பெண் எனும் பகடைக்காய்: கல்வியின் பெயரால் தொடரும் சாதிய வன்மங்கள்

By பா.ஜீவசுந்தரி

ஹைதராபாத் பல்கலைக்கழக அறிவியல் புலத்தில் பி.எச்டி. ஆய்வு மேற்கொண்டு வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை, அனைவரிடமும் பெரும் சர்ச்சைகளையும் கேள்விகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக மாணவ/மாணவிகளின் ‘தன் மரணங்கள்’ நாடெங்கும் அதிர்வலைகளை எழுப்பியபடி இருக்கின்றன. அதிலும் கல்விக்கூடங்களில், உயர் கல்விக் கூடங்களில் நிகழும் மரணங்கள், அதன் பின்னிருக்கும் சாதியின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றன.

தலித் என்பதாலேயே தொடர்ச்சியாக இழிவுகளைச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் நிலை அவர்களைத் தொட்டுத் தொடர்ந்தபடி இருக்கிறது. கிராமப்புறங்களில் ஊர் என்றும் சேரி என்றும் ஊரே இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் இந்த வேறுபாடு தொடங்கிவிடுகிறது.

நகரங்களில் வெளிப்படையாகத் தெரியாத சாதி, கிராமப்புறங்களில், சிறு நகரங்களின் பள்ளிகளில், மாணவர்களின் கைகளில் வண்ணமயமான பட்டைகளாக (Bands) வெளிப்படத் தொடங்கிவிட்டது. சாதிக்கேற்ற நிறம், அந்த நிறத்துக்கேற்றவாறு நடத்தப்படும் நிலை எனச் சாதியம், வெவ்வேறு வடிவம் எடுத்துத் தலைவிரித்தாடுகிறது. பொருளாதார ரீதியாக தலித் மக்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்காதவரையிலும் எத்தகைய சீர்திருத்தங்களில் ஈடுபட்டாலும் அது தலித்துகளை மட்டுமல்லாமல், ஒடுக்கப்படும் அனைத்துச் சாதி மக்களையும் அழிவுப் பாதையை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதற்கான அத்தாட்சியே இவை அனைத்தும்.

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளவே முடியாத அளவுக்கு அவை வேரூன்றிக் கிடப்பது அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதிலும் தலித் பெண்ணாக இருந்தால், அடிமைக்கும் அடிமையாக நடத்தப்படும் நிலை. கல்லூரி வளாகத்துக்குள் பிற இடைநிலைச் சாதி மாணவ, மாணவிகளால் தலித் மாணவிகள் நடத்தப்படும் விதம் ஒருபுறம் என்றால், கல்வி நிறுவனமே அதற்குச் சற்றும் குறையாமல் பாரபட்சத்தை வாரி வழங்குகிறது.

பொதுவாக, கல்வி வளாகங்களுக்குள் காணப்படும் தீண்டாமை மிக நுட்பமானது. அடிப்படை வசதியின்மை, சுகாதாரமான குடிநீர், தங்கும் விடுதிகளில் பாரபட்சம் எனப் பிரச்சினைகள் அனைத்து மாணவர்களையும் தாக்கினாலும் அதனுள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அடுத்த உள் அடுக்குகளில் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கின்றனர். இதனைக் கொடூரமான தாக்குதல் என்றே சொல்லலாம். எல்லோருக்கும் ஒரு அடி என்றால், தலித்தாகப் பிறந்ததால் அவர்கள் கூடுதலாக இரண்டு அடிகளைப் பெற்றே தீர வேண்டும். இது மிகவும் நுட்பமான வன்முறை.

உதாரணமாக, பொதுத் தேர்வுகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பிறப்பு குறித்து விடைத்தாள்களைத் திருத்துபவர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் அதிக மதிப்பெண் பெறும் தலித் மாணவர்கள் அதே பாடத்துக்காக பிராக்டிகல் தேர்வில் ஈடுபடும்போது ஒப்பீட்ட அளவில் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தான் பெறுவார்கள். ஏனென்றால், அந்தத் தேர்வுகள் கல்வி நிறுவன வளாகத்தில், அறியப்பட்ட ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும். அந்த மாணவர்களின் சாதி குறித்து ஆசிரியர்களுக்குத் தெரியும் என்பதால் மதிப்பெண்கள் வழங்கும்போது அவர்களின் கை இயல்பாகவே உள்ளிழுத்துக்கொள்கிறது.

இந்த நுண் அரசியல் கிராமத்தின் தொடக்கப் பள்ளிகள் முதல், நாட்டின் மதிப்பு மிக்க உயர் கல்வி வளாகங்கள்வரை தொடர்வது வேதனை. திறன்கள் நிரூபிக்கப்படும் தேர்வுகளிலேயே இப்படி ஒதுக்கப்படுகிறார்கள் என்றால் வகுப்பறைகளில், விடுதிகளில் ஆசிரியர் – சக மாணவர் உறவுகளில், அன்றாடச் சந்திப்புகளில், உரையாடல்களில், பாடங்களுக்கு விளக்கம் அளிப்பதில், விளையாட்டு மைதானங்களில், கண் பார்வையில், கை தொடுகையில் எப்படியெப்படியெல்லாம் பாரபட்சமாக நடத்தப்படுவார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல.

நவீன தீண்டாமையின் வெளிப்பாடுகள்

பல தோழிகளிடமும் அவர்களின் பள்ளிக் காலத்து நினைவுகளைப் பற்றி பேசும்போது, தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டது மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவே இருந்தது.

முதல் தலைமுறையாகக் கல்லூரியில் சேர்ந்து படித்த தோழி, தற்போது அரசு அலுவலராக இருப்பவர். அவர் தன் கடந்த கால பள்ளி அனுபவங்களையும் கல்லூரியில் அவர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் விவரித்தபோது அந்த வலியும் வேதனையும் நமக்குள்ளும் கடத்தப்பட்டதை உணர முடிந்தது. இத்தனைக்கும் அவர் இட ஒதுக்கீட்டில் மட்டுமல்லாமல், மதிப்பெண் அடிப்படையிலும் நல்ல தேர்ச்சியைப் பெற்றவர். பெண்ணாகப் பிறந்ததால் முதல் தவணை பாரபட்சம். தவிர, தலித் சமூகத்தில் பிறந்ததால் இன்னொரு மடங்கு கூடுதலாகப் பாரபட்சம்.

ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இரட்டைக் குவளை முறை சாத்தியமில்லை என்பதைத் தவிர ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு விடுதி வளாகத்திலும் ஒரு சேரியை எப்படியாவது உருவாக்கிவிடுகிறார்கள். ஒரு கேலிப் பார்வையும் ஏளனப் புன்னகையும்கூடப் போதும், ஒரு தலித் பெண் உள்ளுக்குள் சுருங்கிப்போக.

ஆயிரம் தலைமுறை அறிவொளி

சேரியிலோ காலனியிலோ பிறந்து, முதல்தலைமுறையாகக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மருண்ட பார்வையையும் எதைக் கண்டும் அச்சத்துடன் ஒதுங்கியே போகும் அவளது நிலையையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தனக்குப் பிறகு ஆயிரம் தலைமுறைகளுக்கு அறிவொளி ஏற்படுத்தப் போகிறவள். அவளை ஒரே பார்வையில் பொசுக்கிவிட்டால், பின் அவள் எப்படி எழுந்து நிற்க முடியும்? இந்த நடைமுறையைத்தான் இட ஒதுக்கீட்டின் மீதான கடும் வெறுப்பாக வெளிப்படுத்துகிறது முன்னேறிய சமூகம்.

முடிந்தால் முகத்துக்கு நேராகவே பேசுவது. இல்லையென்றால் சாடைமாடையாகக் குத்திக் கிழிப்பது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் சண்டைக்காரி என்ற பட்டத்தோடு முத்திரை குத்தப்படுவதுடன் ஓரங்கட்டப்படும் நிலையையும் எதிர்கொள்ள வேண்டும்.

உணவு, உடை, பழக்கவழக்கம் என அனைத்திலும் பண்பாட்டு ரீதியான தீண்டாமைச் சாட்டை அவள் மீது சொடுக்கப்பட்டுக்கொண்டேயிருந்தால் அவளுக்குள் ஆளுமைப் பண்பு எப்படி உருவாகும்? எது நடந்தாலும் கலங்காமல் எதிர்த்துப் போராடக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியவர்கள் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கச் செய்தால் அவர்கள் சிந்தனை பாழுங்கிணற்றையும், உத்தரத்தையும், ரயில் தண்டவாளங்களையும் நோக்கித்தானே பாய்கிறது? இதனைத் தற்கொலை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? உண்மையில் இது சமூகக் கொலை அல்லவா! ஆண், பெண் என இரு பாலாருக்கும் இது பொருந்தும். இதைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் என்ன? ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுகின்றனவா? மாநிலங்கள் மாறினாலும் நாடு முழுக்க அவலம் மாறுகிறதா? அரசுகளே துணை போகும் நிலையை நோக்கி முன்னேறியிருப்பதுதான் கண்ட பலன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்