பெண் விடுதலை என்னும் சமூகநீதி

By ப்ரதிமா

பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை மட்டுமே அவரது அடையாளமாகச் சித்தரித்து மக்களிடையே அவர் மீதான வெறுப்புணர்வை வளர்த்தெடுக்கத் துணிகிறவர்களில் பலரும் அவர் முன்னெடுத்த சமூகநீதிப் பிரச்சாரத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள். மக்களைப் பாகுபடுத்தி அடிமைத்தனத்தில் ஆழ்த்துகிற ஆதிக்கச் சக்திகளைச் சுயமரியாதை, பகுத்தறிவின் துணையோடு களைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி மேடைகள் தோறும் பிரச்சாரம் செய்ததாலேயே அவர் பெரியார். அவர் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சமூகநீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமூகநீதியின் ஓர் அங்கமான பெண் விடுதலைக்காக பெரியார் காட்டிய பாதை சிலருக்கு எட்டிக்காயாகக் கசந்தாலும், பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்த அடிப்படை உரிமைகளை அடைய அதுவே அச்சாணியாக அமைந்தது. பெண்ணுரிமை குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பெரியார் சொல்லிச் சென்ற கருத்துகளே அவர் மிகச் சிறந்த பெண்ணியவாதி என்பதை உணர்த்தும். திருமணம் ஏன் என்பது குறித்து ‘விடுதலை’ இதழில் இப்படி எழுதியுள்ளார் பெரியார்:

‘தற்காலத்தில் தங்களை நாகரிக நாரிமணிகள் என்று கருதிக்கொள்ளும் பெண்கள் எல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும் நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாக பவுடர் பூசிக்கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர, ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. போதிய உரிமை வேட்கை உடைய பெண்களும் தம்மை எங்கே உலகம் தூற்றுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்துவிடுகிறார்கள். இது தீது. ஆணுக்கும் பெண்ணுக் கும் எந்தவிதத்திலும் வேற்றுமை இருக்கக் கூடாது.

தாய், தந்தையர் ஆண்களைவிட மேலாகப் பெண்களுக்குத்தான் அதிக படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும். சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று நினைத்து அவர்களை எந்நாளைக்குமே அடிமைத்தளையில் கட்டிப்போட்டு வைத்திருப்பது என்பது முடிவில் பெருங்கேட்டையே விளைவிக்கும்’.

(நன்றி: ‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான்’ நூல். தொகுப்பு: பசு.கவுதமன், வெளியீடு: பாரதி புத்தாகலயம்)

உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும்; இது ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம் என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்றிருந்த வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவற்றில் சிலவற்றை மட்டுமே இன்று நாம் அடைந்திருக்கிறோம். அவர் காண விரும்பிய பெண் விடுதலையை நோக்கி நாம் நகர்வதுதான் சமூகநீதி நாள் கொண்டாட்டத்துக்குப் பொருள் சேர்க்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE