முகங்கள்: இவர்கள் வஜ்ரா கமாண்டோஸ்!

By யுகன்

மரங்கள் அடர்ந்த மயிலாப்பூரின் நாகேஸ்வரராவ் பூங்கா. மக்கள் வியர்க்க வியர்க்க நடந்துகொண்டும் உடற்பயிற்சி செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

பூங்காவின் ஒரு பகுதியில் சில பெண்களுக்குத் தனியாகப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. யாராவது சீண்ட முயன்றால் அதை எப்படித் தடுப்பது, கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியைப் பறிக்க முற்படும்போது எப்படித் தடுப்பது என்பது குறித்த தற்காப்பு பயிற்சிதான் அது.

அவர்கள் தங்களை ‘வஜ்ரா கமாண்டோஸ்’ என்றே அழைக்கின்றனர். இந்தப் பெண்களை ஒருங்கிணைத்து இந்தச் சேவையை பூங்காக்களிலும் கடற்கரையிலும் கட்டணமில்லாமல் வழங்கிவருபவர் பூஜா மல்ஹோத்ரா.

“கடந்த 2014-ல் நிர்பயாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையின் விளைவாக நாடெங்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பல ஏற்பாடுகள் அரசு சார்ந்த அமைப்புகளாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாகவும் ஏற்படுத்தப்பட்டன. இதையொட்டியே அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவிகளுக்குத் தகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு, தாக்க வரும் ஆணிடமிருந்து முதலில் பாதுகாப்பாகத் தப்பிக்கும் வழிகளையும், தற்காப்பு முறைகளையும் ‘வஜ்ரா’ என்னும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கி சொல்லிக் கொடுத்தோம். கண், மூக்கு, வாய் உட்பட உடலின் 7 முக்கிய புள்ளிகளில் தாக்குதலைக் கொடுத்து எதிராளியை நிலைகுலையவைக்கும் இஸ்ரேலின் புகழ்பெற்ற கிரவ்மகா என்னும் தற்காப்பு பயிற்சிமுறை இது” என்கிறார் பூஜா.

தொடக்கத்தில் ஆண் பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தினாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவிகளைக் கொண்டே பயிற்சியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். தொடக்கத்தில் ஏழு பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இவர்களில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் படிப்பைத் தொடர முடியாமலும் விரும்பாமலும் இருக்கும் மாணவிகளுக்கு ஊதியத்தையும் வழங்கி இந்தத் தற்காப்பு பயிற்சியை அடுத்த நிலையில் இருக்கும் மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்கும் திட்டத்தை இந்த அமைப்பின் நிறுவனர் பூஜா ஏற்படுத்தினார்.

“தொடர்ந்து படிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது நான் கற்றுக்கொண்ட பயிற்சியின்மூலம் மாதத்துக்கு எட்டாயிரம் ரூபாய் வஜ்ரா அமைப்பிலிருந்தே எனக்கு சம்பளமாகக் கிடைக்கிறது. என்னைப் போல் வஜ்ராவிலேயே பயிற்சி பெற்ற ஏழு பேர் இப்போது மாணவிகளுக்கும் பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களில் பெண்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம்” என்கிறார் சங்கீதா.

திருவான்மியூர், நுங்கம்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், சாலிகிராமம் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் இந்தப் பயிற்சிகளை நடத்துகின்றனர். இந்தத் தற்காப்புப் பயிற்சிகளை தனியார் பள்ளிகள் கேட்டுக்கொண்டாலும் அவர்களுக்கும் சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு அளிக்கின்றனர். இதுதவிர மாணவிகளிடையேயும் பெண்களிடையேயும் மரியாதையுடன் பழகுதல், நட்பாக இருத்தலின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கியும் வருகின்றனர்.

“ஒவ்வொரு வீட்டிலும் வளரும் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிப்புடன் நடத்துவதன் அவசியத்தைப் புரியவைத்தாலே போதும். இன்றைக்கு வீட்டில் இருக்கும் ஆண் குழந்தைதான் நாளை வீதியில் ஆண் மகனாக வரப்போகிறான். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களை மதிக்கும் நிலை வந்தால்தான் பொதுச் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்” என்று சொல்லும் பூஜா, அவ்வப்போது நல்ல உள்ளங்கள் தரும் நன்கொடைகளாலும் பிரபலங்களைக் கொண்டு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அறக்கட்டளைக்கான செலவுகளைச் சமாளிக்கிறார்.

“தற்போது நகரத்தின் சில பள்ளிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் இந்தத் தற்காப்பு பயிற்சி முறைகளை சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பெண்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சொல்லித் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தத் தொகையின் மூலம் கிராமப்புற பள்ளிகளுக்கும் இந்தப் பயிற்சிகளை எங்களால் எடுத்துச் செல்ல முடியும்” என்கிறார் பூஜா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்