போரில் தோற்கடிக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த பெண்களைச் சீரழித்ததை யும் அவர்களின் கூந்தலை அறுத்து அதைக் கயிறாகத் திரித்து யானை களைக் கட்டி இழுத்தததையும் அரசியல் களமோ மதக் கலவரமோ எதுவாக இருந்தாலும் அவற்றில் பெண்களின் உடல்களே பலிகொடுக்கப் படுவதையும் வரலாற்றுப் பெருமிதமாகக் கொண்ட நாட்டில், கத்திமுனையில் இளம்பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதை ஒருவர் எவ்விதப் பதற்றமும் இன்றிப் பொதுவெளியில் சொல்வதில் வியப்பேதும் இல்லை. அதைக் கேட்கிறவரும் இயல்புகுலையாமல் அது தொடர்பான அடுத்தடுத்த கேள்விகளை ரசனையோடு முன்வைத்ததில் எந்த அதிர்ச்சியும் தேவையில்லை. காரணம், ஆண்டாண்டு காலமாக இப்படியான வழக்கத்துக்கு நாம் பழக்கப்பட்டவர்கள்தானே.
திருடனாக இருந்து பின்னாளில் தன் திருட்டு அனுபவங்களைச் சுயசரிதைபோல் எழுதிய கேரளத்தைச் சேர்ந்த மணியன் பிள்ளையை யூடியூப் அலைவரிசை ஒன்றின் மலையாளப் பிரிவு சார்பில் சில வாரங்களுக்கு முன்பு நேர்காணல் செய்தனர். மேலே விவரிக்கப்பட்ட நிகழ்வு அதில்தான் நடந்தது. திருடப் புகும் வீட்டில் அழகான பெண்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்கிறரீதியில் பேட்டி கண்டவர் கேள்வி எழுப்ப, மணியன் பிள்ளையோ 22 வயது இளம்பெண்ணைத் தான் கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதைப் பெரும் சாதனைபோல் சொன்னார். அதைக் கேட்டதும் நேர்காணல் செய்தவர் உற்சாகத்துடன், அதன் பிறகு அந்தப் பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா என்று அடுத்தடுத்த கேள்விகளை எழுப்புகிறார்.
ஆண்கள் எழுதிய இலக்கணம்
அந்த நேர்காணலுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்த நிலையில் குறிப்பிட்ட அந்த வீடியோவைத் தங்கள் தளத்தில் இருந்து நீக்கியது அந்த நிறுவனம். நேர்காணல் செய்தவர் தான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்று இதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் அதை ஒரு கதைபோல் தான் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். பெரும்பாலான ஆண்களின் மனத்தில் பெண்கள் குறித்து வேரோடியிருக்கிற எண்ணத்துக்கு அவர் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார், அவ்வளவே.
நம் சமூகத்தில் பெண்களுக்கான இலக்கணங்கள் எல்லாம் ஆண்களால் எழுதப்பட்டவையே. பெண்களின் காதலை, விருப்பத்தை, தேவையை என அனைத்தையுமே ஆண்கள்தாம் வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள். அதனால்தான் இங்கே பெண்கள் எப்போதும் உடலாகவும் பொருளாகவும் மட்டுமே அணுகப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தின், சமூகத்தின் பெரு மையெல்லாம் பெண்ணுடலில் குவிந்தி ருப்பதாக நம்பவைக்கப்படுகிறார்கள். அதன் நீட்சியாகத்தான் பழிவாங்கும் படலம் அனைத்திலும் பெண்களே சூறையாடப்படுகிறார்கள். ஆணை இழிவுபடுத்தும் வசைச் சொற்கள்கூடப் பெண்ணை மையப்படுத்தியவையாக இருப்பதே பெண்களை நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை உணர்த்திவிடும்.
எல்லையில்லா வன்முறை
மொழிவாரியாக எல்லைகள் பிரிக்கப் பட்டிருக்கும் தேசத்தில் பெண்கள் எல்லாம் ஒரே அடையாளத்தின்கீழ் எல்லையில்லாக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர் 2012-ல்கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை மையமாக வைத்து லெஸ்லி வுட்வின் என்பவர் எடுத்த ‘இந்தியாவின் மகள்கள்’ என்கிற ஆவணப்படத்தில் பாலியல் குற்றவாளியான முகேஷ் சிங்கை நேர்காணல் செய்திருந்தார். அதில் முகேஷ் பேசிய வார்த்தைகள் பெண்கள் குறித்த பெரும்பாலான ஆண்களின் சிந்தனையின் வெளிப் பாடு. “ஒழுக்கமான பெண், இரவு ஒன்பது மணிக்கு ஆணுடன் வெளியே செல்ல மாட்டாள். வீட்டு வேலையும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதும் தான் பெண்களின் வேலை. இரவில் வெளியே செல்வதும் நாகரிகமற்ற ஆடைகளை அணிவதும் தவறு” என்று சொல்லியிருந்தார். நாட்டையே உலுக்கிய கொடூரச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகும் பெண்ணை இழித்துக்கூறி அதன் மூலம் தான் செய்த செயலை நியாயப்படுத்துகிற நிலையில்தான் ஆண் மனம் செயல்படுகிறது.
குழந்தையா, மூதாட்டியா, பணி புரிகிறவளா, இல்லத்தரசியா, அறிவில் சிறந்தவளா என்கிற பேத மெல்லாம் இங்கே பார்க்கப்படுவ தில்லை. ஆண்கள் சிலரின் கருத்தில் நிற்பதெல்லாம் பெண் என்று அடையாளப்படுத்தப்படும் உடல்களே. புனிதத் தலமான கோயிலுக்குள் வைத்துச் சிதைக்கப்பட்ட கதுவா சிறுமி, முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டுக் கொல்லப்பட்ட ஹாத்ரஸ் இளம்பெண், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டவரைப் பற்றி வீட்டினரிடம் சொன்னதால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சேலம் சிறுமி, தன்னைப் பாலியல்ரீதியாக வன் முறைக்கு ஆளாக்கியவர்களை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் வழியிலேயே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட உத்திரப் பிரதேச இளம்பெண் என்று எத்தனை எத்தனையோ கொடுமைகளைத் தாண்டித்தான் பெண்கள் இங்கே உயிர்த் திருக்கிறார்கள். ஆனால், ஆணுக்கு இது எதுவுமே பொருட்டல்ல. பெண்ணைத் தான் நுகர வேண்டிய பண்டமாகவே நினைத்து இன்றும் செயல்படுவது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டி யதன் அவசியத்தை உணர்த்துகிறது.
காட்சிப்படுத்தும் ஊடகங்கள்
பெண்களின் மீது ஆண்கள் நிகழ்த்துகிற வன்முறை என்பது பாலியல்ரீதியானது மட்டுமல்ல; பெண் வெறுப்பு, புறக்கணிப்பு, வார்த்தை வன்முறை, பின்தொடர்தல் என்று நீளும் எல்லாமே வன்முறைதான். இரவின் மெல்லிய ஒளியில் நீங்கள் பார்க்கிற பெண்ணுடல் உங்களுக்குள் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாதா என்கிற கேள்விகூடப் பெண் மீது ஆண் நிகழ்த்துகிற வன்முறைதான். ஆனால், இதையெல்லாம் வன்முறை என்று பிரித்தறிந்து செயலாற்ற முடியாத அளவுக்கு நம் சமூகம் முழுவதும் ஆணாதிக்கம் பரவியிருக்கிறது. பெண்ணடிமைத்தனத்துக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.
இணையத்தின் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்நாளில் பெரும்பாலான ஊடகங்கள் பெண்ணு டலைக் காட்சிப்படுத்தியோ அது சார்ந்த செய்திகளைக் கீழ்த்தரமான முறையில் வெளியிட்டோதான் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள் கின்றன. திருமணம் தாண்டிய உறவு, இரண்டாம் திருமணம், இளையோர் காதல் என்று வந்துவிட்டால் போதும். கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, தகாத வார்த்தைகளை வைத்துச் சொற்கோட்டை எழுப்பி மிக சுவாரசிய மான செய்தித் தொகுப்பாக்கி விடுகிறார் கள். பெண்களை மலிவாக்கிக் காட்டும் இதுபோன்ற செய்திகளையும் வீடியோக் களையும்தான் பலர் விரும்பிப் பார்க்கிறார்கள். பெண்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பொருள் ஒன்றின் விற்பனை விளம்பரத்தில்கூட நேர்த்தியாகவோ கவர்ச்சியாகவோ அலங்கரிக்கப்பட்ட பெண்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறாள். தொலைக்காட்சியின் எந்த அலைவரிசையை எப்போது பார்க்க நேரிட்டாலும் கொலு பொம்மைபோல் அலங்கரிக்கப்பட்ட பெண்களை நாம் காணலாம். இப்படியான சேயல்பாடு கள் பெண்களின் முன்னேற்றம் சார்ந்து நாம் எடுத்து வைத்திருக்கும் அடி களைப் பின்னோக்கி இழுக்கின்றன.
பெண்ணைச் சக உயிராக மதித்து நடத்துகிற இயல்பான மனிதப் பண்பைக் கூடப் பேராண்மை என்று சிலாகிக்க வேண்டிய அவலநிலையில்தான் நாம் இருக்கிறோம். பெண்களை எப்போதும் இரண்டாம்பட்ச மாகவே நடத்திவிட்டு, ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்று உலக நாடுகளுக்குக் கலாச்சார வகுப்பெடுத்துக்கொண்டி ருக்கிறோம். ஆண் என்பது எப்படி ஆதிக்கத்தின் குறியீடு இல்லையோ அப்படித்தான் பெண் என்பதும் அடிமைத்தனத்தின் குறியீடல்ல. பெண்கள் பண்டங்கள் அல்ல. தனித்த அறிவும் திறனும் பண்பும் கொண்ட மேம்பட்ட உயிர்கள். இருபாலரும் அதை உணர்ந்து நடக்கிறபோதுதான் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்க மும் மறையும்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago