மகளிர் திருவிழா: உற்சாகத்துடன் கொண்டாடிய சென்னை வாசகிகள்!

By எல்.சீனிவாசன்

திருச்சி, கோவை, மதுரை வாசகிகளை அசத்திய ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை, பிப்ரவரி 28-ம் தேதி சென்னை வாசகிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. ஜூனியர் காலேஜ் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த மகளிர் திருவிழாவில் எழுநூறுக்கும் மேற்பட்ட வாசகிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் தொழில் ஆலோசனைகள், பெண்களுக்குத் துணை நிற்கும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து சாதித்தவரின் அனுபவங்கள், சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளுவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், கலக்கலான போட்டிகள், ஏராளமான பரிசுகள் என சென்னை மகளிர் திருவிழாவிலும் கொண்டாட்டத்துக்குக் குறைவில்லை.

வரவேற்புரையில் இணைப்பிதழ் ஆசிரியர் டி.ஐ. அரவிந்தன், “பெண்கள் என்றாலே சமையல், அழகுக் குறிப்பு, குடும்பப் பராமரிப்பு என்று இருக்கும் பொதுவான கருத்தை ‘பெண் இன்று’ உடைத்திருக்கிறது. பெண்களின் பன்முக அம்சங்களை அது பிரதிபலிக்கிறது. முக்கியமான பிரச்சினைகளில் வாசகிகளாகிய உங்கள் கருத்துக்களுக்குப் பிரதானமாக இடம் தருவது ‘பெண் இன்று’ இணைப்பிதழின் கூடுதல் சிறப்பம்சம்” என்று பேசினார்.

உத்வேகம் அளித்த சிறப்புரைகள்

மகளிர் திருவிழாவில் இடம்பெற்ற சிறப்புரைகள் அனைத்துமே வாசிகளை வெகுவாகக் கவர்ந்தன. ‘காம்கேர்’ சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ. புவனேஸ்வரி, சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்படிக் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று வாசகிகளுக்கு விளக்கினார்.

‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ‘இருளுக்கு இங்கே இனி என்ன வேலை’ என்ற தொடர் எழுதிய டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி பேராசிரியர் கவிதா சதீஷ், தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த கதையை வாசகிகளுடன் பகிர்ந்துகொண்டார். கவிதாவின் அனுபவங்கள் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாகப் பல வாசகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

‘பெண் எனும் பகடைக்காய்’ தொடரை எழுதிவரும் சமூக /பெண்ணியச் செயல்பாட்டாளர் பா. ஜீவசுந்தரி, பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டிய முக்கியத்துவம் குறித்துப் பேசினார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் அவர் பேசிய கருத்துக்கள் வாசகிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ். விமலா, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சட்டங்களைப் பற்றி எளிமையாக விளக்கினார். காவல்துறை முன்னாள் ஆய்வாளர் ஆர்.வரதராஜ் வாசகிகளுக்கு ‘சைபர் கிரைம்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இருக்கும் ஆபத்துகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

மனநலம் தொடர்பான வாசகிகளின் கேள்விகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். தேன்மொழி பதிலளித்தார்.

நாங்களே பாடகிகள்! நாங்களே நடிகைகள்!

சென்னை மகளிர் திருவிழாவில் நடந்த பாட்டுப் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு தரப்பு வாசகிகளும் கலந்துகொண்டு அசத்தினார்கள். இந்தக் காலத்துப் பெண்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தட்டுத் தடங்கல் இல்லாத பாடலால் நிரூபித்தனர் சீனியர் வாசகிகள்! ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ என்று பாடிய கௌசல்யா ராமசாமி முதல் பரிசை வென்றார்.

‘எலந்த பழம் எலந்த பழம்’ என்று கணீரென்ற குரலில் பாடியபடி ஆடிப் பார்வையாளர்களைக் கவர்ந்த கோமதிக்கு இரண்டாம் பரிசு. பாட்டைப் போலவே அவரது முக பாவமும் நடனமும் அசத்தல் ரகம்! மூத்த தலைமுறையைச் சேர்ந்த இவர்கள் முதல் இரு பரிசுகளைப் பெற, இளைய தலைமுறையைச் சேர்ந்த நிஷா ‘எனதுயிரே’ பாடல் பாடி மூன்றாம் பரிசைப் பெற்றார்.

‘நடிகையர் திலகம்’ போட்டியிலும் வாசகிகள் அசத்திவிட்டார்கள். ஒதுக்கப்பட்ட முப்பது விநாடிக்குள் அந்தப் பாத்திரமாகவே சில வாசகிகள் ஒன்றிப்போய் நடித்தார்கள். ‘கண்ணம்மா கம்முனு கெட’ என்ற ஆச்சி மனோரமாவின் டிரேட் மார்க் வசனத்தை நடித்துக் காட்டிய வாசகி லலிதா முதல் பரிசையும், ‘என்னை கோயமுத்தூர்ல கூப்பிட்டாக, மருதையில கூப்பிட்டாக’ என்று கோவை சரளாவாகவே மாறி நடித்த நளினி இரண்டாம் பரிசையும், ‘அடி ஆத்தீ.. என் கோழிய திருடி சாப்பிட்டவங்க நல்லா இருப்பாங்களா?’ என்று காந்திமதி போலவே பல்லைக் கடித்துக்கொண்டு வசனம் பேசிய இந்திரா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

கொஞ்சம் விளையாட்டு, நிறைய பரிசுகள்!

வாசகிகளை முற்றிலும் ஜாலியான மனநிலைக்குக் கொண்டுசெல்லும் சுவாரஸ்யமான போட்டிகளும் மகளிர் திருவிழாவில் இடம்பெற்றிருந்தன. பலூன் உடைக்கும் போட்டி அதில் ஒன்று. தங்களுடைய பலூனைப் பாதுகாத்துக்கொண்டே, யார் அடுத்தவர் பலூன்களை அதிகமாக உடைக்கிறார்கள் என்பதுதான் போட்டி. கலந்துகொண்ட வாசகிகள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் இந்தப் போட்டியை வெகுவாக ரசித்தனர். இதில் பூங்குழலி, சாரதா, சுஹாசினி ஆகியோர் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். ‘மியூசிக்கல் சேர்’ போட்டியில் கவிதா, பிரியா, இலக்கியா ஆகியோர் வெற்றிபெற்றனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே சென்னை குறித்த கேள்விகள், ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்ந்த கேள்விகள், விடுகதைகள் ஆகியவையும் கேட்கப்பட்டு சரியாகப் பதிலளித்த வாசகிகளுக்கு உடனடி ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அறிவுப் போட்டிகளுடன் ஆச்சரியப் போட்டிகளும் விழாவை கலகலப்பாக்கின. நீளமான கூந்தல் வைத்திருந்த வாசகிகள், இன்று பிறந்தநாள் / திருமண நாள் கொண்டாடும் வாசகிகள் ஆகியோருக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு மூக்குத்தி போட்டிருந்த வாசகி யார் எனக் கேட்கப்பட்டு, அவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

நடனப் போட்டியில்லாத மகளிர் திருவிழாவா? பாடலுக்கு ஏற்ப வாசகிகள் நடமனாடினாலும் தாளத்துக்கு ஏற்ப நடனமாடிய எஸ்.ஐ.இ.டி. கல்லூரி மாணவி சுஷ்மிதா முதல் பரிசு பெற்றார். சுந்தரி, யுவலட்சுமி, விமலா ஆகியோரும் நடனப் போட்டியில் வெற்றிபெற்றனர். மேடையேறி நடனமாடிய வாசகிகள் அனைவருக்கும் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன.

வாசகிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த பம்பர் பரிசு வழங்கும் நேரம் வந்ததும் அரங்கத்தில் பரபரப்பு. யாருக்கு யாருக்கு என எதிர்பார்ப்பு ஏற, கல்யாணி, திரிபுரசுந்தரி, தனம் ஆகிய மூவரும் பம்பர் பரிசைப் பெற்றனர்.

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் சசிகலா, சங்கீதா ஆகியோர் இந்த மகளிர் திருவிழாவைச் சுவையாகத் தொகுத்து வழங்கினர்.

இந்த மகளிர் திருவிழாவை ‘தி இந்து’ வுடன், லலிதா ஜுவல்லரி, லியோ காபி, ஹார்லிக்ஸ் ஓட்ஸ், பிருத்வி உள்ளாடைகள், ஆரெம்கேவி, ஹெல்த் பேஸ்கட், ப்ரேலேடி குக்கிங் வேர்ஸ், க்ரியா சாரீஸ், மீகா புட்ஸ், பொன்வண்டு, எஸ்.பி.ஐ. ஹோம் லோன்ஸ், நேச்சுரல்ஸ், குளோபல் இன்னோவேட்டிவ்ஸ், மந்தரா, அபி எஸ்டேட்ஸ், தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி, பிகாஜி ஃபுட்ஸ், அகிலா ஆர்ட் கேலரி, டஃபே ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.



பெண்களைக் கொண்டாடுவோம்

ரங்கோலி போட்டிக்கு வழங்கப்பட்ட ‘பெண்களைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பே வாசகிகளைக் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் சென்றது. பல வாசகிகள் ரங்கோலியில் பெண்மையை வண்ணமயமாகவும் ஒளிமயமாகவும் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். வாசகி அனுராதா கமலக்கண்ணன், முதல் பரிசு பெற்றார். இரண்டாம் பரிசை விஜயா கோதண்டபாணியும், மூன்றாவது பரிசை சர்மிளாவும், நான்காவது பரிசை லஷ்மி சீனிவாசனும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட வாசகிகள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.



களைகட்டிய கரகாட்டம்!

சுவையான மதிய உணவுக்குப் பிறகு, கலை நிகழ்ச்சிகளுடன் மதிய நிகழ்வுகள் தொடங்கின. காலை முழுவதும் செவிக்கு விருந்தளித்த நிகழ்ச்சிகள், மதியத்துக்குப் பிறகு, ரசனைக்கு விருந்தளிப்பதாக அமைந்திருந்தன. மாற்று ஊடக மையம் சார்பில் நடைபெற்ற தப்பாட்டம், கரகாட்டம், திருநெல்வேலி புகழ் சாட்டைக் குச்சி ஆட்டம் போன்றவை வாசகிகளைப் பெரிதும் கவர்ந்தன. கிட்டத்தட்ட அரைமணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்தப் பாரம்பரிய நடன நிகழ்வுகளின் போது, வாசகிகள் பலரும் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.



வாசகிகளின் எல்லையில்லா அன்பு

‘பெண் இன்று’ இணைப்பிதழின் தீவிர வாசகியான கல்யாணி, காலை ஆறரை மணிக்கே விழா அரங்குக்கு வந்து காத்திருந்தார் (தயவுசெய்து யாரும் வெகு முன்னதாக வந்து சிரமப்பட வேண்டாம்!) அதே மாதிரி, திருச்சி மகளிர் திருவிழா கலந்துகொண்ட வாசகி ஜெயந்தி, சென்னை மகளிர் திருவிழாவிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டார். ‘நமக்காக ஒரு நாள்’ என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படும் ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா இவர்களை மாதிரி வாசகிகளின் அன்பால் மேலும் மெருகேறியது.



வசனமில்லா நாடகமான ‘மைம்’ போட்டி

வாசகிகள் தங்கள் படைப்பாற்றலை நிரூபிப்பதற்கான வாய்ப்பை ‘மைம்’ போட்டி ஏற்படுத்திக்கொடுத்தது. தங்கள் நடிப்பால் மெரினா கடற்கரையை கண் முன்னே கொண்டுவந்த வாசகிகள் ஜெயசித்ரா, மகாலட்சுமி, ராஜலட்சுமி, கல்பனா, கோகிலா ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர். சென்னைப் பெருவெள்ளம், உழைக்கும் மகளிர் போன்ற தலைப்புகளில் நடித்துக்காட்டிய வாசகிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைத் தட்டிச்சென்றனர்.



காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்

- காம்கேர் புவனேஸ்வரி

பெண்களிடம் இருக்கும் தனித் திறமைகளைப் பொழுதுபோக்காக மட்டுமே கருதிய காலம் போய்விட்டது. படித்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் சம்பாதிக்கலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்வரை அனைவரும் கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற இல்லத்தரசிகள், தமிழ் தட்டச்சு, மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், ஆடை வடிவமைப்பு, கட்டிடக் கலை புளூபிரின்ட், மல்டிமீடியா, அனிமேஷன் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே செய்து சம்பாதிக்கலாம். இதன் மூலம் உங்களுடைய படிப்பு, கலைத் திறமைக்கு ஏற்ப முன்னேறலாம்.

படிக்கவில்லை என்றாலும் இன்டர்நெட் கைகொடுக்கும். ஊறுகாய் தயாரிக்க மட்டும்தான் தெரியும் என்றால்கூட ஒரு வெப்சைட்டை உருவாக்குங்கள். அடுத்து பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய மற்ற சமூக வலைத்தளங்களையும் இலவசமாகப் பயன்படுத்தி நீங்கள் தயாரிக்கும் பொருள்களைச் சுலபமாக விற்கலாம். இன்று சென்னையில் தயாராகும் இட்லி சில மணி நேரங்களில் சுடச்சுட சிங்கப்பூருக்கு ஏற்றுமதி ஆகிறது என்றால் அது இன்டர்நெட் எனும் அதி அற்புதமான தொழில்நுட்பத்தின் துணை யோடுதான். தன்னம்பிக்கை மிக்க பெண், முழுமையடைய யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை.



புற்றுநோயை வென்ற கதை

- கவிதா சதீஷ்

தமிழ் சினிமாவின் புற்றுநோய் கதைகளைப் பார்த்து என் சிறு வயதிலிருந்தே நடுங்கியவள் நான். அப்படிப்பட்ட எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய் இருப்பது அறிவிக்கப்பட்ட நாள் இன்றும் நினைவிருக்கிறது. மருத்துவ சோதனை முடிந்து என் கணவரோடு உட்கார்ந்திருந்தேன். அப்போது டாக்டர் சுப்பையா என்னிடம், “கேன்சரின் ஆரம்ப நிலையில் இருக்கிறாய். உன் கண் இமை, புருவம், தலை முடி எல்லாம் கொட்டிப்போகும். அதனால் என்ன? துணிந்து நில்” என்று கண்களில் நம்பிக்கையோடு சொன்னார். வாழ்க்கையின் மறுபக்கத்தை ஏன் பதறாமல் எதிர்கொள்ளக் கூடாது என்று தோன்றியது.

நான் அப்போது கல்லூரி விரிவுரையாளராக வேலைபார்த்துக்கொண்டே பி.எச்டி., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன். கீமோதெரபி, ரேடியேஷன்தெரபி என மரண வலி, வேதனையைக் கொடுக்கும் சிகிச்சைகளை செய்துகொண்டாலும் ஒரு நாளும் வேலைக்கு லீவு எடுத்ததில்லை. இரண்டாண்டுகளில் என் மன வலிமை, கணவரின் உறுதுணை, என் மாணவர்களின் அன்பு, என்னைச் சுற்றியிருந்தவர்களின் அரவணைப்பு மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டேன். ‘தி இந்து’வின் ‘பெண் இன்று’ எனக்கு ஏராளமான தோழிகளைத் தேடித் தந்தது. என் வலிமையை இன்னும் பல மடங்காக்கத் தோள்கொடுத்திருக்கிறது.



ஆணைப் பெண்ணுக்கு ஆதரவாக வளர்க்க வேண்டும்

- ஜீவசுந்தரி

‘பெண் இன்று’ இணைப்பிதழில் நான் எழுதிவரும் ‘பெண் எனும் பகடைக்காய்’ தொடருக்குப் பெண்கள் பலரிடமிருந்து பாராட்டும் ஆண்கள் பலரிடமிருந்து எதிர்ப்பும் வந்துகொண்டேயிருக்கின்றன. இதன் மூலம் ஆண்களும் இதனை கவனாமாக வாசிக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. இன்று பல்வேறு துறைகளிலும் தளங்களிலும் பெண்கள் வளர்ந்துவந்தாலும் இன்னும் ஏன் பெண் உரிமை வேண்டும் என பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்வோம்.

இன்று இந்தப் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பெருவாரியான பெண்கள் முந்தைய தினமே வீட்டில் கூடுதல் உழைப்பைச் செலுத்தியிருப்பார்கள். சமையல், சமையல் தொடர்பான வேலைகள், குழந்தையைப் பராமரித்தல், கணவருக்கான பணிவிடை இப்படி அத்தனையும் செய்து முடிக்க வேண்டும். ஆனால் ஆண்கள் என்றால் படித்து முடித்து சம்பாதித்தால் போதும் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. இது பாகுபாடில்லையா? இந்நிலையை மாற்ற, குழந்தை வளர்ப்பில் காட்டப்படும் ஆண் - பெண் பாரபட்சத்தைப் போக்க வேண்டும். ஆணைப் பெண்ணுக்கு ஆதரவாக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்கு இருக்கிறது.



பெண்களுக்குச் சட்டமே துணை

- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ்.விமலா

அவ்வையார் முதல் ராமாமிர்தம் அம்மையார் அம்மையார், முத்து லட்சுமி ரெட்டியார், எனத் தொடர்ந்து இன்று அரசியல், அறிவியல், ராணுவம்வரை பெண்கள் சாதித்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எல்லாக் காலத்திலும் பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அதுவும் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, பல தடைக்கற்களைத் தாண்டி, முட்டுக்கட்டைகளை மீறி வளர்ந்து நிற்கிறார்கள். வன்முறைகள் அற்ற சமூகத்திலும் வீட்டிலும் வாழ்வதற்குப் பெண்களுக்கு உரிமை உள்ளது. குறைந்தபட்சம் அந்த உரிமையாவது உறுதி செய்யப்பட்டுள்ளதா? இட ஒதுக்கீடு, சிறப்புச் சட்டங்கள், சிறப்புத் திட்டங்கள் எனப் பெண்ணின் இருப்பை அங்கீகரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இந்தச் சட்டங்கள் சரியாக யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களை முன்னிறுத்திச் செயல்படும்போது பெண்ணுரிமை என்பது சம்பிரதாயமாக இல்லாமல் நிதர்சனமாகும். பெண்கள் எதற்கெல்லாம் போராடினார்கள், எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா இல்லையா என்பது புரியும். பெண்கள் அடைந்துவிட்டதாக நம்பும் சுதந்திரம் ஒரு அடையாள அங்கீகாரம் மட்டுமே. இது பற்றிய சூழ்நிலையை இப்படிச் சொல்லலாம். கிளிக்கூண்டு திறந்தது, கிளி வெளியே வந்தது, சிறகடித்துச் சிட்டாய்ப் பறக்க அல்ல. சீட்டெடுத்துக் கொடுக்க. இதுதான் பெண் சுதந்திரத்தின் இன்றைய நிலை. இன்றைய சூழலில் பெண்கள் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கேற்ப நாளுக்கு நாள் சவால்களும் அதிகரிக்கின்றன.

வாடகைத்தாய் என்ற பெயரில் வஞ்சிக்கப்படும் மகளிர், போர்முனைகளில் தத்தம் வாழ்க்கையைப் பணயம் வைத்து அன்னியர்களை அகற்ற உயிர் கொடுக்கும் போர் வீரர்களின் மனைவிகள், விடுதலை ஒன்றையே நோக்கி எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளின் மனைவிகள்,போன்றவர்களின் உரிமைக் குரல்கள் ஒரு நாளும் ஒலிப்பதில்லை. அவர்களது வாழ்க்கையைப் பற்றிய அவர்களுக்கே உரித்தான உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் காலந்தள்ளி வருகிறார்கள். பெண் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு தருணத்திலும் இந்த அபலைகளின் அவலக் குரலையும் சேர்த்தே சிந்தித்தால்தான் பெண் உரிமை முழுமை அடைந்ததாக அர்த்தம். இதை விடுத்து, நதிகளுக்கும் நாடுகளுக்கும் பெண்களின் பெயரைச் சூட்டிவிட்டு உண்மையில் பெண்களின் ஒரு பகுதியினரை மைய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைப்பது பெண்களுக்கே என்று இயற்றப்பட்டிருக்கின்ற எல்லாச் சட்டங்களையும் பொருளற்றதாக ஆக்கிவிடும்.



மனநல ஆலோசனை

- முனைவர் எஸ். தேன்மொழி

உளவியல் சார்ந்த வாசகிகளின் பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலளித்தார் தேன்மொழி.

“இரண்டாம் வகுப்பு, நான்காம் வகுப்பு படிக்கும் என் பிள்ளைகளிடம் படிக்கச் சொன்னால் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறார்கள். நான் என் சிறு வயதில் இப்படி இருந்ததில்லை. ஒரு தாயாக இன்றைய குழந்தைகளை எப்படி அணுகுவது?” எனும் கேள்விக்கு, “உங்களுடைய குழந்தைகளுக்குத் தேவை மிரட்டலான அறிவுரை அல்ல, படிப்பதற்கு உகந்த சூழல். அதை உருவாக்குங்கள். குழந்தைகள் ஒழுக்கமாக, பொய் சொல்லாமல் இருக்க வேண்டுமென எதிர்பார்த்தால் நீங்களும் அவற்றைக் கடைபிடித்துக்காட்டுங்கள்” என்றார்.

“அமெரிக்கப் பெண்களில் 53 சதவீதத்தினருக்கு மன அழுத்தம் இருப்பதாகவும் இந்தியப் பெண்களில் 83 சதவீதத்தினருக்கு மன அழுத்தம் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஏன் இந்தியப் பெண்களில் பெரும்பாலோருக்கு இவ்வளவு மன அழுத்தம்? அதைச் சரிசெய்ய வழி இல்லையா?” என்ற கேள்விக்கு, “அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலான பெண்கள் வேலைபார்த்தாலும் வசதி வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் குடும்பத்தையும் வெளி வேலைகளையும் ஓரளவு சமாளிக்க முடிகிறது. ஆனால் இந்தியச் சூழலில் இதைக் கையாள முதலாவதாகக் குடும்பப் பொறுப்புகளில் ஆண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். அதே போல உங்கள் மகன்களை வளர்க்கும்போதே வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவத் தயார்படுத்துங்கள்” என விளக்கம் அளித்தார்.

“பெண்தான் பெண்ணுக்கு எதிரி என்பது என் வாழ்க்கையில் உண்மையாக இருக்கிறது. அப்படிப் புறம் பேசும் பெண்களைத் திருத்த என்ன செய்ய வேண்டும்?” எனும் பரபரப்பாக எழுந்த கேள்விக்கு, “முதலில் மற்றவர்களை நம்மால் மாற்ற முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை, நம் அணுகுமுறையை நாம் மாற்றிக்கொள்ளலாம். ஒருவர் தன்னம்பிக்கை இழக்கும்போது சுயமரியாதையை இழக்கிறார். அதுவே மற்றவர்களைப் பற்றியும் குறைகூறச் செய்கிறது. பெண்கள் தன்னம்பிக்கையோடு உலகைப் பார்க்கத் தொடங்கினால் இணக்கமாக வாழ்ந்துகாட்ட முடியும்” என நேர்மறையாகப் பதிலளித்தார்.

“பெண்களுக்காகப் பலர் கூடிக் குரல் கொடுப்பது, பெண் உரிமைகளைப் பறைசாற்றுவது, எப்போதோ ஒரு நாள் கூடிப் பெண்ணுக்காகக் கொண்டாடுவது இவை அத்தனையும் அபத்தம். என்னைப் பொருத்தவரை பெண்ணின் நிலை கொஞ்சமும் உயரவில்லை. இந்தச் சமூகம் பெண்ணை அடிமையாக, போகப்பொருளாகதான் நடத்துகிறது. தினந்தோறும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் படிக்கும்போதும், நேரடியாகப் பார்த்து அறியும் போதும் நான் துடிதுடித்துப்போகிறேன். இதற்கு எப்போது தீர்வு காணப்போகிறோம்” எனக் கொதித்தெழுந்த வாசகியிடம், “நானும் நீங்கள் கூறும் அத்தனையும் ஏற்றுக்கொள்கிறேன். இது ஒரு நாளில் தீர்க்கக்கூடிய சிக்கல் அல்ல. பல அடுக்குகளில் பல தளங்களில் செயல்பட வேண்டும். அதற்கு சட்டம், அரசு, சமூகம், தனி மனிதர்கள் என அத்தனை பேரும் கைகோக்க வேண்டும்”.



சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு

- ஆர். வரதராஜ், முன்னாள் காவல்துறை ஆய்வாளர், சென்னை

கம்ப்யூட்டர், செல்போன், இன்டர்நெட் ஆகியவற்றின் மூலம் இன்று பெண்கள் பெரிதும் அச்சுறுத்தப்படுகிறார்கள். பொது இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக செக்யூரிட்டி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ரகசிய கேமராக்கள் பெண்களை மையமாக வைத்தே பொருத்தப்படுகின்றன. உங்களுடைய வீட்டின் படுக்கையறை, குளியலறையில் அந்நியர்களை அனுமதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பராமரிப்பு ஆட்கள் வந்தால் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். அடுத்து, முன் பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய செல்போனை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.

முடிந்தவரை மொபைலில் போட்டோ எடுக்காதீர்கள். மின்னஞ்சலிலும் கவனம் அவசியம். உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான எந்தத் தகவலையும் ஒருபோதும் மின்னஞ்சலில் பரிமாறாதீர்கள். திடீரென, ‘உங்களுக்கு லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது, கிரெடிட் கார்டு தகவலைக் கொடுங்கள்’ என்று மின்னஞ்சல் வரும். தெரியாத நபர்களிடமிருந்து ‘அட்டாச்மென்ட்’ சகிதம் மெயில் வரும். அதை ஓபன் செய்தால் உங்கள் ‘டெஸ்க் டாப்’பை வேவு பார்க்கும் மென்பொருள் இறங்கிவிடும் ஆபத்து உள்ளது. இப்படி விதவிதமாக ஏமாற்று வேலைகள் சைபர் உலகில் நடக்கின்றன. அதனால் எதிலும் எப்போதும் கவனம் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்