சக்கரம் கட்டிப் பறக்கும் பெண்கள்!

By ஷங்கர்

இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு அதிகபட்சமாக 92.7 சதவீதம் கொண்ட மாநிலம் கேரளம்தான். ஆனால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் குறைந்தபட்சமாக 20.2 சதவீதம் பெண்களே இருக்கும் முரண்பாடு நிலவுவதும் கேரளத்தில்தான்.

இந்நிலையில் கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, ‘புட் ஆன் வீல்ஸ்’ மொபைல் உணவகங்கள் மூலம் பெண்கள் பொருளாதாரரீதியாகத் தன்னிறைவு பெறுவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்திவருகிறது.

கேரள அரசின் சமூகநீதித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜென்டர் பார்க் நிறுவனம் ‘புட் ஆன் வீல்ஸ்’ திட்டத்துக்கு செயல்வடிவம் தந்துள்ளது. கேரளத்தின் பெருநகரங்களிலும் சிறிய நகரங்களிலும் ஆரோக்கியமான உணவை மொபைல் உணவகங்கள் வழியாக வழங்குவதன் மூலம் வர்த்தக ரீதியாக நல்ல சூழலை உருவாக்கும் திட்டம் இது.

கேரளம் முழுவதும் 2 ஆயிரத்து 500 பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளை அளித்துவரும் ஜென்டர் பார்க் நிறுவனம் ‘புட் ஆன் வீல்ஸ்’ சேவையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் இடங்களில் இந்த ‘புட் ஆன் வீல்ஸ்’ உணவகங்கள் இருக்கும்.

இயற்கையான முறையில் ஆரோக்கியத்துக்குத் தீங்கில்லாத வகையில் அதிக எண்ணெய்ப் பொருட்களைச் சேர்க்காமல் ருசிக்கான கூடுதல் இடுபொருட்களைப் பயன்படுத்தாமல் சுடச்சுட இந்த உணவகங்களில் உணவு பரிமாறப்படும். உணவைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் கொடுக்கும் வகையில் உணவையும் சமையலையும் கையாள்வதற்கு சர்வதேச அளவிலான தரக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகளும் இத்திட்டத்தில் தரப்படுகின்றன.

‘புட் ஆன் வீல்ஸ்’ மொபைல் உணவகங்களில் தரப்படும் உணவுப்பட்டியலை இறுதி செய்யும் வகையில் மருத்துவர்கள், உணவூட்ட நிபுணர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் அடங்கிய குழு திட்டமிட்டுவருகிறது. உணவுகள் அனைத்தும் பொதுவான சமையலறைகளில் செய்யப்பட்டு தேவைக்கேற்ப உணவகங்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும். ‘புட் ஆன் வீல்ஸ்’ திட்டம் முதலில் திருவனந்தபுரத்தில் தொடங்கி பின்னர் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் உணவகங்களை நிர்வகிக்கும் பெண்களுக்கு அரசு மானியமோ நிதி உதவியோ தராது என்கிறார் ஜென்டர் பார்க்கின் சிஇஓவான சுனிஷ்.

பெண் தொழில்முனைவோருக்குப் பயிற்சியளித்து சரியான வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதோடு அரசின் உதவி முடிந்துவிடுவதாக கூறும் சுஷிஷ், ஏற்கெனவே நிதியுதவி அளித்துச் செயல்படுத்திய திட்டங்கள் சரியாக வெற்றிபெறவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிடுகிறார். “சந்தையில் போட்டி போட்டு பெண்களே செழிக்க வேண்டும்” என்கிறார்.

ஜென்டர் பார்க் நிறுவனம் சென்ற ஆண்டு அறிமுகப் படுத்திய ‘ஷீ டாக்சி’ திட்டம் ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒன்று. பெண்களுக்காகப் பெண்களே டாக்சி ஓட்டும் 24 மணிநேர டாக்சி சேவைத்திட்டத் தில் தற்போது 50 பெண்கள் மாநிலம் முழுவதும் சொந்தமாக டாக்சிகளை ஓட்டுவதன் மூலம் மாதம் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

தற்போது ‘ஷீ டாக்சி’ திட்டம் நாடுகடந்த அங்கீகாரத்தைப் பெற்று, தெற்காசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உலக வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘புட் ஆன் வீல்ஸ்’ திட்டத்துக்கான உணவளிக்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் பேட்டரியில் இயங்குபவையாக இருக்கும். இதற்காக டெல்லியி லிருந்து விரைவில் வாகனங்கள் கேரளத்துக்கு வரவுள்ளன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கும் இடங்களில் மட்டுமின்றி, நகரங்களில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பிரதான இடங்களில் இரவு ஏழு மணி முதல் நள்ளிரவு இரண்டு மணிவரை வாகனங்களை வரிசையாக நிறுத்தி உணவுகளை விற்கும் திட்டமும் உள்ளது.

நகர்புறங்களில் இருக்கும் இரவு வாழ்க்கையை உற்சாகமாக்கும் வண்ணம் இந்த உணவு வாகனங்களின் அருகில் அறிமுக இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் உணவுடன் சுவை சேர்க்கும் வண்ணம் சேர்ந்து நிகழ்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென கலை, கலாச்சார நடவடிக்கைகள் அதிகம் காணப்படும் கோழிக்கோடு, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் இந்த இரவு உணவுக் கடைகள் தொடக்கக் கட்டமாகச் செயல்படும். முன்செல்லட்டும் பெண்களின் நம்பிக்கைச் சக்கரம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்