விடியற்காலையில் தங்களைக் கொஞ்சிவிட்டு சந்தைக்குப் போன அம்மாக்களின் வருகைக்காக விளையாடக்கூடப் போகாமல் அவர்கள் வரும் வழியைப் பார்த்தவாறு காத்திருக்கும் சிறு பிள்ளைகளுக்குத் திண்பண்டமாகப் பலாக்கொட்டை, அச்சுவெல்லம், சோள முறுக்கு, பட்டாணி கடலை என்று வாங்குவார்கள்.
இப்போது அவர்கள் கொண்டு வந்த கடாப்பொட்டி நிறைந்ததோடு மடியில் வைத்திருந்த சில்லறையும் காணாமல் போய்விட்டது. இளம் வெற்றிலைகளும் பாக்கும் அந்த இடத்தை நிரப்பிவிட்டன. வரும்போது ராத்தலாக கைவீசிக்கொண்டு வந்தவர்கள், இனி போகும்போது கழுத்து வலிக்கும் சுமையோடு போக வேண்டும். உடம்பின் களைப்போடும், கால்களில் நடையின் தளர்ச்சியோடும் நம் ஊர்க்காரர்கள் யாராவது வண்டி கட்டிக்கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார்கள்.
வியாபாரத்துக்காக யாராவது வந்திருந்தால் அவரவர் முறைகளைச் சொல்லி கூப்பிட்டவாறு தங்களின் பொங்கல் சாமான்களை வண்டியிலேற்றிக் கொள்ளச் சொல்லி கெஞ்சுவார்கள். வண்டி கொண்டு வந்த ஆண்களும் அவர்களின் பொட்டிகளை மட்டுமல்ல சில சமயம் அவர்களையும் ஏற்றிக்கொள்வார்கள். ஒவ்வொருத்தர் ஒரு சுமைக்கு ஓரணா என்று கூலி வாங்குவதும் உண்டு, சிலர் சும்மாவே ஏற்றிக்கொள்வதும் உண்டு.
அடுத்த கிராமங்களில் வாழை, பனை என்று வளர்க்கும் விவசாயிகளில் இவர்களுக்குத் தெரிந்தவர்கள் கரும்பு, கருப்பட்டி, பனங்கிழங்கு என்று கொடுத்துவிட்டு அதற்கு பதில் இவர்கள் புஞ்சையில் விளைந்த நிலக்கடலை, கொத்தமல்லி, பயறு வகைகளை வாங்கிக்கொண்டு போவதால் இவர்களுக்குக் கரும்பும், மற்ற பொருள்களும் வாங்கத் தேவையில்லாமல் போய்விட்டது.
தைப்பொங்கல் வந்துவிட்டால் கிராமங்களில் விடிய, விடிய உறங்கமாட்டார்கள். ஊருக்குள் மாவாட்டுவதற்கென இரண்டே இரண்டு உரல்தான் இருக்கும். மற்ற ஆட்டுரல் எல்லாம் பருத்திவிதையை ஆட்டி, தவிடு போட்டு மாடுகளுக்குத் தண்ணீர் விடுவதால் அந்த உரல்களே தவிடால் செய்ததுபோல் செமிச்சி (அழுக்கேறி) கிடக்கும். அதைச் சுத்தமாய் கழுவ வேண்டுமென்றால் எப்படியும் முழுக்க ஒரு நாள் ஆகும்.
அதனால் இந்த இரண்டு உரல்களில்தான் ஆட்ட வேண்டும். எப்போதும் சோளத் தோசையும், கம்பு தோசையும்தான். அர்ச்சுவமாக (அதிசயம்) யாராவது ஓரிருவர் அரிசி தோசை போடுவார்கள். இதில் வரகரிசி தோசை, தினையரிசிப் பணியாரமென்றும் சுடுவார்கள். எல்லாவற்றுக்கும் கருப்பு உளுந்துதான். வெள்ளை உளுந்து என்பது காணக் கிடைக்காதது. உளுந்து இல்லாதவர்கள் வெண்டைக்காயைப் போட்டு ஆட்டியும் சுடுவார்கள்.
சட்னி, சாம்பார் என்பதெல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது. அதனால் கல்லுப் பயறு (பச்சை பயறு), காணப்பயறு (கொள்ளு) என்று பயறு வகைகளை ஒரு படி அளவுக்கு எடுத்து நன்றாக மணக்க வறுத்து உரலில் போட்டு ஆட்டுவார்கள். கூடவே கால் எடை பச்சை மிளகாய், வெங்காயம், வெள்ளைப்பூடு, தக்காளி என்று எல்லாவற்றையும் வதக்கி ஒன்றாகப் போட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கிவிட்டால் போதும். எப்போதும் விளக்கெண்ணெயில்தான் தோசை சுடுவார்கள். தோசை சுட்டு வைப்பதற்காகவே பனை ஓலையில் செய்த ஒரு பிளாப் பெட்டி இருக்கும். அதில்தான் சுட்டு வைத்து பனை ஓலை மூடியைப் போட்டு மூடிவைப்பார்கள். மத்தியானம் வரைக்கும் தோசையின் மிருதுத்தன்மை மாறாது.
விடிகாலை முதல் கோழி கூப்பிடும் போதே தோசை சுடும் விளக்கெண்ணெய் வாசம் காற்றோடு கலந்து எல்லோரையும் எழுப்பிவிட்டுவிடும். அதிலும் சிறுவர்களுக்கு உறக்கமே வராது. பல்லைக்கூடத் தேய்க்காமல் தோசையைப் பிரட்டிப்போடும் போதே கையை நீட்டி விடுவார்கள். இதனால் பிளாப்பெட்டி நிறைய ரொம்ப நேரமாகும். கொடி அடுப்பில் பயற்றாம் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்.
அம்மாக்கள் எல்லாம் அடுப்படியில் உட்கார்ந்திருக்க, பாட்டிகள் எல்லாம் கல் தூணில் கயிறு கட்டி பெரும்பானையில் மோர் கடைவார்கள். அவர்களிடம் வந்து கை நீட்டும் பிள்ளைகளுக்குச் சிறு சிறு வெண்ணெய் உருண்டை கிடைக்கும். இந்த விஷயத்தில் தன் வீட்டுப் பிள்ளைகள், ஊரார் வீட்டுப் பிள்ளைகள் என்று பாகுபாடே கிடையாது. அந்நேரத்துக்கே மாடு, கன்றுகளை கவனிப்பதற்காக எழுந்த ஆண்கள் பெரிய, பெரிய மீசைகளை ஒதுக்கியவாறு மோர் குடிப்பதற்காக வருவார்கள். பக்கத்திலிருக்கும் வெண்கல சொம்பு நிறைய வெண்ணெயின் சிறு சிறு துணுக்குகளோடு மோர் கொடுப்பார்கள் பாட்டிகள். மோரைக் குடித்தபின் வரும் சிறிய ஏப்பம் பிரிந்த பின்தான், அவர்கள் உடம்பில் வேலை செய்யும் சுறுசுறுப்பு ஏறும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago