பறத்தல் பறவைகளின் சுதந்திரம். தங்களின் வாழ்க்கையை விரும்பியபடி வடிவமைத்துக்கொள்வதை மனிதனின் அடிப்படை சுதந்திரமாக வரையறுத்துள்ளது இந்திய அரசியல் சாசனம். ஆனால், நடைமுறையில் தனி மனித சுதந்திரத்துக்கு எவ்வளவோ தடைகற்களை இந்தச் சமூகம் போட்டுவைத்திருக்கின்றது. அதிலும் பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக வீசப்படும் சொல்லம்புகளுக்கு இங்கே பஞ்சமில்லை. தன்பாலின ஈர்ப்புள்ள இரு பெண்களின் விருப்பம், அதற்கு அந்தப் பெண்களின் பெற்றோர்களிடையே எழும் எதிர்ப்பு, இரு பெண்களின் நாட்டியத் திறமை, பெற்றோர்களின் புரிதல் எனப் பல விஷயங்களையும் ஒரு நடன அரங்கேற்றத்தின் வழியாக நமக்கு உணர்த்துகிறது ‘மகிழினி’. ‘சரிகமா’ வெளியிட்டிருக்கும் இந்தக் காணொலிப் பாடல் ஒரு குறும்படத்தின் நேர்த்தியோடு நிதர்சனத்தைப் புரியவைக்கிறது.
96 திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கௌரியும் நடனக் கலைஞர் அனகாவும் இந்தக் காணொலியில் முதன்மைப் பாத்திரங்களாகத் தோன்றுகின்றனர். பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகை இருவரும் பரஸ்பரம் கண்டுணர்வதை மிகை உணர்வு, மிகை நடிப்பு இல்லாமல் மிகவும் தன்னியல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் கௌரியும் அனகாவும்.
‘மகிழினி’ இசைப் பாடலை மனத்தால் பார்க்கும் எவரும் விரும்பும் வண்ணம் நேர்த்தியாக இயக்கியிருக்கும் இயக்குநர் வி.ஜி. பாலசுப்பிரமணியன், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி, இசையமைத்திருக்கும் கோவிந்த் வசந்தா, நடன இயக்குநர் விஷ்வா, கேட்பவர்களின் மனத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் வகையில் சிலிர்க்கவைக்கும் குரலில் பாடியிருக்கும் கீர்த்தனா வைத்தியநாதன் என எல்லோரின் ஒருங்கிணைப்பில் இந்தப் பாடல் 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
“நான் இயக்கிய ‘கம்பளிப் பூச்சி’, ஏறக்குறைய 800-க்கும் அதிகமான படங்களுடன் போட்டியிட்டுச் சிறந்த குறும்படமாகத் தேர்வானது. அதில் இந்துஜா நடித்திருந்தார். அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘டிரென்டிங் எண்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஒரு மியூசிக் ஆல்பம் செய்ய வேண்டும் என்று என்னிடம் பேசினர். அவர்களே சொன்னதுதான் இந்த கான்செப்ட். தன்பால் ஈர்ப்புள்ள பெண்களின் போராட்டங்களை நான் தெரிந்துகொண்ட பிறகுதான் இதற்கான கதையை எழுதி இயக்கினேன். இந்தக் காணொலிப் பாடலில் நடிப்பதற்கு ஏறக்குறைய 20 நடிகைகளிடம் இந்தக் கதையை கூறியிருப்பேன். ஒருவரும் சம்மதிக்கவில்லை. ஆனால், அனகாவும் கௌரியும் முதல் முறை கதையைக் கேட்டவுடனேயே எந்தவிதமான தயக்கமும் காட்டாமல் நடிக்க முன்வந்தனர். கதையின் உயிரோட்டமாக நடனம் இருப்பதைச் சொன்னவுடன், ஹம்மிங்கிலேயே ஒரு டியூனை எனக்குப் போட்டுக் காட்டினார் கோவிந்த் வசந்தா. அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. இரு பெண்களின் உணர்வுகளையும் போற்றும் வண்ணம் “ஆடு அழகே ஆடு அழகே உலகங்கள் உனக்காய் பாரடி.. காலம் நம்மை ஒன்று சேர்த்ததே அந்த அழகு நொடி.. எந்தன் வாழ்க்கை முழுமையடைந்ததடி!” எனப் பரவசமான வார்த்தைகளால் பாட்டை வடித்துக் கொடுத்தார் மதன் கார்க்கி. இந்தப் பாடலைப் பாடியிருக்கும் கீர்த்தனாவின் குரல் அவ்வளவு பாந்தமாக இந்தப் பாடலுக்குப் பொருந்திப்போனது. இந்தக் காணொலி, வெறும் பாடலாகச் சுருங்கிப் போகாமல் அதன் கருத்தைப் பலர் உள்வாங்கி, ஆதரித்துப் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் இயக்குநர் பாலசுப்பிரமணியன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago