பெண் ஓதுவார் நியமனம்: முழுமையான விடியலா?

By ப்ரதிமா

இந்தியச் சுதந்திரத்தின் பவள விழா கொண் டாட்டத்துக்கு முதல் நாளான ஆகஸ்ட் 14 அன்று, அந்தக் கொண்டாட்டத்தை அர்த்தபூர்வமாக்கும் வகையில் அமைந்தது கோயில் பணிகளுக்காக 216 பேருக்குத் தமிழக அரசு வழங்கிய பணி நியமன ஆணை. குலத்தொழில் முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோயில் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இறைவன் எப்படி அனைவருக்கும் பொதுவோ அப்படித்தான் இறைவனுக்குச் சேவை செய்கிறவர்களிலும் பாகுபாடு கூடாது என்பதை இந்தப் பணி நியமனம் மூலம் நிரூபித்து முன்மாதிரியாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் திட்டத்தில் சிலருக்கு விருப்பம் இல்லை என்கிறபோதும் சமூகநீதியைக் கடைப் பிடிக்கிற, சமத்துவத்தில் நம்பிக்கை வைத்திருக்கிற பெரும்பான்மை மக்களின் உள்ளங்களை அது குளிரச் செய்திருக்கிறது. சாதிப் பாகுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக்கும் சட்டம் 1970-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இயற்றப்பட்ட போதும், சில குறுக்கீடுகளால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் கனவாகவே எஞ்சியிருந்தது. பிறகு 2006-ல் சில திருத்தங்களைச் செய்து, இந்துவாகப் பிறந்து, அர்ச்சகர் பணிக்குத் தகுதியும் தேர்ச்சியும் பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணையை அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பட்டியலின, மிகவும் பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 207 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும் பெற்றனர். அப்போதும் அந்தச் சமூகநீதி கனவு முழுமையாகக் கைகூடவில்லை. இருவர் மட்டும் சிறு கோயில்களில் நியமிக்கப்பட்டார்களே தவிர, மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நீண்ட நெடிய காத்திருப்புக்குப் பிறகு இப்போதுதான் விடிந்திருக்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பணி நியமன ஆணை களில் ஐவர் பட்டிய லினத்தைச் சேர்ந்த வர்கள் என்பது சமூகநீதியை உயர்த்திப் பிடிக் கிறது. அதே போல் ஓதுவாராகப் பெண் ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பது பாலினச் சமத்து வத்தை எய்துவதற்கான முன்னகர்வு. கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த சுஹாஞ்சனா, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். பணியேற்ற பிறகு கோயிலில் அவர் திருவாசகத்தைப் பாடிய காணொலியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெறும் உணர்வுக் கொண்டாட்ட மாக மட்டும் இதைச் சுருக்கிவிட முடியாது. பெண் ஒருவர் கோயிலில் தேவாரம் இசைப்பதைப் பெருவாரியான ஆண்களும் கொண்டாடுவது பாலினம் கடந்த அரசியல் செயல்பாடு. இப்படியொரு வாய்ப்பை எட்டாக்கனியாகவே நினைத்திருந்த பலரும் இதைத் தங்களுக்குக் கிடைத்த அங்கீ காரமாகவே கருதுகின்றனர். ஆனால், பக்தர்கள் அனுமதிக்கப்படுகிற எல்லைக்குள்தான் சுஹாஞ்சனாவும் நிறுத்தப்பட்டிருக்கிறார் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இப்போதும் பெண்ணைக் கருவறைக்குள் நுழைய விடாமல் வெளியிலேயே நிறுத்தி வைத்திருப்பது நாம் பூரணச் சமநிலையை அடையவில்லை என்பதையே காட்டுகிறது.

வரலாறு சொல்லும் சேதி

ஆண்கள் மட்டுமே அர்ச்சகராகிக் கருவறைக் குள் செல்வதும், தூய்மை வாதத்தைக் காரணம்காட்டிப் பெண்கள் புறக்கணிக்கப் பட்டதும் இடையில்தான் நிகழ்ந்தது. காரணம், பெண்களும் தெய்வ வழிபாட்டை முன்னின்று நடத்தியுள்ளனர் என்று சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுச் செய்திகளும் அவற்றை உறுதிப் படுத்துகின்றன. காலப்போக்கில் மார்கழி மாத திருப்பாவை நோன்பு உள்ளிட்ட சில வழிபாடுகள் மட்டுமே பெண்களுக்கென்று தனியாகப் பிரித்துக்கொடுக்கப்பட்டன. இன்றும் பெரும்பான்மையான மக்களின் பண்பாட்டு அங்கமான சிறுதெய்வ வழிபாடுகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்களே பூசாரியாகச் செயல்படும் சிறுதெய்வக் கோயில்களும் உண்டு. ஓதுவாருக்கு உடல்நிலை சரியில்லாத போதோ, அவர் வெளியூருக்குச் சென்றாலோ அவருடைய மனைவியோ மகளோ ஓதுவார் பணியைச் செய்வதும் வழக்கம்தான்.

புதிய பாதை

மேல்மருவத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் சக்தி வழிபாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறிப்பிடத்தகுந்தது. பிற அரசியலை ஒதுக்கிவிட்டு, வழிபாட்டு முறையை மட்டும் பார்த்தால், அங்கே பெண்கள்தாம் எல்லாமே. தீட்டு என்று பிறரால் ஒதுக்கப்படும் மாதவிடாய் நாட்களிலும் பெண்கள் அங்கே கோயிலுக்குள் நுழையலாம், பூஜை செய்யலாம். கருவறைக்குள் சென்று பெண்களே அபிஷேகம், ஆராதனை செய்யவும் அனுமதி உண்டு. இதைப் பெண்களில் சிலரே எதிர்க்கிற போதும், ‘சக்தியும் பெண்தான். பெண்ணின் சுமை பெண்ணுக்குத் தெரியும்’ என்று யதார்த்தத்தின் வழியில் நடக்கிற பெண்களே இங்கே அதிகம். எந்தப் பாகுபாடும் நிராகரிப்பும் இன்றிப் பெண்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் பக்தி என்கிற நெறியில் ஒருங்கிணைவது எல்லாக் கோவில் களிலும் படிநிலைகளிலும் தொடர வேண்டும் என்பதும் பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது.

முதல் பெண் ஓதுவார்

2006ஆம் ஆண்டு பணி நியமனம் பெற்றவர்களில் திருச்சி செம்பட்டுவைச் சேர்ந்த அங்கயற்கண்ணியும் ஒருவர். உறையூர் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் ஓதுவாராக அவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முதல் பெண் ஓதுவார் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். “அப்பா கூலி வேலை செய்தார். என்கூடப் பிறந்தவங்க ஆறு பேர். என்னால மேற்கொண்டு படிக்க முடியாததால ப்ளஸ் டூ முடித்ததும் திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து படித்து முடித்தேன். அப்ப கோயில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்னு அறிவிப்பு வந்தது. பெண்களில் இதுவரைக்கும் ஓதுவார் இல்லைன்னு சொல்லி என்னையும் விண்ணப்பிக்கச் சொன்னாங்க. 2004-ல விண்ணப்பித்தேன். 2006-லஅறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இண்டர் வியூக்கு வரச் சொன்னாங்க. அதுல தேர்வாகி ஓதுவார் ஆனேன். காலை எட்டு மணி, மதியம் 12 மணி, மாலை ஐந்து மணி, இரவு எட்டரை மணின்னு நாலு கால பூஜையின்போதும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுவேன்” என்றவர், சிறு தயக்கத்துக்குப் பிறகு தொடர்ந்தார்.

“இந்த வேலைக்காக நானும் என் மகளும் இங்கே தனியா வீடு எடுத்துத் தங்கினோம். சம்பளம் ரொம்ப குறைவு. வாடகை கொடுத்து, வீட்டுச் செலவைச் சமாளிக்க முடியல. அதான் ஏழு வருஷம் கழிச்சு வேலையை விட்டுட்டேன். வேலைய விடும்போது 1,875 ரூபாய்தான் எனக்குச் சம்பளம். நாம முதல் பெண் ஓதுவாரா இருந்தோம், இப்படிப் பாதியில வேலையை விட்டா பெண்களை வேலைக்குச் சேர்த்தா இப்படித்தான் செய்வாங்கன்னு தவறான முன்னுதாரணமா ஆகிடக்கூடாதேன்னு திரும்பவும் வேலை வேணும்னு மனு கொடுத்தேன். எந்தப் பதிலும் இல்லை. இந்த முறை அரசு அறிவிப்பு வந்ததும் அதுக்கு விண்ணப்பிக்க எனக்கு வயது தகுதியில்லை. 35 வயது வரைக்கும்தான் விண்ணப்பிக்க முடியுமாம்” என்று வருத்தத்துடன் சொல்கிறவர், மறுவாய்ப்புக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.

வழிபாட்டைச் சாதி, இனரீதியாகச் சுருக்காமல் அனைவருக்கும் பொது வில் வைக்கும்போது அனைத்து மதங் களின் மையப்பொருளான அன்பெனும் வாயில் தானாகத் திறக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்