பெண் எனும் பகடைக்காய்: ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு எதற்காக?

By பா.ஜீவசுந்தரி

உள்ளாட்சிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதான மசோதா அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பெண்களுக்கான அரசியல் அதிகாரங்கள் குறித்து தேர்தல் வரும் காலங்களில் மட்டுமே பேசப்படுவது சலிப்பூட்டுகிறது. இந்த அறிவிப்பும் 14-வது சட்டப்பேரவையின் இறுதிக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஏகமனதாக நிறைவேறுகிறது. இதன் பின், கட்சி சார்ந்த சுயநல நோக்கமும், எதிர்பார்ப்புகளுமே அடங்கியிருப்பதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

33 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், 50 சதவீத ஒதுக்கீடு என்று வரும்போது பினாமிகள் ஆதிக்கமே கோலோச்சும். ஏற்கெனவே ஜனநாயக மரபுகள் மீறப்பட்டு, தனி நபர் வழிபாடும் துதிகளும் மேலோங்கிவரும் காலம் இது. ஏறக்குறைய மன்னராட்சி முறையையொத்த செயல்பாடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இப்போதும்கூட இந்த இட ஒதுக்கீட்டில் பெண்களை முன்னிறுத்தி ஆண்கள் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.

பெண்களைப் பொறுத்தவரை அனைத்துத் தகுதிகளும் திறன்களும் நிரம்பியவர்களாக இருந்தபோதிலும், தங்கள் மீதே முழு நம்பிக்கை அற்றவர்களாக, ஒருவிதத் தயக்கத்துடன் எதையும் எதிர்கொள்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம், பொதுவாகவே பெண்கள் சுதந்திரம் என்பது அவர்களின் குடும்ப நிலையைச் சார்ந்தும், அதிலும் குறிப்பாக ஆண்களைச் சார்ந்ததாகவுமே இருக்கிறது. கல்வி கற்ற பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவெங்கிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

பெண்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டபோதிலும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைக்கு அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளில் முடக்கப்பட்டிருப்பதும், அது தவிர்த்த வேறு சிந்தனையற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதும்கூட முக்கியக் காரணம்.

பொது வெளியற்ற பெண்கள் வாழ்வு

பொருளாதாரத் தேடல் என்பதன் பொருட்டு வேலைக்குச் செல்வதையும் குடும்ப நிகழ்வுகள், கலாச்சார, பாரம்பரிய விழாக்கள் தவிர்த்துப் பொது வெளியில் பெண்கள் இயங்குவதே இல்லை. அதற்கான வெளி அவர்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டபோது, கிராமத்துப் பெண்கள் முழுமையாக அதில் ஈடுபடவும், தங்கள் பங்களிப்பைச் செலுத்தவும் குடும்பம் அவர்களை அனுமதித்ததன் பின்னணியில் அங்கு புழங்கிய பணமும் முக்கியமான காரணம். குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடு அவர்களைத் தங்கு தடையின்றி அதில் ஈடுபட வைத்தது. குடும்பத் தலைமையும் அதற்கு அனுமதித்தது. பின்னர், அதுவே பெண்களை ஊழலின் சுழலுக்குள் சிக்க வைத்தது.

முதலில் பின்னிருந்து இயக்குபவர்களின் பிடியிலிருந்து பெண்கள் முழுமையாக வெளியில் வர வேண்டும். பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பெண்ணியவாதிகள் சொல்லும் நீண்டகாலத் திட்டங்களில் இது முதன்மையானது. பெண்ணுக்கான விடுதலை என்பது, ஆண் பெண் சமத்துவம் என்பதோடு மட்டுமல்லாமல், வீட்டிலும் வெளியிலும் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்வதில் தொடங்குகிறது. அதன் மூலம், தங்களுக்கான தனித்துவ அடையாளம், சுயமரியாதை போன்றவற்றைக் காத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஓரிடத்தில் குவிந்திருக்கும் அதிகாரம்

அதிகாரங்கள் அனைத்தும் மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பதுதான் ஜனநாயகத்தின் தாத்பர்யம். ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால், அனைத்து அதிகாரங்களையும் அரசு என்ற ராட்சத இயந்திரம் தன் கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டது. மக்களிடமிருந்துதான் அரசு, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது. உண்மையில் மக்கள் தங்கள் கைகளுக்கு அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இன்று உள்ளாட்சி அமைப்புகள் எந்த வித அதிகாரங்களும் இல்லாமல் இருப்பதால்தான், ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாகக் குவிக்கப்பட்ட அதிகாரம் எளிய மக்களுக்கான பலன்கள் முழுமையாக அவர்களைச் சென்றடைய விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. இனி, இந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வழியாகப் பெண்கள் படிப்படியாக அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்பம் தவிர, அரசியல், சமூக, நிர்வாக ரீதியாகவும் பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியச் சமூகத்தில் தென்படும் கடுமையான கலாச்சார, சமூகக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மக்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மிகப் பெரிய பிளவை உருவாக்கி வைத்திருக்கிறது.

அனைத்து சமூகக் கட்டமைப்புகளும், அரசியல் நடவடிக்கைகள் வாயிலாகத்தான் மாற்றம் கொள்ள வேண்டும். இதற்குத் தேவைப்படும் அனைத்து வழிமுறைகளையும் ஜனநாயகம் நமக்கு அளித்துள்ளது. அதன் விளைவே, அனைத்து மாற்றங்களும் அதிகாரத்தின் வழியாக சாதித்துக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது. 73-வது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் வழியாக இதை மாற்றியமைக்க எல்லா வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் உள்ளாட்சி அளவிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு அது பலனளித்ததா என்பதுதான் இங்கு மிகப் பெரிய கேள்வி.

இந்தக் கேள்வி எழுவதன் பின்னணியில் சமூகம், பொருளாதாரம், நிர்வாகம் என்று அனைத்துத் துறை சார்ந்த பெண் பிரதிநிதிகளும் பலவிதமான இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவை சார்ந்த நிறுவனங்களில் பெண்கள் புதிதாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களுடைய சாதனைகளே அதற்கான சாட்சிகள்.

பொருளீட்டுவதற்கான களம் மட்டுமல்ல

பெண்களின் பின்னடைவுக்கு அவர்களின் சூழலும் ஒரு காரணம். இந்தத் தடைகளில் இருந்து முழுமையாக வெளிவருவதற்கு, மற்றவர்கள் தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வதைப் பெண்கள் தவிர்க்க வேண்டும். அப்போது தானாகவே, மிகக் குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி, பரந்துபட்ட ஒரு உலகைக் கண்டடைய பெண்களால் முடியும்.

இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் வரிசையில் நான்காவது மாநிலமாக தமிழகமும் கைகோத்திருப்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியதே. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இரு பாலரின் கரங்களிலும் பொதிந்திருக்கிறது. அரசியல் என்பது பொருளீட்டுவதற்கான களம் மட்டுமல்ல என்பதை உணர்ந்து, மக்களின் சேவையும் தேவையும் ஒருங்கிணையும் ஒரு உன்னதப் பணி அது என்பதை மனதில் நிறுத்தி, பின் செயலாற்ற வேண்டும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com



கொசுறு

67-வது குடியரசு தினம் கடந்த மாதம் கொண்டாடப்பட்டபோது, திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை ஆளுங்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருவர், தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த நிகழ்வுகள் அரங்கேறியதைப் பார்க்கும்போது, 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தாலும், எப்போது பெண்களுக்கு இம்மாதிரியான அவமதிப்புகளும் புறக்கணிப்புகளும் இல்லாமல் போகும். உண்மையிலேயே பெண்கள் மதிக்கப்படுவது எப்போது?



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்