‘இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள…’ - எம்.ஜி.ஆர். நடித்த ஒரு திரைப்படப் பாடல். எழுதியவர் கவிஞர் மருதகாசி. அந்தப் பாடல், பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும், எவ்வாறு உடை உடுத்த வேண்டும் என்று விலாவரியாகச் சொல்லிச் செல்கிறது.
அதற்கும் முந்தைய பழைய பாடல் ஒன்று “புருஷன் வீட்டில் வாழப் போகும் தங்கச்சி கண்ணு”க்கு புத்திமதிகளாகச் சொல்லி முழங்குகிறது. இந்தக் கருத்துகளைத்தான் ‘பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’ என்கிற பழமொழியும் வழிமொழிகிறது.
‘இதையெல்லாம் ஏன் இப்போது கிளறி தூசு தட்ட வேண்டும்?’ என்று கேட்பது புரிகிறது. ஆனால், என்ன செய்ய? காலம் அப்படியேதானே இருக்கிறது. பெண்கள் எல்லாம் முன்பு போல் இல்லை, படித்து வேலைக்குப் போய் சம்பாதித்துக் கொண்டுவந்து குடும்பத்தையும், அதன் சுமையையும் தங்கள் தோள்களில் சுமக்கத் தயாராகிப் பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், ஆண்கள் மட்டும் 40 ஆண்டுகள் பிந்தையவர்களாக, தங்கள் பழமை மாறாத சிந்தனைகளுடன் அப்படியே தேங்கிப் போயிருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. தங்கள் செயல்களாலும், சொற்களாலும் அவர்களே நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். கால மாறுபாட்டுக்கு ஏற்ப தங்கள் உணவு, உடை, பழக்க வழக்கங்கள் அனைத்தையும் மாற்றிக் கொள்ளும் சமூகம், பெண் என்று வரும்போது மட்டும், மாறாத பழமையைப் போதிக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சி நவீன தகவல் தொடர்பு சாதனங்களைக் கையடக்கமாக உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்தபோதும் அவற்றைப் பழமைவாதச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், வாட்ஸ் – அப் இங்கெல்லாம் ‘கருத்து கந்தசாமிகள்’ பல்கிப் பெருகியிருக்கிறார்கள். பெண்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக இந்தச் சாதனங்களைப் பயன்படுத்த முனையும்போது பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கி எழுகிறார்கள். ஒரே அடியில், பெண்ணின் நடத்தை சார்ந்து மிக எளிதாக அமிலமென வார்த்தைகளை அள்ளி இறைக்கவும் அவர்களால் முடிகிறது.
பெண்கள் சிந்தனையளவில் தங்களைவிட ஒரு படி மேலே இருந்தால் அதை ஆண்களால் ஏற்க முடிவதில்லை. சொற்களால் இழிவுபடுத்துவது, மோசமானவள் என்று பட்டம் சூட்டுவது, இப்படி உடை உடுத்திக்கொள், அடக்கமாக இரு, துப்பட்டா போட்டுக்கொள், குர்த்தாவின் மேல் பொத்தானைப் போடு, தாவணி அல்லது சேலை கட்டிக்கொள் என்று ஆணைகள் பிறப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆணையிடும் வர்க்கம் அல்லவா ! காலங்காலமாக ரத்தத்தோடு ஊறிக் கலந்துபோன பழக்கத்தை மாற்றிக்கொள்வது கொஞ்சம் சிரமம்தான்.
பெண்ணுக்கென்று சொந்தமாகக் கருத்துகள், ஆசைகள், அபிலாஷைகள் எதுவும் இருக்கக் கூடாது. மூடப் பழக்க வழக்கங்கள், பிற்போக்குக் கருத்துகள் இவை பற்றிப் பெண் பேசக் கூடாது. சொந்த சிந்தனையோ, சுய புத்தியோ இல்லாமல், பிடித்து வைத்த களிமண் உருண்டைகளாக, சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு, அடங்கிப்போக வேண்டும் என்பதாகவே அவர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது.
பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயர்களில் இழுத்துப் போர்த்திக்கொண்டு குடும்பக் குத்து விளக்குகளாகப் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும், எதிர்பார்க்கும் அதே மனங்கள்தான், அன்னியப் பெண் ஒருத்தியை நடுத் தெருவில் கோழியைப் போல உரித்து நிர்வாணப்படுத்திப் பார்க்கவும் நினைக்கிறது என்பது எத்தனை முரண்! எங்கிருந்தோ ஒரு பெண், நாடுகள், கண்டங்கள் பல கடந்து இங்கு கல்வி கற்பதற்காக வந்தாள் என்றால், அந்த நாட்டின் மீதும், அதன் குடிமக்கள் மீதும் உள்ள நம்பிக்கையுணர்வும் அதற்கு முக்கியக் காரணங்களில்லையா? ஏதோ ஒரு காரணம் கிடைத்தாலும் போதும், பெண்ணைக் குழி தோண்டிப் புதைக்க. பெண்ணை தெய்வம் என்று உயர்த்திப் போற்றும் அதே மனம் காலில் போட்டு மிதிக்கவும் தயங்குவதில்லை. நம் கோயில்களில் பயபக்தியுடன் கும்பிட்டு முடித்த அடுத்த நொடியே, கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் என்ற பெயர்களில் குத்தாட்டங்களையும், ரெக்கார்டு டான்ஸ்களையும் ரசிப்பது என்ன மாதிரியான வடிவமைப்பு என்று புரியவில்லை. எதிரெதிர் துருவங்களாக இந்த மனங்கள்தான் எப்படி எல்லாம் செயல்படுகின்றன.
நீ பெண், நீ இப்படித்தான் இருக்க வேண்டும், உனக்கான உலகம் மிகக் குறுகியது, இருள் சூழ்ந்த உலகம் உன்னுடையது, மற்றவர்களுக்குப் போக எஞ்சிய மிச்ச மீதங்களே உனக்கு உரியவை, நீ அடிமையாக வாழப் பிறந்தவள் - இவற்றைத்தான் ஆண் உலகம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டும், பெண் மீது வலிந்து திணித்துக்கொண்டும் இருக்கிறது. இப்போது அந்தப் புகழ் மகுடத்தில் மற்றுமோர் புதிய மயிலிறகாக, ‘நீ ஒருவனைக் காதலித்தால், கலப்பு மணம் செய்துகொண்டால், நீ எங்கள் மகளாகவோ, சகோதரியாகவோ இருந்தாலும், எங்கள் ‘கௌரவ’த்தைக் காப்பாற்றிக்கொள்ள உன்னைக் கொல்வோம், அல்லது நீ விரும்பிய உன் துணைவனைக் கொன்று வீசவும் தயங்க மாட்டோம்’ என்று பட்டவர்த்தனமாகக் கொக்கரிக்கிறது. அதைப் பொதுவெளியில் பதிவேற்றி சாதிப் பெருமையாக நிலை நிறுத்தவும் முனைகிறது. அபத்தங்கள் எல்லாம் அசகாய சூரத்தனங்களாக அவர்களுக்குத் தோன்றுகின்றன.
யுகம் யுகமாக இந்தப் பாலினப் பாகுபாடுதான் முகத்தில் அறையும் நிஜமாக இருக்கிறது. உலகெங்கிலும் ஆண்களின் கால்களுக்குக் கீழே தள்ளி மிதிக்கத்தக்க நிலையில்தான் பெண் சமூகம் அடிமைச் சமூகமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. வேர் கொண்டு பூமிக்குள் அழுந்தி நிற்கும் இந்தப் பாகுபாட்டின் சல்லி வேர்களையும் மிச்சமில்லாமல் கிள்ளி வீச வேண்டும் என்பதுதான் நம் பேரவா. அதற்காக எத்தனை அவமானங்களையும் ஏற்போம். அவன் ஆண்; அவன் எப்படியும் இருக்கலாம் என்ற பம்மாத்துகளையும் சேர்த்தே நொறுக்குவோம். கல்ப கோடி ஆண்டுகள் கடந்தாலும் விட்டுவிடுவதாக இல்லை.
கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago