அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகக் குரல்கொடுக்கிற பெண்கள் புறக்கணிப்புக்கு ஆளாவது நமக்குப் புதிதல்ல. நீதி கேட்டும் உரிமையைக் கோரியும் குரல் எழுப்புகிறவர்கள் எப்போதும் கலகக்காரர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களது குரல் உடனுக்குடன் ஒடுக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும் நடக்கும். டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து மூன்று பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதும் அப்படியான செயல்பாடுகளில் ஒன்றுதான்.
வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது வழக்கமான பாடத்திட்ட சீரமைப்பு நடவடிக்கை இல்லை என்பதை உணர்த்துகிறது பல்கலைக்கழகம் சார்பாகச் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்துவந்த போராளியான மகாஸ்வேதா தேவியின் படைப்பில் (திரௌபதி) பாலியல் விவரணைகள் நிறைந்திருப்பதாகவும் இந்திய ராணுவத்தைப் பற்றித் தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் சொல்லப் பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுவரும் படைப்பு குறித்து இப்போது மட்டும் என்ன திடீர் அலசல் என்கிற விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது. மகாஸ்வேதா தேவி எழுதியவற்றைப் பதின்பருவத்தில் இருக்கிற கல்லூரி மாணவர்கள் எப்படிப் படிக்க முடியும் என்கிற வாதம் அசட்டுத்தனமானது. பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்த பெண்கள் வரை ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அந்தக் கொடூர நிகழ்வுகளைத் தினசரி செய்தியாகப் படிப்பதையும்விடவா, உண்மைகளைச் சொல்லும் எழுத்து மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிடும்? உண்மையில் இதுபோன்றவற்றைப் படிக்கும் இளம் மனங்களில் அவை புதிய திறப்பைத்தானே ஏற்படுத்தும்? கொடுமைகளுக்கு எதிராகச் சிறு அளவிலேனும் செயலாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தைத்தானே உருவாக்கும்?
ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு
எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி இருவருமே வலுவான பெண்ணுரிமை எழுத்துக்குச் சொந்தக்காரர்கள். பாலினரீதியாகவும் சாதிரீதியாகவும் பெண்களின் மீது ஆதிக்கவாதிகள் செயல்படுத்துகிற வன்முறையைத் தங்கள் படைப்புகள் வழி கேள்விக்குள்ளாக்குகிறவர்கள் இவர்கள். பாமா எழுதிய ‘கருக்கு’, ‘சங்கதி’ ஆகிய இரு நாவல்களும் சில சிறுகதைகளும் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் பல்வேறு கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. ‘சங்கதி’ நாவலின் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளன. “என் படைப்பு நீக்கப்பட்டதே ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான் தெரிந்தது. பாடத் திட்ட மாற்றம் என்பது வழக்கமான நிகழ்வு என்றால் என்னுடைய படைப்புக்குப் பதிலாக வேறொரு தலித் எழுத்தாளரின் படைப்புதானே இடம்பெற்றிருக்க வேண்டும்? பண்டித ரமாபாயின் வாழ்க்கை வரலாற்றை வைத்திருப்பதைப் பார்த்தாலே இது திட்டமிட்ட செயல்பாடு என்பது புரிகிறது” என்று சொல்கிறார் பாமா.
பெண்கள் இதைத்தான் படிக்க வேண்டும், இதைத்தான் எழுத வேண்டும் என்கிற ஆதிக்க மனோபாவத்தின் நீட்சியாகவும் இதைப் பார்க்கலாம் என்கிறார் அவர்.
“சாதி, மதங்களை மையப்படுத்திய படைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தக் கூடாது என்று சொல்லப்படுகிறது. நம் சமூகத்தில் சாதியும் மதங்களும் இல்லையா? அவை சார்ந்த ஒடுக்குமுறைகள் இல்லையா? மாணவர்களுக்கு அவர்கள் வாழ்கிற சமுதாயத்தைப் பற்றிய உண்மைகளைச் சொல்லாமல் கட்டுக்கதைகளையா சொல்ல முடியும்? அடிமைத்தனத்தையும் அடக்கு முறைகளையும் வளரவிடாமல் தடுக்கிற சுவர்களை உடைக்கிற செயலாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார் பாமா.
அரசியல் அறிவு அவசியம்
குடும்பம், காதல் என்று மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த எழுத்துத் துறையில் புதுப் புனலெனப் புகுந்த பெண் களின் வரவு எந்த அளவுக்கு அதிர்ச்சியுடன் அணுகப்பட்டதோ அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது என்பதைத்தான் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து சுகிர்தராணி எழுதிய ‘கைம்மாறு’ கவிதையும் இயற்கையே பெண்ணுடலாக இருக்கிறது என்பதை உணர்த்தும் ‘என் உடல்’ கவிதையும் டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. “எங்களது படைப்புகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பாடத்திட்டக் குழு முடிவெடுத்து, 2019-ல் சேர்க்கப்பட்டது. எங்களது படைப்புகள் ‘பெண் எழுத்து’ என்கிற பிரிவின் கீழ் ஐந்தாம் செமஸ்டரில் வைக்கப்பட்டிருந்ததால் இந்த ஆண்டுதான் மாணவர்கள் அதைப் படிக்க வேண்டும். ஆரம்பத்தில் விருப்பப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது பிறகு, கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டது. மாணவர்கள் எங்கள் படைப்புகளைப் படித்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் அவசர அவசரமாக இந்த நீக்கம் நடைபெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, மாணவர்கள் படிக்க வேண்டிய நேரம் நெருங்கும்போது ஏன் எங்கள் படைப்புகளை நீக்க வேண்டும்?” என்று கேட்கிறார் கவிஞர் சுகிர்தராணி. சமகாலப் படைப்புகளைப் புறக்கணித்துவிட்டு, கற்பனைக் கதைகளைப் பாடங்களாக வைப்பதால் என்ன பயன் என்றும் அவர் கேட்கிறார். “தான் வாழ்கிற காலத்தின் அரசியலை அறிமுகப்படுத்தாமல் நூற்றாண்டுக்கு முந்தைய கற்பனைக் கதைகளைப் பரப்புவது நகைப்புக்குரியது” என்கிறார் அவர்.
எழுத்துத் துறை என்று மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் பெண்களுக் கான எல்லைகளைத் திட்டமிட்டு சுருக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெண்தான் பெற்றுத் தந்தார் என்கிற நிலையிலும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற ஐந்து ஆண்களுடன் ஒரு பெண் தடகள வீராங்கனையை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது என்கிற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவை எடுக்கிற பெருமைக்குச் சொந்தக்காரர்கள்தானே நாம்! அரசியல் பேசும் பெண்களின் முற்போக்குப் படைப்புகளை மட்டும் கொண்டாடிவிடுவோமா என்ன?
பெண்களுக்கான உரிமைகளை, சட்டங்களை, திட்டங்களை, வாழ்க்கை முறையை வடிவமைக்கிற இடங்களில் ஆண்களின் கரங்களே மேலோங்கியிருக்க, கண் துடைப்புக்காகக்கூடப் பெண்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. போராடிப் பங்குபெறுகிற பெண்களின் குரல்கள்கூட ஆணாதிக்கச் சத்தத்தில் மறைக்கப்பட்டுவிடும். இந்த நிலைதான் பெண்களை மேலும் மேலும் பின்னுக்கு இழுத்து அடையாளமற்றுப் போகச் செய்கிறது. பாடத்திட்டக் குழு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்று முடிவெடுக்கிற ஒவ்வொரு அதிகார அமைப்பிலும் துறையிலும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும். குறிப்பிட்ட சதவீதத்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதாலேயே நிலைமை மாறிவிடாது. காரணம் ஆணாதிக்கச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்கிற பெண்களிடமிருந்து எந்தவித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் பெருவாரியாகப் பங்கெடுத்து, பெண்கள் என்கிற ஒரே அடையாளத்துடன் ஒருங்கிணைகிற போதுதான் எதேச்சதிகாரத்தை வேரறுக்க முடியும். அதற்குப் பெண்கள் தங்களை அரசியல் உணர்வு பெறவேண்டியது அவசியம்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago