பெண்கள் பலர் கலந்துகொண்ட மகளிர் விழா ஒன்றில் ஒரு பெண்மணி, “பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்ற கருத்து உருவாக்கப்பட்டிருப்பது சரியா, தவறா?” என்று பெண்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார். மகளிர் தினத்தன்று ஆளுமைத் திறன் மிக்க 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்து ‘நமக்கு நாமே’ பாணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு கலந்துரையாடலிலும் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உண்மையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு எதிரியாக இருக்க முடியுமா?
வாய் வார்த்தை வன்முறை
வெளிப்படையாகப் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவுகள், வன்முறைகள் ஒரு புறம் என்றால், வார்த்தைகளால் அவள் உடலைக் குறிவைத்துச் செலுத்தப்படும் வன்முறை அஸ்திரங்கள் வேறு ரகம். பெண் என்பவள் வயது பேதமின்றி எப்போதும் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியவளாகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதைக்கூட ஏற்றுக்கொள்வதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. உடற்கூறு அடிப்படையிலான வேறுபாடுகள் தவிர்த்து ஆசைகள், கனவுகள், செயல்பாடுகள், வேலைப் பிரிவினைகள் அனைத்துமே இருபாலருக்கும் பொதுவானதுதான். பெண் ‘வீக்கர் செக்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதால், அவள் அடித்தட்டு நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். ‘எங்களையும் உங்களுக்கு ஈடாக நிறுத்துங்கள்’ என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டேதான் இருக்கிறோம். 280 நாட்கள், மற்றோர் உயிரை வயிற்றில் தாங்கி பெற்றெடுத்து உலகுக்கு அளிப்பதற்கான உடல், மன உறுதியைப் பெற்றிருக்கும் பெண்ணைத்தான் ‘வீக்கர் செக்ஸ்’ என்று முத்திரை குத்தி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். மன உறுதியிலும் பெண் குறைந்தவள் அல்ல.
கண்காணிப்பின் பிடியில் பெண்
பருவமடையும் வயது நெருங்கிவிட்டதென்றால், வெளிப்படையாக முன்பு போல் பூப்பு நீராட்டு விழா அல்லது வீட்டுக்குள் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமாவது அதை வெளிப்படுத்திச் சடங்குகள் செய்வார்கள். அப்படி ஏதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படாவிடில், கேள்விகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழ ஆரம்பித்து விடும். ஏன் இவ்வளவு அக்கறை? பெண் குழந்தை என்றால் அடுத்தகட்ட வளர்ச்சி அவளுக்குள் நிகழாமல் இருக்கப் போவதில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாவிடில் என்னவாகிவிடும்?
கருப்பையின் வளர்ச்சி, அதன் பொருட்டு வெளியேறும் மாதாந்திர ரத்த ஒழுக்கு இவை அருவருப்பு கொள்ளத்தக்கதாய் பார்க்கப்படுவதும், உடலைத் தூய்மையாக வைத்திருப்பது என்பதைக் கடந்து அதை இன்னமும் தீட்டு என்று ஒதுக்குவதும் பெண்கள் மத்தியில் நிலவும் அறியாமை அன்றி வேறில்லை. எத்தனை படித்தபோதும் பெண்களின் பார்வை அதைக் கடந்து செல்ல மறுப்பது அவர்கள் மீது காலம் காலமாகத் திணிக்கப்பட்ட ஒன்றாகவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்பு போல் வீட்டு விலக்கு என்று ஒதுக்கி வைக்காவிட்டாலும், இரவில் தனியாகப் படுத்துறங்கி, அதிகாலையில் தலையில் தண்ணீரை ஊற்றி முழுக்காடிய பின்பே அடுக்களைக்குள் நுழைவது என்பதும் நவீன தீண்டாமையின் வடிவம்தான். அந்த மூன்று நாட்களுக்கு வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றுவதும், உள்ளே நுழைவதும்கூடத் தடுக்கப்பட்டிருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே இப்படி எனில், கோயில்களுக்குள் நுழைவது பற்றிய சிந்தனை எப்படி வரும்? அதற்காகப் போராடும் பெண்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் இதன் பின்னணியில்தான் எழுகின்றன. அதுதான் எப்போதும் ஒரு கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே பெண்ணை நிறுத்தி வைத்திருக்கிறது.
ஒழுக்க நியதிகளும் பெண்ணைக் குறி வைத்தே எழுப்பப்படுகின்றன. திருமணம் ஆகும்வரை அவள் கன்னித்தன்மையுடன்தான் இருக்கிறாளா என்று கண்காணிக்கும் புத்திதான் கேள்விகளாக வெளிப்படுத்தப்படுகிறது. துரதிருஷ்டவசமாக இந்தக் கேள்விகளும் பார்வைகளும் மற்றொரு பெண்ணிடம் இருந்தே வெளிப்படுவதால், இதை விரும்பாத பெண்கள் அவர்களை எதிரிகளாகக் குற்றவாளிக் கூண்டுக்குள் நிறுத்துகிறார்கள்.
பெண்ணுடலைக் கொண்டாடத்தக்க ஒன்றாக அவர்கள் பார்க்கத் தவறுவதும் இதன் அடிப்படை. தங்களைத் தாங்களே கொண்டாட மறுப்பதும், தவிர்ப்பதும் இருக்கும்வரை, அடுத்த பெண்ணின் மீது குற்றம் காணும் போக்கும் கண்காணித்தலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியான துன்பங்கள் நிகழும்போது கசிந்துருகி, கன்ணீர் சிந்தி, உதவிக்கு ஓடோடி வரும் அதே பெண் மனம்தான் அதன் எதிர் நிலை ரசாயனத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது.
யாரிடம் நிரூபிக்க வேண்டும்?
திருமணத்துக்குப் பின் பெண் உடனடி யாகக் கர்ப்பம் தாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிறுவதன் பின்னணியையும் இவ்வாறே எடுத்துக்கொள்ளலாம். ‘மாதா மாதம் குளிக்கிறாளா?’ என்ற கேள்விக் கணைகள் அவளை நோக்கிப் பறக்கத் தொடங்கும். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பின், பிள்ளை பெறாத பெண் என்பவள் சமூகத்தின் பார்வையில் ‘மலடி’, ‘வறடி’ என்ற பெயர்களில் குறிப்பிடப்படுவது தொடரும். பிற நாடுகளில் எல்லாம் பெண்களைப் பற்றி இத்தகைய சொற்பிரயோகங்கள் உண்டா என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
பிள்ளையில்லாத பெண்களைப் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, எப்படியாவது ஒரு குழந்தை பெற்றேயாக வேண்டும் என்ற மனநிலையை நோக்கி அவர்களை உந்தித் தள்ளுவதால் ஏற்பட்ட பலனைப் பெருவாரியாக அனுபவிப்பவர்களும் அறுவடை செய்பவர்களும் நவீன மருத்துவர்களே. இன்ஃபெர்டிலிடி சென்டர்கள் பெருகியதன் ‘ரகசியம்’ மிக வெளிப்படையானது. இந்த வார்த்தைகள்தான் டெஸ்ட் ட்யூப் பேபிக்காகத் தங்கள் சொத்தை விற்றுத் துன்பப்படும் நிலையில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. எல்லோராலும் அப்படிச் செலவு செய்துவிட முடியுமா?
முன்பெல்லாம் நெருங்கிய உறவினர்களின் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் இப்போது ஒற்றை, இரட்டை என்ணிக்கையில் குழந்தை பெறும் நிலை உருவான பின், அதுவும் குறையத் தொடங்கியது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவாகும் எண்ணம் துளிர் விட்டது. அந்த மனநிலையை நோக்கிப் போக முடியாமல் அதற்கும் தடையாக இருப்பது சாதி என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
பெண் பார்வையில் பெண்
ஆணின் பார்வையில் பெண் உடல் ஒரு கவர்ச்சிப் பண்டம் என்றால், பெண்ணின் பார்வையில் கோணத்தில் அது ஒழுக்கம், தூய்மை, முழுமை என்று அர்த்தம் கொள்கிறது. பிள்ளை பெறும் போதுதான் ஒரு பெண் நூறு சதவீதம் முழுப் பெண்ணாகிறாள் என்ற வினோத விளக்கங்களை எல்லாம் சில ‘அறிவுஜீவி’ ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்களே! இப்படியான உருவாக்கங்களும், செயற்கைக் கருத்தாடல்களும்தான் பெண்ணைப் பெண்ணுக்கு எதிரி என்று பெண்களையே சொல்ல வைத்திருக்கிறது. காலம் காலமாக மனு ஸ்மிருதியிலிருந்து உருவாக்கப்பட்ட விஷக் கருத்தாடல்கள் காலங்கள் கடந்தும் ஆண் மனங்களில் ஆழமாக வேரூன்றியதும், தொடர்ச்சியாக ஆண்களின் எழுத்துகள், கருத்துகள், ஊடகங்கள், பெரிய, சின்னத் திரைகள் என்று காற்றில் பரவி, பெண்களுக்குள் விதைக்கப்பட்டதன் வெளிப்பாடுதான் இன்றளவும் பெண்களை ஆண் பார்வையில் கொண்டு வந்து நிலை நிறுத்தியிருக்கிறது.
சமூகத்தின் அங்கம் பெண் மட்டுமா?
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலையின் போராட்டங்களில் ஈடுபட்ட பெண்களை, மாணவிகளைப் பார்த்து ஒரு மத்திய அமைச்சர், பாலியல் தொழிலாளிகளைப் போல் இருப்பதாகக் குற்றம் சாட்டியதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் பெண்களா? நடிகைகள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தாலும், ஒரு அரசியல் கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் ஒருசேரத் தன் கைகளுக்குள் வைத்திருக்கும் சர்வ வல்லமை பெற்ற பெண் தலைவர் என்றாலும், இந்த ஆண் பார்வையும், ஆண் மையச் சிந்தனையும்தான் பெண்ணை வார்த்தை வன்முறைகளால் வறுத்தெடுக்கிறது, குலைத்துப் போடுகிறது. அதுதான் பிள்ளை குட்டி பெறாதவர்களுக்குப் பிறர் வலி தெரியாது என்றும், ‘ஆம்பிளையை மதிக்கத் தெரிய வேண்டும்’ என்றும் வேறு ஒரு அரசியல் கட்சியின் அதிகார மட்டத்தில் இருக்கும் பெண்ணையும் பேச வைக்கிறது. இதுதான் ஆண் சமூகத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி.
பெண்ணின் வெளி, வீடு என்ற நான்கு சுவர்களைத் தாண்டாத வரையிலும் அவளது பார்வை விரிவடையாது. வெளியில் செல்லும் பெண்கள் மாறிவிட்டார்களா என்ற கேள்வியும் மனதுக்குள் எழத்தான் செய்கிறது. அதற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் சூழலும் மாற வேண்டுமே... சமூகம் என்பது நாலு பேர் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுவார். அந்தச் சமூகத்தின் நான்கு பேரில் ஆணும் சேர்ந்தே இருப்பதை மறுக்க முடியுமா?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago