பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவிகளின் தற்கொலை பலரையும் உலுக்கியிருக்கிறது. இப்படியொரு சூழலில், ‘தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021’ தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டது.
இது குழந்தைகள் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, உரிமைகள் ஆகியவற்றை உறுதிசெய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது அவர்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியது என்பதால் அது குறித்த கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
குழந்தைகளைப் பாலியல் தாக்கு தலில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 ஏன் பரவலாக்கப்படவில்லை, சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன்கீழ் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களின் நிலையென்ன, கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்வி களை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
கல்வி நிலையங்களில் நடக்கும் கொடுமை
குழந்தைகளைப் பாலியல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற் காகவே ஏற்படுத்தப்பட்ட போக்சோ சட்டம், 2012, பாலியல் வழக்குகளில் குழந்தைகளைக் காவல்துறையும் நீதிமன்றமும் எவ்வாறு கையாள வேண்டும், மருத்துவப் பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை மிகுந்த அக்கறையோடு உருவாக்கித் தந்துள்ளது. இச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும் அது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. பாலியல் வன்முறைகளை மான, அவமானமாகக் கருதும் போக்கு, அச்சம், காவல்துறையினரின் அணுகுமுறை, நீதிமன்றங்களின் இழுத்தடிப்பு போன்ற காரணங்களால் பெரும்பான்மையான வழக்குகள் பதியப்படுவதில்லை. இந்திய தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2020-ம் ஆண்டுக்கான தரவுகளின்படி போக்சோ சட்டத்தின்கீழ் 2019-ம் ஆண்டு பதிவான குற்றங்கள் 28,327. இதில் பாதிக்கப்பட்டவர்களில் 28,058 பேர் பெண் குழந்தைகள். தமிழ்நாட்டின் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு 2,358 வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள், பெரியவர்கள் என்கிற பாகுபாடின்றி வீட்டுக்குள்ளும், கல்வி நிறுவனங்களிலும், பொதுவெளியிலும் பாலியல் துன்புறுத்தல்கள், வல்லுறவுகள் நடைபெறுகின்றன. இருப்பினும் குழந்தைகளின் மேம்பாட்டிற்கான கல்வி நிறுவனங் களில் இந்தப் பிரச்சினைகள் நடைபெறும்போது அதை எளிதில் கடந்துவிட முடிவதில்லை. கடந்துவிடவும் கூடாது.
தேவை விழிப்புணர்வு
அரசின் பல்வேறு சட்டங்கள் மக்களைச் சென்றடையாததற்குக் காரணம் விழிப்புணர்வின்மையே. எவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல் என்பதிலேயே இன்னும் குழப்பம் நீடிக்கிறது. இச்சூழலில் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்கிற தெளிவு, புகார் அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள், பாதிக்கப்பட்டவரின் தேவை, அவருக்கான மருத்துவ உடல் நல உதவி, பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்?
1997-ம் ஆண்டு விசாகா (எ) ராஜஸ்தான் மாநில வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டரீதீயிலான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு பணி யிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி செய்தல்) சட்டம் 2013 பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்பதை விளக்கியுள்ளது.
l உடல் உறவு அல்லது அதற்கான முயற்சிகள்.
l பாலியல் சலுகைகளுக்கான வேண்டுகோள் அல்லது கோரிக்கை.
l பாலியல் பொருள்படும் கருத்து கள், விமர்சனங்கள், நகைச் சுவைகள், உடல் குறித்த, தோற்றம் குறித்த கருத்துகள்.
l ஆபாசப் படங்களைக் காட்டுதல்.
l விருப்பத்திற்கு எதிரான உடல் சார்ந்த, வாய்மொழி அல்லது மொழியற்ற பாலியல் நடத்தை.
l இவை மட்டுமின்றி, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒரு செயல் நடந்தி ருப்பதாகத் தோன்று மெனில் அல்லது நடந்திருப்பின் அதன் சூழல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
l மறைமுகமாகவோ, வெளிப் படையாகவோ சலுகையுடன் நடத்தப்படுவார் என வாக்குறுதி அளிப்பது. பாலியல் செயல்களுக்கு உடன்படு வதற்குக் கைமாறாக ஏதாவது தருவதாக வாக்குறுதி அளிப்பது.
l மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ அச்சுறுத்துவது அல்லது தீங்கு விளைவிப்பதாகக் கூறுவது.
l தற்போதைய அல்லது எதிர்கால நிலை குறித்து மறைமுகமாக அல்லது நேரடியாக அச்சுறுத்துதல்.
l கற்றல் சூழலில் அச்சுறுத்தும் வன் முறைச் சூழலை உருவாக்குவது.
l ஒரு நபரின் உடல் நலனை, மாண்பை, உடல்சார் நேர்மையை அவமதிக்கும் நடத்தைகள்.
மேலும், போக்சோ சட்டம் பிரிவு 11,12,13 மற்றும் 14 பாலியல்ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசிகளில் ஆபாசமாகப் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, ஆபாசப் படங்கள் எடுப்பது, தயாரிப்பது, பிறருக்குப் பகிர்வது, விற்பது போன்றவையும் தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறுகிறது.
எளிதில் அணுகக்கூடிய அமைப்புகள்
பெரும்பான்மையான வன்முறை நிகழ்வுகளில் எங்கே சென்று புகார் அளிப்பது என்கிற சிக்கலே குற்றங்கள் பதிவு செய்யப்படாமைக்கான முக்கியக் காரணம். இதைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் கல்வி கற்கும் நிறுவனங்களிலேயே தங்களின் முறையீடுகளைப் புகார்களாக அளிக்க ஒவ்வொரு கல்வி நிறுவனமும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ளது போன்ற ஓர் உள்ளக முறையீட்டுக் குழுவை அமைக்க வேண்டும். குழுவின் உறுப்பினர்களுக்குத் தனியான பயிற்சியும், கல்வி நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வுப் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
மாவட்டம்தோறும் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுடன் கல்வி நிறுவனங்களின் உள்ளக முறையீட்டுக் குழுக்கள் இணைக்கப்பட வேண்டும். குழந்தைகள் நலக் குழு அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பரவலாக்கப்பட வேண்டும். பதிவுசெய்யப்பட்ட புகார்கள், முடித்து வைக்கப்பட்டு விசாரணை, அதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம், பாலியல் துன்புறுத்தலின் தன்மை, தண்டனை, நிவாரணம் குறித்து ஒவ்வொரு காலாண்டும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய
l பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகம், மாநில அலுவலகம், சமூக நலத்துறை, கல்வித் துறை ஆகியவற்றுக் கிடையே குழந்தைகளின் பாதுகாப்புக்கான வலைத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
l புகார்களைக் கையாள்வதற்கு சரியான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். வர்மா குழு பரிந்துரைத்தபடி பாடத் திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்பட வேண்டும்.
l குழந்தைகளின் சுய பாதுகாப்புக்கான பயிற்சி கள் அளிக்கப்பட வேண்டும்.
l பள்ளிக் கல்வித் துறை இணையவழி வகுப்பு களுக்கு வழங்கப்பட்டது போன்ற வழிகாட்டு நெறிமுறை களை நேரடி வகுப்புகளுக்கும் வழங்க வேண்டும்.
l மாணவ - மாணவி யருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள், பள்ளிகள்தோறும் விழிப்புணர்வுப் பலகைகள், பள்ளிகளுக்குள்ளும், வெளியிலும் தொடர்பு கொள் வதற்கான தொலைபேசி எண்கள் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும். மாணவ – மாணவியருக்கான கையேடுகளில் அவை சேர்க்கப்பட வேண்டும்.
l மாணவ - மாணவியருக்கு ஆற்றுப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
l ஆசிரியர்களுக்குப் பணிசார் அறநெறி, மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமிடையே புரிதல் ஏற்படுத்த ஆலோசனைகள், ஆசிரியர்களுக்கான மனநல ஆலோ சனைகள் திட்டமிட்டு ஒவ்வொரு அரையாண்டும் நடத்தப்பட வேண்டும்.
l பள்ளிகள் தங்களது பள்ளிகளின் கௌரவம், ஆசிரியரின் எதிர்காலம் என்பதைவிடக் குழந்தைகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தர வேண்டும். குற்றங்கள் நிகழ்ந்தால் குற்றவாளிகளைப் பணிநீக்கம் செய்வதோடு, அவர்மீது காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
l பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள் - பிள்ளை களிடையே பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கப் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
l சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே காவல்துறையின் கடமை. காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாள போக்சோ சட்டத்தின் வழிகாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். மீறும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
l ஊடகங்களும் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவது குற்றம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை மான அவமானமாகக் கருதும் சமூகப்பார்வை மாற ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.
l குடும்ப நல நீதிமன்றங்கள் போன்று குழந்தைகள் நல நீதிமன்றங்கள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கைச் சூழலை அளிப்பது அரசின் கடமை. குழந்தை களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சங்களுக்குக் கொள்கையில் முக்கியத்துவம் தந்தால் மட்டுமே அது அனைவருக்குமான அரசாக இருக்கும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: mrs.dhanaseeli@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago