(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
இன்று விருட்சமாய் விஸ்வரூபம் எடுத்திருக்கும் பல புரட்சிகளுக்கான விதைகள் எல்லாம் பயணத்தில்தான் போடப்பட்டன. உலகின் மூலை முடுக்கெல்லாம் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள் பயணத்தில்தான் தொடங்கின. புதிய சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கலாச்சாரம், புதுப்புது பாடங்கள் என யாவும் பயணத்தின் படிக்கட்டுகளில் மலர்ந்தவை.
போராட்டத்தின் விளைநிலம்!
அரை நூற்றாண்டு போராட்டப் பயணம்தான் 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தெலங்கானா எனும் புதிய மாநிலத்தைப் பிரசவித்தது. அடையாள அழிப்பு, அங்கீகார மறுப்பு, தொடர் புறக்கணிப்பு, விடாத மறுதலிப்பு, ஆட்சியாளர்களின் பாராமுகத்தால் தனி மாநில கோஷம் இன்னும் தீவிரமானது. எளிய மனிதர்களின் கண்ணீராலும், செந்நீராலும், எண்ணற்ற தியாகங்களாலும் இறுதியில் தெலங்கானா தேசம் கட்டி எழுப்பப்பட்டது. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானா, இன்று எல்லாத் துறைகளிலும் போட்டிப்போட்டு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் இருந்து தெலங்கானா நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கையில் கானல் நதி போல அம்மாநிலத்தின் போராட்ட வரலாறு மனதில் ஓடியது. சூரியன் மேற்கில் மலைகளுக்கு இடையே மறையும் வேளையில் மேதக் நகரை நெருங்கினேன். ‘தெலங்கானா மாநிலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற அறிவிப்பு பலகையை பார்த்ததும் மைக்கியை ஓரங்கட்டினேன். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி எனது பையில் போட்டுக்கொண்டேன். பெங்களூருவில் உள்ள எனது அறையில் இந்த மண்ணைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் தெலங்கானா போராட்டத்தின் விளைநிலம்!
பாரம்பரிய உணவின் மகத்துவம்
போக்குவரத்து நெரிசலற்ற சீரான சாலை, இருமருங்கிலும் நிழல் தரும் மரங்கள், இதமான தென்றல், வழியெங்கும் டாட்டா காட்டும் பள்ளிக்கூட சிறுவர்கள் என மிதமான வேகத்தில் தெலங்கானாவில் பறந்தது சுகமாக இருந்தது. மேதக் நகரை அடைந்ததும் ஒரு தள்ளுவண்டி கடையில் கேழ்வரகு கூழ் வாங்கி குடித்தேன். மோரும், குண்டூர் குடைமிளகாயும் சரிவிகிதத்தில் கூழில் கலக்கப்பட்டிருந்தன. இதற்கு தொட்டுக்கொள்ள இனிப்பு கலந்த மாங்காய் கீற்றும், உப்பு கலந்த நெல்லிக்காயும் கொடுத்தார்கள். இந்த காம்பினேஷன் பக்கத்தில் பீட்சாவும், பர்க்கரும் நெருங்கவே முடியாது. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு. விலையும் பத்தே ரூபாய்தான்.
இருள் சூளும் வேளையில் அதிலாபாத் நோக்கி புறப்பட்டேன். நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் நிறைந்திருக்கும் அழகான இந்த ஊர் மெல்ல மெல்ல ‘வளர்ச்சி’யை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. பெருநிறுவனங்களின் உயர்கட்டிடங்கள், தொழிற்சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஆந்திராவுக்குப் போட்டியாக வளர வேண்டும் என்ற நோக்கில் வளர்ச்சிப் பணிகள் சூடுபிடித்திருப்பதாக அதிலாபாத் ஹோட்டல் மேனேஜர் கூறினார். மிகவும் களைப்பாக இருந்ததால் அன்றிரவு அங்கேயே உண்டு, உறங்கினேன்.
சீமை மிளகாயும், சினிமா மோகமும்
அதிகாலை வேளையில் அதிலாபாத்தில் இருந்து வாராங்கல் நோக்கி புறப்பட்டேன். சில்லென இளங்காற்று வீசும் பொழுதில் பயணிக்கும்போது உடல் வலி, களைப்பெல்லாம் பனி போல் பஞ்சாக பறந்து போனது. ஏரிக் கரையோரங்களில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ஆண்கள் கூட்டம் கூட்டமாக பனைமரக் கள்ளை பருகிக் கொண்டிருந்தனர். பெண்களும் மறைவான இடங்களில் அமர்ந்தவாறு கள் குடிப்பதைப் பார்க்க முடிந்தது. ‘ஆண்கள் குடிக்கும் கள் வேறு. இது வேறு. இதைக் குடித்தால் போதை ஏறாது. குளிர்ச்சிக்காகவும் உடல் தெம்புக்காகவும் தான் குடிக்கிறேன்’ என ஒரு பாட்டி வெள்ளந்தியாகச் சொல்லி சிரித்தார்.
நெல் வயல்கள் நிறைந்த வாராங்கலைக் கடந்து நல்கொண்டா நோக்கிப் பறந்தேன். தகிக்கும் வெயிலில் ஒரு சில கிலோமீட்டரைக் கடந்த போது, என்னுடைய மைக்கி வெற்றிகரமாக 40 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்திருப்பதாகக் காட்டியது. ‘வெல்டன் மைக்கி’ என தட்டிக்கொடுத்துவிட்டு சாலையோர மிளகாய்த் தோட்டத்தைப் பார்த்தேன். அங்கு வானத்தைப் பார்த்தவாறு காய்த்துக் குலுங்கின மிளகாய்ச் செடிகள். “இது மிகவும் காரமான மிளகாய். 12 சாதாரண மிளகாயின் காரத்தைவிட, இந்த சிறு மிளகாய் அதிக காரமாக இருக்கும். புகையிலை, பீடி, சிகரெட் குடித்து நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் சமையலில் இந்த மிளகாயை பயன்படுத்தினால் நோய் மட்டுப்படும்னு சொல்லுவாங்க. இதன் இலைகளைக்கூட சமைத்துச் சாப்பிடலாம். இந்த மிளகாய் செடியை நாங்கள் ‘சீமை மிளகாய்’ என்கிறோம்” என அங்கு களைவெட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி விளக்கினார்.
நல்கொண்டாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணிக்கையில் இந்தியாவின் 2-வது நீளமான நதியான கோதாவரியைக் கடந்தேன். கோடை காலம் நெருங்கும் வேளையிலும் கோதாவரி மிகவும் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து பாய்ந்துகொண்டிருந்தது. கோதாவரி நதியின் குறுக்கே மிக நீளமாக கட்டப்பட்டிருந்த பத்ராசலம் பாலத்தைக் கடக்கையில் காற்று மிக வேகமாக வீசியது. அந்தரத்தில் தொங்குவதைப் போல காட்சியளிக்கும் இந்தப் பாலத்தில் ஆக்ஸலேட்டரை முறுக்கி 100 கிமீ வேகத்தில் மின்னல் போல பறந்தேன். அடுத்த எல்லையை அடையும் வரை திக்.. திக்கென சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது.
நாகர்ஜூனாசாகர் அணை, சூர்யா பேட்டை ஆகிய நகரங்களைக் கடந்து பொழுது சாயும் வேளையில் செகந்திராபாத்தை நெருங்கினேன். வழிநெடுக சலூன் கடைகள், பேக்கரிகள், ஆட்டோக்கள், முக்கியச் சந்திப்புகள், சந்து பொந்துகள் என சகல இடங்களிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மகேஷ் என தெலுங்கு சினிமாவின் நட்சத்திரங்கள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். படித்த தெலுங்கர்கள் இந்த சினிமா மோகத்தை பெரும் அவமானமாக கருதுவதையும் ஆங்காங்கே கவனிக்க முடிந்தது.
பெண்களை நேசியுங்கள்
செகந்திராபாத்தையும் ஹைதராபாத்தையும் ‘இரட்டை நகரம்’ என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் இருநகரங்களிலும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இத்தகைய நடைமுறையை சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்கள் பின்பற்ற வேண்டும். ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் ஹூசேன்சாகர் ஏரி தூர் வாரப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஏரியின் நடுவே கவுதம புத்தர் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க சார்மினார், ஆங்காங்கே வானுயர உயர்ந்து நிற்கும் மசூதிகள், இஸ்லாமிய கட்டிடக் கலையைப் போற்றும் பழங்கால கட்டிடங்கள், புறாக்கூட்டங்கள் ஹைதராபாத்துக்கு தனித்துவமான அழகைத் தருகின்றன.
அன்றிரவு ஹைதராபாத்தில் உலகப்புகழ் பெற்ற ஹைதராபாத் பிரியாணியை முதல்முறையாக சாப்பிட்டேன். சற்று காரமும், மசாலா அதிகமாகவும் சேர்த்து, ‘தம்’ முறையில் சமைக்கப்பட்டிருந்த பிரியாணி மிகவும் சுவையாக இருந்தது. மறுநாள் காலை த்ரோட்டில் அவென்ஞ்சர் பைக் கிளப் நண்பர்கள் ஒரு ஐஸ் பார்லரில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
மைக்கியை சர்வீஸ்க்கு விட்டுவிட்டு கூட்டத்தில் பேசுகையில், “தமிழ்நாடு தொடங்கிய எனது பயணம் பாண்டிச்சேரி,கேரளா, கர்நாடகாவைக் கடந்து தெலங்கானாவை நிறைவு செய்யும் இடத்தில் இருக்கிறேன். எந்த இடத்திலும் சிறு அசவுகர்யத்தைக்கூட எனக்கு அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் முகம் தெரியாத மனிதர்கள்கூட என்னை வாழ்த்தி, உற்சாகப்படுத்தினர். எனக்கு உதவ முன்வந்தனர்” என்றேன். அனைவரின் கைத்தட்டலில் வானம் பிளந்தது.
- பயணம் தொடரும், தொகுப்பு: இரா.வினோத்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago