ஏழைப்பெண்களுக்குக் கைகொடுக்கும் அரசுத் திட்டங்கள்

By ஆர்.பாலசரவணக்குமார்

இந்த கரோனா காலம் யாருமே எதிர்பாராத பேரிழப்புகளைப் பொருளாதார ரீதியாகவும், உயிர், உடைமைகள் ரீதியாகவும் ஏற்படுத்தி யுள்ளது. அதேநேரம், கரோனா கட்டுப்பாடுகளால் திருமண மண்டபம் பார்ப்பது, உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஊரையே அழைத்துத் தடபுடல் விருந்து வைப்பது, சீர்வரிசை வழங்குவது என அனைத்திலும் பெண் வீட்டாருக்கான திருமணச் செலவு வெகுவாகக் குறைந்துள்ளது. வழக்கத்தைவிடத் தற்போது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும் ஏழை, எளியோர் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்துவைக்க வழிதெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்களைப் போன்றவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் தமிழகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக ஐந்து வகையான திருமண உதவித் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்:

ஆதரவற்ற இளம்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில் 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை. இந்தத் திட்டத்திலும் பட்டதாரிப் பெண்கள் என்றால் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும், மற்றப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், கூடவே தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். தகுந்த காரணம் இருப்பின் திருமணத்துக்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்:

ஏழை கைம்பெண்களின் மகளின் திருமணத்தை நடத்த உதவுவதற்காக 1981ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மணப்பெண் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இதன்படி பட்டதாரிப் பெண்கள் என்றால் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும், மற்றப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும், கூடவே தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். தகுந்த காரணம் இருப்பின் திருமணத்துக்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்:

கைம்பெண்களின் மறுமணத்துக்கு நிதியுதவி அளிப்பதற்காக 1975ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. மறுமணத்தின்போது பெண்ணுக்குக் குறைந்தபட்ச வயது 20ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவன் இறந்ததற்கான சான்று, மறுமணப் பத்திரிகை, வயதுச்சான்று ஆகியவை இருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்து இருந்தால் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். மற்றப் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், ரூ.10 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். கூடவே, தாலிக்காக 8 கிராம் தங்கம் வழங்கப்படும். மறுமணம் செய்த நாளில் இருந்து 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்:

சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கில் 1967ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலில் உள்ளது. ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. திருமணத்தின்போது மணப்பெண் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியரில் ஒருவர் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் வேறு வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். அல்லது ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு படித்து இருந்தால் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். மற்றப் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், ரூ.10 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். கூடவே, தாலிக்காக 8 கிராம் தங்கம் வழங்கப்படும். திருமணம் செய்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்:

ஏழைப் பெண்களின் கல்வி மற்றும் திருமண உதவிக்காக 1989ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் பட்டயப் படிப்பு படித்து இருந்தால் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் இத்திட்டத்தின்கீழ் திருமண நிதியுதவியாக வழங்கப்படுகிறது. பழங்குடியினர் எனில் ஐந்தாம் வகுப்புப் படித்து இருந்தால் போதும். மேலும், தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதற்குக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-த்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். மணப்பெண்ணுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சான்றிதழ் இல்லை என்றாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். தகுந்த காரணம் ஏற்கும்படியாக இருப்பின் திருமணத்துக்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வளவு திட்டங்கள் இருந்தும் மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை. போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான அ.முகமது ஜியாவுதீன் கூறுகையில், ‘‘பொதுவாக அரசு வழங்கும் இதுபோன்ற அருமையான திட்டங்களுக்கான சட்ட விழிப்புணர்வு ஏழை, எளிய மக்களிடம் இருப்பது இல்லை. எத்தனையோ ஏழைப்பெண்களின் பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க வழியின்றி நிதியுதவிக்காக ஏங்கித் தவித்துவருகின்றனர். அவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் மிகவும் பயனளிக்கும். இந்தத் திட்டங்களுக்குக் குறித்த காலத்திலும், தகுந்த ஆவணங்களுடனும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். அந்த விஷயத்தில் படித்தவர்களும்கூடக் கோட்டை விட்டுவிடுகின்றனர். விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை ஆன்லைன் வாயிலாகவே அறிந்துகொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலமாக இது தொடர்பான சட்ட விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்