குழந்தைகளின் உலகம் அழகானது. ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு நிறைய பொறுமையும் அக்கறையும் வேண்டும். இந்தக் குழந்தைகளின் உலகத்தோடு ஒரு சிறப்புக் கல்வியாளராகக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பயணம் செய்துவருகிறார் அமுதா தினகரன். சென்னை திருவல்லிக் கேணியில் இவர் நடத்திவரும் ‘ரேயின்போ பிளே ஸ்கூல் அண்ட் டே கேர் சென்டர்’ சமீபத்தில் ஆறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறது.
இந்த பிளே ஸ்கூலின் சிறப்பு என்னவென்றால், குழந்தைகளின் வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமல்லாமல் சிறப்புக் கல்வியாளரும் தொடர்ந்து குழந்தைகளைக் கண்காணிக்கிறார். இதனால், குழந்தைகளிடம் இருக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகளைக்கூட ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்து பெற்றோர்களிடம் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகளோடு இயங்கும் இந்தத் துறையை அமுதா தேர்ந்தெடுப்பதற்கு வலுவான காரணம் இருக்கிறது. “என் மகன் ஒரு சிறப்பு குழந்தை. அவனுக்கு ‘மல்ட்டிபிள் டிஸ்எபிலிட்டி’ (multiple disability) என்னும் பாதிப்பு இருந்தது. அவனை நல்லபடியாக வளர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளின்போதுதான் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வியின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்டேன். என் மகனுக்கு இப்போது 26 வயதாகிறது. அவனுடைய வேலைகளை அவனே செய்து கொள்ளும் அளவுக்கு இப்போது வளர்ந்திருக்கிறான். அத்துடன் எங்களுக்கும் வீட்டில் சின்னச் சின்ன உதவிகளைச் செய்கிறான். ‘மல்ட்டிபிள் டிஸ்எபிலிட்டி’ பாதிப்பு எப்படியிருக்கும் என்று தெரிந்தவர்களுக்கு இது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புரியும்” என்கிறார் அமுதா.
குழந்தைகளின் பிரச்சினை களைச் சரியான நேரத்தில் தலையீடு செய்து பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே ஆரம்பக்கால குழந்தைப் பருவ கல்வி, சிறப்பு கல்வி, டிஸ்லெக்ஸியா (கற்றல் குறைபாடு) குறித்த படிப்புகளைப் படித்துமுடித்திருக்கிறார் அமுதா.
“இங்கே இரண்டு வயதிலிருந்து மூன்று வயதுவரையுள்ள குழந்தைகளைக் கையாள்வதால் அதற்கே உரிய சிறப்பு கவனத்தை எடுத்துக்கொள்கிறோம். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மொழி வளர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி, சமூக மற்றும் உணர்வுகளின் வளர்ச்சி, புலன் சார்ந்த வளர்ச்சி என ஐந்து வகையான வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்கேற்ற மாதிரியான விளையாட்டுகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். அதனால், ‘கிட்ஸ் ஜிம்’ஒன்றை எங்கள் பிளே ஸ்கூலில் நடத்திவருகிறாம்” என்கிறார் அமுதா.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகள் அழுதவுடன், அதன் கையில் செல்போனையோ, வீடியோ கேமையோ கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் பழக்கம் குழந்தைகளின் கையெழுத்தைப் பாதிப்பதோடு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கிறார் இவர்.
“குழந்தைகளுக்கு ஆறு வயதாகும்வரை, செல்போன், டேப் (tab) போன்றவற்றைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது அவர்களுடைய சமூகமயமாக்கலை (Socialisation) ஓரேடியாக தடுத்துவிடுகிறது. இதற்கு ஓர் உதாரணத்தை என்னால் சொல்ல முடியும். எங்கள் பிளே ஸ்கூலில் படிக்கும் இரண்டு வயதுக் குழந்தை வகுப்பறையில் நுழைந்தவுடன் கண்ணை மூடிக்கொள்வான். கண்களைத் திறக்காமல் அழுதுகொண்டேயிருப்பான். ஆனால், வெளியேயும் வீட்டிலும் சாதாரணமாக இருப்பான். இந்தப் பிரச்சினையை சரிசெய்ய அவனுக்கு நிறைய பயிற்சிகள் தேவைப்பட்டன. அவனுக்கு வண்ணங்களை அறிமுகப்படுத்தி அதைவைத்து விளையாட வைத்தோம். அதேமாதிரி, ஒலி சிகிச்சை (sound therapy) அளித்தோம். பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே விளையாடவைத்தோம். அதற்குப்பிறகுதான் அவனுக்கு வகுப்பறை அலர்ஜி மறைந்தது. அதனால், குழந்தைகளிடம் கேட்ஜெட்களைக் கொடுப்பதற்கு முன் பலமுறை யோசியுங்கள். ஏனென்றால்,கேட்ஜெட்கள் குழந்தைகளின் இயல்பான செயல்பாடுகளை பெரிய அளவில் பாதிக்கின்றன” என்கிறார் அமுதா.
சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அமுதா சொல்லும் ஆலோசனை இதுதான்: “சிறப்புக் குழந்தைகள் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பரிசு. அவர்களைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோர் கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் கடமையும்கூட. அவர்களி டம் நிறைய ஆற்றல் பொதிந்திருக்கிறது. அதை வெளிக்கொண்டுவருவதற்குப் பொறுமையும், மனவலிமையும் தான் பெற்றோர்களுக்குத் தேவை”.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago