பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அவ்வப்போது ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத் தளங்களில் நிகழ்வதுண்டு. அந்த வகையில் பத்திரிகையாளர் பாரதிதம்பி பதிவிட்ட ஒரு கருத்து அண்மையில் நேர், எதிர் கருத்துகளால் விவாதப் பொருளாகி யிருக்கிறது. ‘கோடிக்கணக்கான மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க சமையலறைகளிலிருந்து பெண்களை விடுவிக்க சமுதாய (பொது) சமையலறைகளே தீர்வாக இருக்கும்’ என்பதே அதன் மையக்கருத்து.
தந்தை பெரியார் 1931-32ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்துக்குப் பயணம் செய்தபோது அங்கே அவர் கண்டு வியந்த விஷயங்களில் ஒன்று, மாஸ்கோவில் அமைந்திருந்த பெரிய அளவிலான சமுதாயச் சமையற்கூடம். இந்தச் சமுதாயச் சமையற்கூடத்தை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘சமையலறைத் தொழிற்சாலைகள்’ (Kitchen factory). தொழிற்சாலைகளில் மட்டுமில்லாமல் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்காகவும் சமையற்கூடங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஊட்டச்சத்து தொடர்பான மாதிரி சோதனைகள் முறை யாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இருப்பினும் ஒரே மாதிரியான உணவுப் பட்டியல் மக்களுக்குச் சலிப்பைத் தந்தது. மற்றொன்று, ஒரே அடுக்ககத்தில் வாழும் ஏழு, எட்டுக் குடும்பங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த ‘பொதுச் சமையலறைகள்’ (Communal kitchen). இதில் ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கெனத் தனித்தனியாகச் சமைத்து அதை அவரவர் அறையில் வைத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஆனால், இவற்றிலும் குறைபாடுகள் உண்டு. விருந்தினர்கள், நண்பர்கள் வருகையின்போது சிரமங்கள் ஏற்பட்டன. பொதுச் சமையலறையைப் பயன்படுத்துவதில் பனிப்போர்கள் இருந்தன. இவற்றால் பொதுச் சமையலறைகள் மக்களிடம் வரவேற்பை இழந்தன.
பொதுச் சமையலறை
1928 முதல் 1953 வரையிலான ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் நடை முறையில் இருந்த இவ்வகையான சமையற் கூடங்கள் அவரின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு நீர்த்துப்போயின. அதற்கு மேற் சொன்ன காரணங்களே அடிப்படை. ரஷ்யாவில் ஸ்டாலினுக்குப் பிறகான குருசேவ் ஆட்சியில் சமையலறைக்கான வடிவமைப்புகள் அமெரிக்கா வுடனான இணைவில் உருவானது. அந்தச் சமையலறைகள் பொதுச் சமையலறையிலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கான தனித்தனி நவீனச் சமையலறைகளாக இருந்தன.
தனியுடைமைச் சிந்தனைக்கும் கம்யூனிஸ சிந்த னைக்குமான ஊடாடலாகவே இதைப் பார்க்க முடிகிறது. இன்னும்கூடச் சில சமுதாயச் சமையற்கூடங்கள் ரஷ்யாவில் இயங்கி வருவதாக செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
நம் நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை உருவாக்கப்பட்ட சமுதாயச் சமையற்கூடங்கள், பாலினச் சமத்துவத்தின் அடிப்படையிலிருந்து மாறுபட்டவை. போர்க்காலங்களில் ஏற்படும் அசாதாரண சூழல், பஞ்சம், தொற்றுநோய்க் காலங்கள், இயற்கைப் பேரிடர் காலங்கள் போன்ற பல காரணங்களின் அடிப்படையில் குறுகிய காலத்துக்காக ஏற்படுத்தப்படுபவை அவை. சூழல் மாறும்போது, அந்தச் சமுதாயச் சமையற்கூடங்கள் கலைந்துவிடுகின்றன.
நீண்ட கால சமுதாயச் சமையற்கூடங் களாக குருத்துவாராக்கள், கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் செயல்படும் அன்னதான அமைப்புகளைக் கூறலாம். இவை தவிர, தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள், கர்நாடகத்தில் இந்திரா உணவகங்கள் போல இந்தியாவில் பத்து மாநிலங்களில் சமுதாய உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை பட்டினி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடு.
பெரியார் என்ன சொன்னார்?
‘பெண்கள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டுப் புத்தகம் கொடுத்தால் போதும்’ எனக் கருதும் பெரியாரைப் பாலினச் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கபட்ட சமுதாயச் சமையற்கூடங்கள் கவர்ந்ததில் வியப்பில்லை. அதே போலத்தான் குழந்தைகள் காப்பகங்களும்.
18.03.1947 தேதியிட்ட குடியரசு இதழில், ‘ஒரு குறிப்பிட்ட பாலினம் ஒருவருடைய வீட்டையும் சமையலையும் பார்த்துக் கொள்வதென்பது வருணாசிரம முறையைக் காட்டிலும் மோசமானது’ என்று எழுதினார். மேலும் அவர், ‘சமுதாயச் சமையல்தான் பெண்களைச் சமையலறையிலிருந்து வெளியே கொண்டுவர சிறந்த வழி’ என்று கூறியதோடு அரசு, குழந்தைகள் காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
நேர் எதிர் கருத்துகள்
சமூக வலைதள விவாதத்தில் பாலினச் சமத்துவத்தை மையப்படுத்திய பொதுச் சமையறை முறையை எதிர்மறையாக விமர்சித்து எள்ளல் பதிவுகளும் எழுந்தன. அஞ்சறைப் பெட்டிகள் பூட்டப் பட்டால் மருத்துவ மனைகள் நிரப்பி வழியும் என்றனர் சிலர். இவற்றில் பெரும்பாலானவை ஆண்களின் பதிவுகளே. முற்போக்குவாதிகளாகத் தங்களைச் சமூக வலைத்தளங்களில் காட்டிக்கொள்ளும் பலரிடமிருந்து சமுதாயச் சமையலறைக்கு எதிரான விமர்சனங்கள் வந்தது எதிர்பாராதது. பெரியார், அன்றைக்கே ஆண்களை எப்படிக் கணித்திருக்கிறார்; அவர் ஒரு சமூக விஞ்ஞானியேதான்.
கொஞ்சம் அறிவியல்பூர்வமாகச் சிலர், ‘சமுதாயச் சமையற்கூடங்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்குமான ஊட்டச்சத்து அளவை நிறைவு செய்யாது; இதனால், வைட்டமின் குறைபாடு ஏற்படலாம். குறிப்பாகப் பெண்களும் அவர்களால் உயிர்பெறும் குழந்தைகளும் உடலளவில் பதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்’ எனப் பதிவிட்டனர். இந்தக் கோணத்தில் சமுதாயச் சமையற்கூடங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எதிர்மறையாகக் கருத்திட்டவர்களில் யாரும், சமுதாயச் சமையற்கூடத்தின் மையக் கருத்தான ‘வீணாகும் கோடிக்கணக்கான மனித ஆற்றல்’ என்பதைத் தொட்டதாகத் தெரியவில்லை. சமையலறைகளில் செல வழிக்கப்படும் மனித ஆற்றலுக்குத் தகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்த விவாதம் எழுந்திருக்காது. பல நூறு ஆண்டுகளாகப் பெண்ணின் சமையல் சார்ந்த செயல்பாடுகள், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. கூலி, மூன்று வேளை உணவு. அதுவும் அனைவருக்கும் பரிமாறப்பட்ட பிறகு கிடைக்கும் போதுமான ஊட்டச் சத்து அற்ற உணவு மட்டுமே.
என்ன தீர்வு?
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களானால் வீட்டில் பெரியவர்கள் இல்லாதபட்சத்தில் குழந்தை களைக் காப்பகங்களில் விடுவதற்குப் பெரும்பாலான ஆண்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால், சமையலறை இல்லாத வீட்டை ஆண்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. அஞ்சறைப்பெட்டிகள் மூடப்பட வேண்டாம், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட வேண்டாம், விருந்தினர்களின் வருகையும் தடைபட வேண்டாம். இவற்றைக் காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ளும் வசதி படைத்தவர்களைத் தாண்டி, ஆண்கள், பெண்களுக்கு இணையாகச் சமைய லறையில் தங்கள் பங்கைச் செலுத்துவதே ஒரே தீர்வு. சமையல், ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கு எடுக்கப்படும் சிரத்தைக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல. சமையல்தானே, பெரிய வித்தையா என்பவர்கள் சமையலறைச் செயல்பாடுகளில் கண்டிப்பாகச் சோதனை ஓட்டத்தைச் செய்து பார்க்க வேண்டும்.
ஆண்களை அனுமதியுங்கள்
பெண்களின் சொத்தல்ல சமையலறை. சமையலறையில் மாமியாரோடு மட்டுமல்ல, கணவனோடும் சமரசம் செய்துகொண்ட பெண்கள் ஒப்பீட்டளவில் சமையலறைச் சுமையில் இருந்து விடுதலை பெற்றவர்களாக இருக்கிறார்கள். பல ஆண்கள் காய்கறி வாங்குவது தொடங்கிச் சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது வரையிலான சமையலறை சார்ந்த ஆதி முதல் அந்தம் வரையிலான வேலைகளைச் செய்கிறார்கள். அடுத்தவரின் எள்ளலைத் தாண்டி, கணவனும் மனைவியும் அன்னி யோன்யமாக இருக்கிறார்கள். பெண்ணின் வேலைப்பளுவை உணர்ந்துகொண்டு, அதைப் பகிர்ந்து கொள்ளும் ஆணைப் பெண்ணுக்குப் பிடிக்கும். சில விதிவிலக்குகளாக, இந்தப் பணிப்பகிர்வில் சம்மந்தப்பட்ட பெண்ணாலேயே தரக்குறைவாக ஆண் கருதப்படுவது ஆதிக்க மனநிலையே.
சமையலில் வெளுத்துவாங்கும் அம்மாக்களுக்கும் ஒருகாலத்தில் சமையல் தெரியாத பருவம் ஒன்று இருந்திருக்கும்தானே. அதே நிலைதான் புதிதாகச் சமைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும். ‘என் சமையல் அறைக்குள் நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன்’ என்று ஒரு பெண் சொல்வது அவளுக்கு அவளே விலங்கைப் பூட்டிக்கொள்வதற்குச் சமம். காய்கறிகளை வெட்டும்போதும், சமைக்கும்போதும், பாத்திரங்கள் கழுவும்போதும் நேர்த்தியை, துல்லியத்தை எதிர்பார்த்தால் கணவனும் மனைவியும் மருமகள் - மாமியார் மனநிலைக்குள் சென்றுவிடுவார்கள். இதில் இருதரப்பும் சோர்ந்துபோய் வழக்கமான பணிப்பகிர்வையே தொடரவே விரும்புவார்கள். இதில் இழப்பு பெண்ணுக்குத்தான். வெளி உணவை நாடுவோர் பெரும்பாலும் பாரம்பரிய, வீட்டுமுறைச் சமையலை நாடுவதால் நம் நாட்டில் சமையலறைத் தொழிற்சாலைகளோ, பொதுச் சமையலறைகளோ வர இன்னும் நூறாண்டுகள் ஆகலாம். நம் சுவை அரும்புகள்தாம் அதை முடிவுசெய்யும். அதையும் தாண்டி, மதமும் சாதியும் அவற்றை எந்த அளவில் அனுமதிக்கும் என்பதில்தான் இந்தியாவின் தனித்துவம் அடங்கியிருக்கிறது. மேலும், பாலினச் சமத்துவச் சிந்தனைகள் சமுதாயச் சமையற்கூடத்தின் அவசியத்தை நிர்ணயிக்கும்!
கட்டுரையாளர் தொடர்புக்கு: bharathiannar@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
31 mins ago
சிறப்புப் பக்கம்
55 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
54 mins ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago