில், சுற்றியிருக்கும் நாலு பேருக்குப் பயந்து பெண்கள் வெளியே வருவதே இல்லை. இன்று நம் சமூகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சினை டாஸ்மாக் கடைகள்தான். தினமும் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் குடிப்பதாகச் சொல்கிறார்கள். தமிழகத்தில் எட்டாயிரத்துக்கு மேல் மதுக்கடைகள் இருக்கின்றன. எங்களுடைய மற்ற எல்லாப் போராட்டங்களையும்விட டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்துவருகிறது” என்கிறார் சுகந்தி.
தொடரும் அச்சுறுத்தல்
பெண்களுக்குப் பணியிடப் பாதுகாப்பை வலியுறுத்தியும் இவர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். முறையான கழிப்பிடங்கள் இல்லாமல் நாள் முழுவதும் பெண்கள் இயற்கை உபாதையை அடக்கிவைத்திருக்கும் அவலம் குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார்கள். இதுவரை 100-க்கும் மேற்பட்ட மகளிர் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தியிருக்கிறார்கள். ‘என் தேர்வு என் உரிமை’ என்ற கருத்தாக்கத்துடன் இவர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் கல்வி, வேலை, வாழ்க்கை என ஒவ்வொன்றிலும் முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்திவருகிறார்கள்.
“வன்முறையின் வடிவங்கள் இன்று மாறியிருக்கின்றனவே தவிர அவை குறையவே இல்லை. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் அத்துமீறல்களும் துன்புறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அதற்கேற்ப சட்ட வரைவில் திருத்தங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவற்றைச் செயல்படுத்தும் இடத்தில் இருக்கிறவர்களுக்கே அது குறித்துப் போதிய புரிதல் இருப்பதில்லை. காஞ்சிபுரம் அருகே ஒரு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டார்கள். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அதைப் பதிவு செய்வதற்குள் படாதபாடு பட்டோம். இதில் படிப்பறிவில்லாத எளிய மக்கள் எப்படிப் புகார் கொடுக்க முன்வருவார்கள்?” என்று கேட்கிற சுகந்தி, சமீபமாக அதிகரித்துவரும் சாதிய ஆணவக் கொலைகளையும் சாடுகிறார். சாதியக் கட்டமைப்பும் சாதிய அரசியலும் பள்ளி மாணவர்களிடம்கூட சாதி குறித்த ஈடுபாட்டுணர்வையும் ஆதிக்க உணர்வையும் ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் சொல்கிறார்.
“இன்று பள்ளி மாணவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகக் கைகளில் பல நிற கயிறுகளைக் கட்டிக்கொண்டு செல்கின்றனர். மாணவிகளோ நெற்றியில் வைக்கும் பொட்டின் மூலம் தங்கள் சாதியை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் எப்படி நாளை இந்தச் சமூகத்தை நல்லவிதமாகக் கட்டமைப்பார்கள்? கல்வித் திட்டத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் பாலின சமத்துவப் பயிற்சி, ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்று அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்.
மாற்றத்துக்குத் தயாராவோம்
“சாதி ஆணவக் கொலைகளில் தொடங்கி, காதலிக்க மறுத்த பெண்ணை நடு ரோட்டில் வெட்டிச் சாய்ப்பதுவரை செய்கிற இளைஞர்கள் அனைவரும் படித்தவர்கள்தான்.
பண்பைக் கற்றுத் தராத படிப்பால் என்ன மாற்றத்தை உருவாக்கிவிட முடியும்? ‘பாலு பந்து வைத்து விளையாடினான், அமலா பொம்மை வைத்து விளையாடினாள்’ என்று ஒன்றாம் வகுப்பில் படிக்கிற சிறுவன், தன் வீட்டிலும் சமூகத்திலும் பெண் தனக்கு அடங்கி நடக்க வேண்டியவள், வீட்டு வேலைகளைச் செய்ய மட்டுமே பிறந்தவள் என்ற நினைப்புடன்தான் பெண்களை நடத்துவான்.
பாலின சமத்துவத்துவமும் அரசியல் தெளிவும் இருந்தால் பெண்கள் முன்னேறத் தடையே இல்லை. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஓடி ஒளியாமல் எதிர்த்து நின்றால்தான் வெற்றி கிடைக்கும்” என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் சுகந்தி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
45 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago