(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
கர்நாடகா... உலகில் எந்த மூலையில் இருந்து வந்தவரையும், சொந்தப் பிள்ளையாய் எண்ணி வாஞ்சையோடு வாரி நெஞ்சில் அணைத்துக்கொள்ளும் மாநிலம்! கன்னடம், தமிழ், தெலுங்கு, உருது, குடவா, துளு, கொங்கணி, மராட்டியம் எனப் பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் ஒரு மினி இந்தியா. அன்பான மனிதர்கள், தொன்மையான வரலாறு, புதுமையான கலாச்சாரம், வித்தியாசமான பழக்க வழக்கங்களுடன் விதவிதமான இயற்கைக் காட்சிகளால் விரிந்து கிடக்கிறது கர்நாடக மாநிலம்.
நான் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கர்நாடகாதான் எனக்குத் தாய் வீடு. நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடந்த எனக்குப் புது அடையாளத்தைக் கொடுத்தது இந்த மண்தான். தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து வயநாட்டின் வளைவு நெளிவான சாலைகளின் வழியாகக் காவிரி தேசத்தில் நுழைவது, தாய் வீட்டுக்கு வருவது போல் இருக்கிறது!
புகையிலை மனிதர்களுக்கும் மண்ணுக்கும் கேடு
அடர் வனம், பறவைகளின் ஓயாத ரீங்காரம், விலங்கினங்கள் எழுப்பும் வினோத சப்தம், ஆங்காங்கே வலம்வரும் யானைக்கூட்டம் என மேற்குத் தொடர்ச்சி மலையில் பயணிப்பது த்ரில்லிங் அனுபவம். ‘யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் எங்கும் பைக்கை நிறுத்தக் கூடாது. எக்காரணம் கொண்டும் போட்டோ எடுக்கக் கூடாது’ என எச்சரித்து அனுப்பினார் வனத்துறை ஊழியர். காட்டின் தனிமையையும், ஆன்மாவின் அமைதியையும் தரிசித்துக் கொண்டே பயணித்தேன்.
மடிகேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது ஹூன்சூர் என்ற கிராமத்தில் புகையிலை விளைச்சல் அமோகமாக இருந்தது. பெண்களும், குழந்தைத் தொழிலாளர்களும் புகையிலை அறுவடையில் மும்முரமாக இருந்தனர். ‘தங்க இலை’ என அழைக்கப்படும் புகையிலை இங்குதான் அதிகமாக விளைகிறது.
“ஒரு பக்கம் ‘புகையிலை உடல் நலத்துக்குக் கேடு’ என அறிவுரை கூறும் அரசாங்கம், மறுபக்கம் மானியம் கொடுத்து புகையிலை உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இரவு பகலாகக் கஷ்டப்பட்டு, அறுவடை செய்து பணம் வாங்குவதற்குள் விவசாயிகளுக்குப் புற்றுநோய், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வந்துவிடுகின்றன. இதனால் சீக்கிரமாகவே அவர்கள் இறந்துவிடுகிறார்கள்” என ஆதங்கப்பட்டார் ஒரு இயற்கை விவசாயி.
குடகு மலை காற்றிலே!
மாலையில் சூரியன் மறையும் பொழுதை குடகின் தலைநகரமான மடிகேரியில் உள்ள ‘ராஜாவின் இருக்கை’யில் அமர்ந்து ரசித்தேன். பிறகு குடகில் பிரபலமான உணவான புட்டு, பன்றிக்கறிக் குழம்பை ருசித்துக்கொண்டே உள்ளூர் நண்பர்களோடு உரையாடினேன்.
குடகர்களும், பழங்குடிகளும் அதிளவில் வசித்த குடகை ஆங்கிலேயர்கள் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ எனக் கொண்டாடி னார்கள். மூலிகைச் சாறு ததும்பிய காவிரி நீரைக் குடித்து விளையும் மிளகு, ஏலக்காய், காபி, முந்திரி, தேங்காய் மற்றும் நறுமணப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்கள். திராவிட மொழிகளில் ஒன்றான குடவா என்ற மொழியைக் குடகர்கள் பேசுகிறார்கள். தமிழும் கன்னடமும் தெரிந்தவர்கள் குடவா மொழியை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
பனி நிறைந்த அதிகாலை வேளையில் மடிக்கேரியில் இருந்து நாகர்ஹொளே வழியாக மைசூரு நோக்கிப் புறப்பட்டேன். மேக மூட்டமான வானம், சாலையோரமெங்கும் வனம், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மலைச் சாலையில் பயணிப்பது சற்றுச் சவாலானதாக இருந்தது. மைசூரு மகாராஜா காலத்தில் முக்கியமான வேட்டைக் களமாக இருந்த நாகர்ஹொளே தற்போது புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருமுறை நாகர்ஹொளேவுக்குப் பைக்கில் சென்றிருப்பதால் அதன் அச்சம் கலந்த அழகை ரசிக்க ஆர்வமாக இருந்தேன். நாகர்ஹொளேவை அடைந்தபோது, ‘புலிகளின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களை அனுமதிப்பதில்லை’ என வனத்துறை அனுமதி மறுத்தது.
நெல்மணியும் உயிரும் ஒன்று
பெரும் ஏமாற்றத்துடன் வேறு வழியாக, இந்தியாவின் சுத்தமான நகரங்களுக்குள் ஒன்றான மைசூருவுக்குள் நுழைந்தேன். தொன்மையான நகரான மைசூருவில் பிரபலமான ‘ஹனுமந்து பலவ்’ ஹோட்டலில் மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, பெங்களூரு நோக்கிப் புறப்பட்டேன். ‘கரும்பு நகரம்’ என அழைக்கப்படும் மண்டியாவை நெருங்கிய போது, தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒருவரின் உடலை ரோட்டில் வைத்து விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
“கர்நாடகாவில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். கரும்பு நகரமான மண்டியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டு போயுள்ளனர். நாட்டுக்கே சோறுபோடும் விவசாயிகள் மேல் இந்த வங்கியும், அரசும் கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா?” எனச் சீறிக் கொண்டிருந்தார் ஒரு காம்ரேட்.
விவசாயிகளின் தீராத சோகங்களை நினைத்துக்கொண்டே பயணித்ததால் மத்தூர் வடையை ருசிக்கவும், ஸ்ரீரங்கப்பட்னா மரப்பாச்சி பொம்மையை ரசிக்கவும் மறந்து போனேன். மனதுக்குள் பல கேள்விகளோடு வயல்களை அழித்துக் கட்டப்பட்டிருக்கும் பெங்களூருவுக்குள் நுழைந்தேன்.
ஞானம் தரும் பயணம்
இன்று கின்னஸ் சாதனையை நோக்கி நீளும் இந்தப் பயணம் கருவான இடம் பெங்களூரு. அடுத்தடுத்த நகரங்கள் வழியாகத் திட்டமிட்ட நாட்களில் இலக்கை அடைவது பற்றி நண்பர்களுடன் சேர்ந்து வியூகங்கள் அமைத்தேன். மீண்டும் வழக்கம்போல அதிகாலையிலே கோலார், தும்கூர், ஹாசன் வழியாக சிக்கமகளூர் நோக்கிப் புறப்பட்டேன். ஏற்கெனவே நன்கு அறிமுகமான சாலை என்பதால் பயணம் எளிதாக இருந்தது. உயரமான மலைகளும், ரம்மியமான காபித் தோட்டங்களும், பச்சைப் பள்ளத்தாக்குகளும் நிறைந்த சிக்மகளூருவை மாலையில் அடைந்தபோது உற்சாகமாக இருந்தது. என் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக உடுப்பி ஸ்பெஷல் மசாலா தோசையும், சிக்மகளூர் ஸ்பெஷல் காபியும் அருந்தினேன்.
மறுநாள் விடியலில் குதிரேமூக், மணிப்பால், உடுப்பி வழியாக மங்களூரு நோக்கி மைக்கியை விரட்டினேன். குறிஞ்சியும், முல்லையும், நெய்தலும் கலந்த பரப்பில் பயணிப்பது மனதுக்குப் புத்துணர்வு அளித்தது. துளு, கொங்கணி, மொழி பேசும் மங்களூருவைக் கடந்து ஷிமோகா மாவட்டத்துக்குள் நுழைந்தேன். தென்னிந்தியாவில் அதிக அளவில் மழை பொழியும் ‘ஆகூம்பே’ என்ற அழகிய கிராமத்தைப் பார்த்தேன். திசையெங்கும் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆகூம்பேவில் அசலான கன்னட கிராமத்தின் முகத்தைப் பார்க்க முடிந்தது. அங்கிருந்து கொல்லூர் மூகாம்பிகை, முருதேஷ்வர் கோயில்களைத் தரிசித்துவிட்டு, உலகப் புகழ்பெற்ற புராதான நகரங்களான பேளூர், ஹளபேடு, ஹம்பி, அய்ஹொலே, பட்டதக்கல், பாதாமி உள்ளிட்ட நகரங்களை நோக்கிப் படையெடுத்தேன்.
மறுநாள் சித்ரதுர்கா, பெலகாவி, பெல்லாரி, பீஜாப்பூர் வழியாக பீதர் நோக்கிப் பறந்தேன். மராட்டியர் அதிகமாக வாழும் பெலகாவியில் சென்றுகொண்டிருந்தபோது உத்தர் சிங் என்ற 60 வயது முதியவரைப் பார்த்தேன். தனது பழைய லூனா பைக்கில் இந்தியாவில் உள்ள குருத்துவாராக்களை எல்லாம் தரிசிக்கச் சென்றுகொண்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இவர், பெங்களூரு நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். தினம் ஓர் ஊரில் விடியல். ஓர் ஊரில் அஸ்தமனம். வழியெங்கும் புதுப்புது மனிதர்கள். எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தாலும் கற்க முடியாத அனுபவப் பாடங்கள் என வாழ்க்கை பேரானந்தமாக இருப்பதாகச் சிலாகித்தார்.
ஆம், பயணம் தரும் ஞானத்தை எத்தனை கோடிகள் கொடுத்தாலும் வாங்க முடியாது!
- பயணம் தொடரும்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago