வாசகிகளின் கொண்டாட்டத்தால் குலுங்கியது மதுரை!

By செய்திப்பிரிவு

திருச்சி, கோவை வாசகிகளின் மனங்களைக் கொள்ளை கொண்ட ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா, கடந்த வாரம் மதுரை வாசகிகளை அதிரடியாக அசத்தியது.

பாத்திமா கல்லூரியில் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற மகளிர் திருவிழாவில் வாசகிகள் பெருமகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். பெண்களின் அன்பார்ந்த, அறிவார்ந்த, ஆரோக்கியமான வாழ்வியலுக்கு வழிகாட்டிய சொற் பொழிவுகள், சிரிப்பதோடு சிந்திக்கவும் வைத்த பேச்சரங்கம், கருத்துக்கு விருந்தளித்த திருக்குறள் நடனம், எழுச்சிக்குப் பறையாட்டம், கொண்டாட்டத்துக்குப் போட்டிகள், பரிசுகள் என மதுரை வாசகிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்த மகளிர் திருவிழா.

வரவேற்புரையில் ‘தி இந்து’ இணைப்பிதழ் ஆசிரியர் டி.ஐ. அரவிந்தன், “பெண் இன்று இணைப்பிதழ், பெண்களின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்கான களமாகச் செயல்பட்டுவருகிறது. மற்ற பெண்கள் இதழ்களின் உள்ளடக்கத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டுச் செயல்படுகிறது. அதற்கு ‘பெண் இன்று’வின் விவாதக் களத்தை ஓர் உதாரணமாகச் சொல்லாம். எத்தனையோ விதமான சமூகப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும்போது, துறை சார்ந்த நிபுணர்களைவிட, வாசகிகளான உங்களுடைய கருத்து களுக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. இந்த மகளிர் திருவிழா, பெண்களுக்கான சிறப்பிடத்தைப் பெண்களே உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. ‘பெண் இன்று’ இணைப்பிதழில் மட்டுமல்லாமல், ‘தி இந்து’ நாளிதழ் முழுவதுமே பெண் சார்ந்த நுண்ணுணர்வுடன் நடத்தப்படுகிறது. பெண்கள் பிரச்சினைகளை நம் நாளிதழின் மையத்துக்குக் கொண்டுவந்து விவாதிக்கிறோம்” என்று பேசினார்.

அறிவார்ந்த சிந்தனைகள்

மதுரை மகளிர் திருவிழாவில் இடம்பெற்றிருந்த சிறப்புரைகள் அனைத்துமே வாசகிகளின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. சமூக வலைதளங்களில் பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறைத் தலைவர் எஸ். முருகன் பேசினார்.

குடும்ப வாழ்க்கையையும், பணி வாழ்க்கையையும் சமரசம் செய்துகொள்ளாமல் பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான வெற்றி சூத்திரங்களை மதுரை அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் பகிர்ந்துகொண்டார். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஆலோசனைகளை பாத்திமா கல்லூரி முதல்வர் முனைவர் கா.பாத்திமாமேரி வழங்கினார். இவர்களுடன், மதுரை மாநகராட்சி துணை ஆணையர் செ.சாந்தி, 'மைக்ரோ பைன் குளோத்திங்' நிறுவன இணை மேலாண் இயக்குநர் சுபா பிரபாகர் இருவரும் பெண்கள் தலைமைப் பண்புடன் அவரவர் துறையில் சிறந்து விளங்குவதற்கான வழிமுறைகளை விளக்கினார்கள். ‘விவசாயம் கற்போம்’ என்ற தலைப்பில் பெண் விவசாயி பிரசன்னா பத்மநாபன் விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்துகொண்டார். வாசகிகளின் மனநலம் தொடர்பான கேள்விகளுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கீதாஞ்சலி பதிலளித்தார்.

சுவையான பேச்சரங்கம்

‘வீட்டுக்குத் தேவை மீனாட்சி ஆட்சியா? சொக்கர் ஆட்சியா?’ என்ற மதுரை மண்ணுக்கு ஏற்ற தலைப்பில் நடந்த பேச்சரங்கில் நடுவர் ஏ. ரேணுகாதேவி, பேச்சாளர்கள் மகேஸ்வரி, ஆஷிலா கலந்துகொண்டனர். இந்தப் பேச்சரங்கம் குடும்பத்தில் நிலவும் ஆண், பெண் பாகுபாடுகளை நகைச்சுவையுடன் விளக்கியது. வீட்டுக்குத் தேவை மீனாட்சி ஆட்சிதான் என்ற தீர்ப்பை வாசகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

போட்டிகளும் ஆச்சரியப் பரிசுகளும்

திருச்சி, கோவையைப் போலவே மதுரை மகளிர் திருவிழாவிலும் உற்சாகமான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாசகிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றமாதிரி ரங்கோலி, ‘மைமிங்’ (வசனமில்லா நாடகம்), பாட்டு, நடனம் போன்ற போட்டிகள் நடந்தன. வாசகிகளை ஜாலியாக விளையாட வைக்கும் நோக்கத்தில் ‘பொட்டு ஒட்டும் போட்டி’, ‘பலூன் உடைக்கும் போட்டி’ போன்றவையும் நடந்தன. மதுரை மாநகரைப் பற்றி சிறப்புக் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குச் சரியான பதிலளித்த வாசகிகளுக்கு ஆச்சரியப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ரங்கோலியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற ரங்கோலி போட்டியில் வாசகி சுகப்பிரியா முதல் பரிசையும், ராஜகுமாரி இரண்டாவது பரிசையும், செல்வி மூன்றாவது பரிசையும் தட்டிச்சென்றனர். சுகப்பிரியாவின் ரங்கோலி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கா விட்டால் எந்த மாதிரியான விளைவைச் சந்திக்க நேரிடும் என்பதை வண்ணமயமாக விளக்கியிருந்தது. அதேமாதிரி, மற்ற வாசகிகளின் ரங்கோலியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுவாக விளக்கும் விதத்தில் அமைந்திருந்தன.

காதலர் தினம் கொண்டாடிய பாடல்கள்

மதுரை மகளிர் திருவிழா காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றதாலோ, என்னவோ வாசகிகள் பலரும் பாட்டுப் போட்டியில் காதல் கீதங்களாகவே பாடினார்கள். அதிலும், வாசகி அருணா, தான் பாடிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ பாடலை, தன் கணவருக்கு ‘டெடிகேட்’ செய்வதாக அறிவித்தார். வாசகிகள் பலரும் இதை ஆர்ப்பரித்து வரவேற்றனர். ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் பாடிய இளம் வாசகி நான்சி சில்வியா முதல் பரிசைத் தட்டிச்செல்ல, ‘ராசாவே உன்னை நம்பி’ பாடல் பாடிய கீதா இரண்டாவது பரிசையும், ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலைப் பாடிய சுமதி ராஜகோபால் மூன்றாவது பரிசையும் பெற்றனர்.

ஜாலி போட்டிகள்

மகளிர் திருவிழாவின் ஜாலி போட்டிகளாக நடைபெற்ற பொட்டு ஒட்டும் போட்டியில் புவனா பாண்டியனும், பலூன் உடைக்கும் போட்டியில் ஜெயலட்சுமியும் முதல் பரிசுகளைத் தட்டிச்சென்றனர். அத்துடன், நடனப்போட்டியில் சிறப்பாக நடனமாடிய ஐந்து வாசகிகளுக்குப் பரிசளிக்கப்பட்டது. போட்டிகளில் கலந்துகொண்ட எல்லா வாசகிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் விழாவில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் பரிசுகள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், விழாவில் தன்னார்வலர்களாகச் செயல்பட்ட பாத்திமா கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது தவிர, மூன்று வாசகிகளுக்கு பம்பர் பரிசுகளும் வழங்கப்பட்டன. தி இந்து - பெண் இன்று மகளிர் திருவிழாவின் இந்தப் பரிசு மழையில் வாசகிகள் திக்முக்காடிப்போனார்கள்.

மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை கௌரியும், தியாகராஜர் கல்லூரி மாணவி ஜெயவல்லியும் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.

விழாவை ‘தி இந்து’வுடன் ஹார்லிக்ஸ் ஓட்ஸ், லலிதா ஜூவல்லரி, எல்ஜி அல்ட்ரா கிரைண்டர், மீகா புட்ஸ், பிரேலேடி குக்கிங் ஹேப்பினஸ், ஸ்டைல் வாக் காலணிகள், பிருத்வி உள்ளாடைகள், விஎல்சிசி ஹெல்த்கேர் லிட்., ‘மை டிரீம்ஸ்’ உள்ளாடைகள், தங்கமயில் ஜுவல்லரி, எஸ்விஎஸ் கடலைமாவு, அகல்யா பொட்டிக், சாஸ்தா நல்லெண்ணெய், லியோ காபி, ஸ்ரீசபரீஸ் உணவகம், வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

பேச்சரங்கம்

வீடுக்குத் தேவை சொக்கர் ஆட்சியே: ஆஷிலா

தந்தையின் கடமையானது பெண்ணின் பிரசவ வேதனையைவிடவும் பல மடங்கு அதிகம். ஏனென்றால் இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையையும், பாதுகாக்கும் பொறுப்பையும் தூக்கிச் சுமப்பவர்கள் ஆண்களே. அதிலும் தந்தை, கணவர் எனப் பல நிலைகளிலும் தன்னை வருத்திக்கொண்டு ஆண்கள் எல்லோரையும் பாதுகாத்துவருகிறார்கள். வாழ்நாள் முழுவதும் இதைத் தூக்கிச் சுமப்பவர்கள் ஆண்களே. ஆகையால்தான் பெண்களே தங்களுடைய தந்தையின், கணவரின் பெயரைத் தங்களுடைய பெயரின் முதலெழுத்தாகப் போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள்.

மீனாட்சி ஆட்சியே: மகேஸ்வரி

கணவனை இழந்த பெண்கூடத் தனித்து நின்று தன் குழந்தையை வளர்த்தெடுப்பார். ஆனால் பெண் துணையின்றி குழந்தைகளை வளர்க்கும் ஆண்கள் மிகக் குறைவே. ஒரு குழந்தைக்கு ஒரு ஆணால் ஒரே ஒரு இட்லியை ஒழுங்காக ஊட்டிவிட முடியுமா? சுயநலம் கடுகளவும் இன்றி தன்னைச் சார்ந்தவர்கள் மேன்மையான நிலையை அடைய இடைவிடாது உழைப்பவர்கள் பெண்களே. பெண்ணின் கடும் உழைப்பும் தியாகமும் மரத்தின் வேர்போல. எவ்வளவு ஆழமாக இருந்தாலும் வெளியில் தெரிவதில்லை. பெண்கள் பெருந்தன்மையானவர்கள். ஆகவேதான் தாயின் பெயரை முதலெழுத்தாகச் சூட்டிக்கொள்ளச் சட்டம் வந்த பின்பும் தந்தை, கணவர் உள்ளிட்ட ஆண்களுக்கு இன்னமும் அந்த அங்கீகாரத்தை வழங்குகிறார்கள்.

தீர்ப்பு: மீனாட்சி ஆட்சியே சிறந்தது - நடுவர் ரேணுகாதேவி

இன்றும் ஓடாகத் தேய்ந்து உழைத்துச் சம்பளம் முழுவதையும் மனைவியிடம் கொடுக்கும் கணவன்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனைவிக்கும் குழந்தைக்கும் விலை உயர்ந்த ஆடைகளை வாங்கிக் கொடுத்துவிட்டுத் தனக்கெனச் சொற்பமாகச் செலவழிப்பவர்களே அதிகம்.

அதே சமயம், ஆணுக்கு இணையாக உழைத்துக் குடும்பத்தை வளர்க்கும் பெண்களும் இருக்கிறார்கள். பொருளாதாரச் சரிவில் உலக நாடுகள் தடுமாறியபோதும் இந்தியா சமநிலையில் இருக்கக் காரணம் இந்தியப் பெண்களின் சிறுசேமிப்புப் பழக்கம்தான். கணவர் தோற்றுவிட்டால் அவருக்கு ஊக்கம் அளித்து நிமிர்ந்து நிற்கச் செய்யும் பெண்கள் ஏராளம். எதற்கும் என் மனைவியிடம் கேட்டுவிட்டு செய்கிறேன் எனச் சொல்லும் ஆண்கள்தான் வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆக, மீனாட்சி ஆட்சியே சிறந்தது.

துணிந்தால்தான் தீர்வு கிடைக்கும்

முனைவர் எஸ்.முருகன்., இ.கா.ப. (காவல்துறைத் தலைவர், தென்மண்டலம், மதுரை)

புதிய ஸ்மார்ட் போன் வாங்கும்போது பழைய போனை விற்று விடுகிறோம். விற்கும் முன் போனில் நாம் எடுத்த போட்டோ முதற்கொண்டு அத்தனை தகவல்களையும் அழித்திருக்கலாம். ஆனால் ஒரு முறை பதிவான தகவல் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடும். அவற்றை எப்படி வேண்டுமானாலும் கையாள முடியும், பரப்ப முடியும். நம்முடைய தனிப்பட்ட தகவல்களை யாரோ ஒரு நபர் தவறாகக் கையாள அனுமதிப்பது நாம்தான். சொல்லப்போனால் நாம் எல்லோருமே சைபர் கிரிமினல்கள்தான். நம் போனுக்கு வந்துசேரும் ஃபார்வர்ட் மெசேஜ் உண்மையா பொய்யா என்றுகூட பார்க்காமல் அப்படியே அடுத்தவருக்கும் பரப்புகிறோமே! இது மிகப் பெரிய தவறு.

நம்மிடம் ஒரு போன், அதிலும் இண்டர்நெட் இருந்துவிட்டால் நாமே அத்தனை தனிப்பட்ட விஷயங்களையும் உலகத்திடம் பரப்பிக்கொண்டே இருக்கிறோம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளில் 90 சதவீதம் பதிவாவதே இல்லை. துணிந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

உயர்ந்த வேலையைப் பெற

செ. சாந்தி, மதுரை மாநகராட்சி துணை ஆணையர்

உயர்ந்த வேலையைப் பெற முதலில் தயக்கத்தை உதறித்தள்ளுங்கள். என் வாழ்க்கை அனுபவங்களி லிருந்தே அதைச் சொல்கிறேன். பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். ஆனால் பொறியியல் கவுன்சிலிங்கின் போது தயக்கத்தின் காரணமாக எந்தத் தகவலையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. இதனால் நான் படிக்க ஆசைப்பட்ட கல்லூரியில் அனுமதி கிடைத்தும் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. அடுத்து, பொறியியல் பட்டப்படிப்பில் என்னால் தேர்ச்சி பெற முடியாது எனப் பயந்து விலக நினைத்தேன். அப்போது என் தாயின் நம்பிக்கை என்னை உந்தித் தள்ளியது. ஊக்கத்தோடு படித்து அத்தனை பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன். ‘தயக்கம்’ தான் மிகப் பெரிய எதிரி என்பதை ஆழமாக உணர்ந்தேன். நம்மால் முடியாது என நாமே நமக்குத் தடைபோட்டுக்கொள்கிறோம். தயக்கம் விடுத்து, இலக்கை நிர்ணயித்து நம்பிக்கையோடு நடைபோடுங்கள்.

கனவு காணுங்கள்

டாக்டர் ரோகிணி ஸ்ரீதர், தலைமை செயல் அதிகாரி, அப்போலோ சிறப்பு மருத்துவமனை, மதுரை.

குழந்தை வளர்ப்பின் போதே நம் சமூகம் பெண்ணை ஒரு வரையறைக்கு உட்படுத்திவிடுகிறது. காலங்காலமாக ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்கிறது. பெண் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வி அளிக்கும் பெற்றோர்கூட சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை மட்டுமே படிக்கவைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெண் வீட்டுக்குரியவளாகவே பார்க்கப்படுகிறாள். நிச்சயமாகப் பெண்ணைப் போல வீட்டையாராலும் கட்டிக்காக்க முடியாது. ஆனால் அதைத் தாண்டியும் அவர்களால் பல சாதனைகள் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும். பெரிய கனவுகள் காணுங்கள். தினந்தோறும் புதியவற்றைக் கற்றுக்கொள்ள ஆவலாக இருங்கள்.

கல்வித் துறையில் சிறக்க

முனைவர் சகோ. கா. பாத்திமா மேரி, முதல்வர், பாத்திமா கல்லூரி.

எதற்காகப் பெண்களுக்கு ஒரு பிரத்யேகத் திருவிழா? ஏனென்றால் குடும்பமும், சமூகமும் பெண்களைக் கொண்டாடத் தவறுகிறது. ஒவ்வொரு தாயும் அறிமுகப் படுத்தப்படாத சாதனையாளரே! ஆண்களைவிடத் துணிச்சல்மிக்கவர்கள், வலிமைவாய்ந்தவர்கள் பெண்களே என்கிறது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. ஓர் உயிரைத் தன் உடலுக்குள்ளேயே சுமந்து அத்தனை வலிகளையும் தாங்கி சிசுவைப் பெற்றெடுப்பவரைக் காட்டிலும் யார் பலசாலி? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை அனைத்தும் சமூகம் பெண்ணுக்காகக் கட்டமைத்ததே. பெண்ணுக்குத் தேவை கட்டுப்பாடுகள் அல்ல, சுதந்திரமே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாலின உறவு மட்டும்தான் இருக்க முடியும் என்ற குறுகிய எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள். ஆணும் பெண்ணும் விலகி நின்று உலகை மாற்ற முடியாது. சமமாக நடைபோட்டால் மட்டுமே அது சாத்தியம்.

சூழ்நிலையைக் கையாளுங்கள்

டாக்டர் வி. கீதாஞ்சலி, அரசு ராஜாஜி மருத்துவமனை மனநல மருத்துவ நிபுணர்.

எனக்குத் திறமை இல்லை, குழந்தைகள் என் சொல் பேச்சைக் கேட்பதில்லை, என்னை மதிப்ப தில்லை போன்ற எதிர்மறை சிந்தனை களை முதலில் தூக்கி எறியுங்கள். சிந்தனைதான் வாழ்க்கையாக மாறும். என் மீது அன்பு இல்லை என எண்ணும்போது கோபம், விலகியிருப்பது, சண்டைபோடுவது என நாமே நம்மை மோசமான நிலைக்குத் தள்ளிவிடுகிறோம். சூழ்நிலைகள் மட்டுமே உள்ளன, பிரச்சினைகளே இல்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்திக்கொண்டால் வாழ்க்கையில் கவலையே இல்லை. சூழ்நிலையைக் கையாளத் தெரிந்தால் எதுவுமே பிரச்சினை இல்லை.

பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது எளிமையான நேர நிர்வாகம். எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். வேலையைப் பகிர்ந்தளியுங்கள். உங்களுக்கான ஓய்வு நேரத்தை ஆக்கபூர்வமாகத் திட்டமிடுங்கள்.

உங்கள் கையில்தான் இருக்கிறது

சுபா பிரபாகர், தொழில்முனைவோர்.

வாழ்க்கைத் திறன் நிர்வாகம் என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவசியம். ஒவ்வொரு நாளையும் நாம் எப்படி வடிவமைக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் தனிப்பட்ட வாழ்க்கையும் வெளியுலக வாழ்க்கையும் தீர்மானமாகும். உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என கவலைப்படத் தேவை இல்லை என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது சாத்தியமில்லை. ஆனால் நீங்கள் நினைத்தால் வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக வடிவமைக்க முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது நம் கையில்தான் இருக்கிறது.

விவசாயத்திலும் சாதிக்கலாம்

பி.பிரசன்னா பத்மநாபன், நெல் விளைச்சலில் தமிழகத்தின் சாதனை பெண் விவசாயி.

நான் நெல் விளைச்சலில் சாதனை படைக்கக் காரணம் என் தந்தை. ஆறு வயதில் அப்பா என்னை வயற்காட்டுக்கு அழைத்துச் செல்வார். ஈசான மூலையில் விதை விதைத்தலில் தொடங்கிக் கதிர் அறுத்தல் வரை அத்தனையும் என்னை முதல் ஆளாகச் செய்ய ஊக்குவிப்பார். இன்று வெற்றிப் பதக்கம் பெற அதுவே தொடக்கப் புள்ளி. படிக்கும் காலத்தில்கூட வயல் வரப்பில் உட்கார்ந்துதான் படிப்பேன். பின்னர் மேற்படிப்பு படித்துக் கல்யாணம், குழந்தைகள் என்றானதும் வாழ்க்கை மாறிப்போனது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் விவசாயத்தில் ஆர்வம் உண்டானது. திருச்சியில் உள்ள சின்னப்பட்டியில் 68 செண்ட் நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை உரம் போட்டு, வெறும் 2 கிலோ நெல் மணி விதைத்தேன். இன்று 16,115 கிலோ நெல் மகசூல் செய்து தமிழக அரசின் தங்கப் பதக்கமும் 5 லட்சம் ரூபாயும் நான்கு ஆண்டு உழைப்புக்கான பரிசாகப் பெற்றிருக்கிறேன். படித்துவிட்டோம் என்பதால் விவசாயத்தைக் கைவிடக் கூடாது. அதிலும் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

குழந்தை வளர்ப்பின் போதே நம் சமூகம் பெண்ணை ஒரு வரையறைக்கு உட்படுத்திவிடுகிறது. காலங்காலமாக ஏதோ ஒரு விதத்தில் அது தொடர்கிறது. பெண் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வி அளிக்கும் பெற்றோர்கூட சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை மட்டுமே படிக்கவைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெண் வீட்டுக்குரியவளாகவே பார்க்கப்படுகிறாள். நிச்சயமாகப் பெண்ணைப் போல வீட்டையாராலும் கட்டிக்காக்க முடியாது. ஆனால் அதைத் தாண்டியும் அவர்களால் பல சாதனைகள் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும். பெரிய கனவுகள் காணுங்கள். தினந்தோறும் புதியவற்றைக் கற்றுக்கொள்ள ஆவலாக இருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்