எங்க ஊரு வாசம்: காதலைச் சொல்லும் சுண்ணாம்பு!

By பாரததேவி

இந்த விளக்கெண்ணெய் செக்குக்குப் போவது. அதனால் காடுகளில் விளைந்த ஆமணக்கைத் தாங்களே ஒடித்து வந்து உருவி, களங்களிலும் வாசல்களிலும் காயப்போடுவார்கள். அதை அம்மிக்குழவி வைத்து நெரித்து, முத்தை எடுத்து குத்திப் புடைத்து, உரலிலிட்டு இடித்துத் தாங்களே பானையிலிட்டு, காய்ச்சியெடுத்துக் கலயங்களில் ஊற்றி வைத்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் எந்தப் பிள்ளைகளும் பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டார்கள். சாப்பிடும் நேரம் தவிர நாள் முழுக்க சூடு புழுதியில் புரண்டு, புரண்டு விளையாடிக்கொண்டிருப்பதால் அவர்கள் உடம்பின் சூட்டுக்கு இந்த விளக்கெண்ணெயைத் தலையில் தேய்த்து விடுவார்கள்.

கேன், சீசா என்று அப்போது எதுவும் இல்லாததால் இந்த எண்ணெய்களைக் கலயங்களில் ஊற்றி, வீட்டின் மேற்கூரையின் விட்டத்தில் கட்டிவைப்பார்கள். எந்தெந்தக் கலயத்தில் என்னென்ன எண்ணெய் இருக்கிறது என்று தெரிவதற்காக அடையாளத்துக்கு நல்லெண்ணெய் கலயத்துக்கு வெள்ளைத் துணியும் கடலை எண்ணெய்க்குச் சிவப்புத் துணியும், விளக்கெண்ணெய் கலயத்துக்குப் பச்சைத் துணியையும் கிழித்து சிறிதாகக் கட்டி முடிபோட்டு வைத்திருப்பார்கள்.

நெய்க் கலயம் மட்டும் இதுகளை அண்டாமல் தூரமாய் ஒதுங்கி இருக்கும்.

அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் சேகரித்தாகிவிட்டது. இனி புளி வேண்டும். அந்தக் காலத்தைப் பொறுத்தவரை புளி என்பது பணக்காரர்களுக்கான சுவை! இவர்களுக்குப் புளியம்பூதான் லாயக்குப்படும். ஏனென்றால் ஒரு நாளைக்கு மூன்று சட்டி குழம்பும், இரண்டு சட்டி வெஞ்சனமும் வைக்க வேண்டும். அதற்கெல்லாம் புளியை எடுத்தால் கட்டுப்படியாகுமா? அதனால் கொல்லையில், மந்தையில், ஓடையில் இருந்து கிடைக்கும் புளியம்பழங்களை எல்லாம் கொட்டையை எடுத்துவிட்டு டவுனில் கொண்டு ஒரு பலம், ரெண்டு பலம் என்று விற்றுவிட்டு காசை வாங்கி பொங்கல் செலவுக்காகத் துணியில் முடிந்து பத்திரப்படுத்திக் கொள்வார்கள்.

அப்போது தராசுக்குப் பதில் ‘திலக்கால்' இருந்தது. இதை ‘வெள்ளிக்கால்’ என்றும் சொல்வார்கள். இது கருங்காலி மரத்தால் செய்யப்பட்டது. ஒரு முழத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக, நுனி சிறுத்தும் போகப்போகக் கொஞ்சமாய் பெருத்துக்கொண்டு வந்து முடிவில் கனத்தும் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும். பெரியதாக இருக்கும் இடத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள். பிறகு அதன் வழியே நான்கு கயிறுகளை உள்ளே திணித்து அவற்றை ஒன்றாகச் சேர்தது ஒரு முடிச்சாகப் போட்டுவிடுவார்கள். பிறகு தரைக்குப் பதிக்கும் செங்கல் அளவுக்கு ஒரு சாக்கு மேல் மூன்று சாக்குகளை வைத்துக் கோணி ஊசியால் சுற்றிலும் தைத்துவிடுவார்கள். பின்பு நாலு பக்கமும் சிறு துளையிட்டு, திலக்காலின் தாட்டுவில் வைத்து சுற்றிலும் கனமான நூல் கொண்டு தைத்து விடுவார்கள்.

திலக்கால் கம்பு கருப்பாக வழுவழுவென்று இருக்கும். அதில் ஈயம் காய்ச்சிய புள்ளிகளால் சமம், கால், அரை, முக்கால், ஒன்று, இரண்டு என்று பளபளப்பாய் ‘பாணிக்கம்’ (எண்களின் குறியீடு) செய்யப்பட்டிருக்கும். இந்த எண்ணிக்கை பத்திலிருந்து, பதினைந்து இருபது வரைக்கும் வட்டத்துக்குள் புள்ளி போட்டிருக்கும்.

இப்போது தங்கள் வீட்டுப் புளிச் சுவைக்காக மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் முதலாளிகளின் புளியந்தோப்புக்குப் புளியம்பூவை அள்ளுவதற்காக முதல் கோழி கூவியதுமே புறப்பட்டுவிடுவார்கள். முதல் கோழி என்றால் இரவு மூன்று மணி. இரண்டாவது கோழி என்றால் நான்கு மணி, மூன்றாம் கோழி என்றால் ஐந்து மணி. இருட்டில் நேரம் தெரிய வேண்டுமென்றால் வானத்து நட்சத்திரங்களையும் இந்தக் கோழி கூவல்களையும் வைத்துத்தான் நேரத்தைக் கண்டறிந்தார்கள். பகலில் சூரியனைப் பார்த்தும், வீட்டு நிழல், மர நிழல்களை வைத்தும் நேரத்தைக் கண்டார்கள்.

கிராமத்திலிருந்து ‘மேலக்காடு’ ஆறேழு மைல் இருந்ததால் கையில் சாக்கும் (கோணி) தலைச் சும்மாட்டில் கஞ்சி கலயமுமாக முதல் கோழி கூப்பிடவுமே புறப்பட்டு விடுவார்கள். எல்லோருடைய மடியிலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை பொடி (இந்தப் பொடியில் இரண்டு வகை இருக்கும். வாயில் போடுவது, மூக்கில் போடுவது) என்று எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள்.

அதிலும் சுண்ணாம்புக்கென்று ஒரு ரகசியம். அதாவது அது காதல் குறியீடாக இருந்தது. ஒரு ஆணிடம் ஒரு பெண் போய் சுண்ணாம்பு கேட்டால் அது அவன் மீது அவளுக்குள்ள ஆசையைக் குறிக்கும்! பெண்களுக்குப் பிடிக்காத ஆண்கள் அல்லது ஆண்களுக்குப் பிடிக்காத பெண்கள் வந்து சுண்ணாம்பு கேட்டாலோ அவ்வளவுதான், அவர்கள் முகம் கனன்றுவிடும். அதிலும் பெண்கள் சினந்து சீறிப் பாய்வார்கள். ‘இந்தா பாரு இன்னொருக்கா நீ சுண்ணாம்பு, கிண்ணாம்புன்னு கேட்டுக்கிட்டு இருந்தயோ நானு உன்னச் சும்மாவிட மாட்டேன். நாக்குப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேக்கதோட ஊருக்குள்ள இருக்க நாலு பெரிய மனுசங்கிட்டயும் சொல்லிப்போடுவேன்’ எச்சரிக்கை செய்துவிடுவார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: arunskr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்