பெண்கள் 360: அமிலவீச்சுக்குள்ளான பெண்களின் சேவை

By செய்திப்பிரிவு

அமிலவீச்சுக்குள்ளான பெண்களின் சேவை

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 2014-ல் தொடங்கப்பட்டது ‘ஷெரோஸ் கஃபே' உணவகம். சில ஆண்டுகளுக்கு முன் லக்னோவில் இன்னொரு கிளை திறக்கப்பட்டது. காதலை மறுத்தது, பாலியல் அத்துமீறலை எதிர்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உறவினர்களாலும் தெரிந்தவர்களாலும் அமிலவீச்சுத் தாக்குதலுக்குள்ளான பெண்கள் 30 பேர் இந்த உணவகத்தை நிர்வகித்துவருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த உணவகம் மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் அதை நிர்வகித்துவந்த 30 பெண்களும் தொடர்பில் இருந்தனர். உணவகத்தை மீண்டும் திறந்து நடத்துவதற்குப் பலர் நன்கொடை அளித்துவருகின்றனர். ஆனால், அப்படிப் பெறப்பட்ட நிதியை இந்தப் பெண்கள் பெருந்தொற்றுக் காலத்தில் பசியால் தவிக்கும் சாலையோர வாசிகளுக்கு உணவு சமைத்து அளிக்கப் பயன்படுத்திவருகின்றனர்.

ஷெரோஸின் இரண்டு கிளைகளிலும் பணியாற்றிய 30 பெண் களும் மீண்டும் ஒன்றிணைந்தனர். தினமும் அதிகாலையில் ஒன்றுகூடி உணவு சமைப்பதற்கான பொருட்களை வாங்கிவருவது, சமைப்பது, சமைத்த உணவைப் பொட்டலங்களில் கட்டுவது, மருத்துவமனைகளிலும் மற்ற பகுதிகளிலும் உணவின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு உணவைக் கொண்டு சேர்ப்பது ஆகிய பணிகளைத் தமக்குள் பிரித்துக்கொண்டு செயல்படு கின்றனர். தினமும் 100 பேருக்காவது இவர்களிடமிருந்து சுவையான உணவு கிடைத்துவருகிறது. பசிக்காக உணவைப் பெறுபவர்கள் அதை விரும்பி உண்ணும் வகையில் அதன் சுவை இருக்க வேண்டும் என்பதற்காக மெனக்கெடுகிறார்கள்.

ஷெரோஸ் உணவகத்தைத் தொடங்கிய அரசுசாரா நிறுவனமான சான்வ் ஃபவுண்டேஷன், அமில வீச்சு தாக்குதலுக்குள்ளான 30 பெண்களைப் பணியிலமர்த்தி ரூ.10,000 மாத ஊதியம் அளித்துவந்தது. மேலும் 70 பெண்களுக்கு மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான நிதியுதவி அளித்துவருகிறது.

பெண்களுக்குத் தனி தடுப்பூசி மையங்கள்

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை இறங்குமுகத்தில் இருந்தாலும் மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது என்றும் அதன் தாக்கத்தைக் குறைக்க மக்கள்தொகையில் 70 சதவீதத்தினருக்குத் தடுப்பூசி செலுத்திச் சமூக எதிர்ப்பாற்றலை உருவாக்க வேண்டும் என்றும் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கூறிவருகின்றனர். இந்தியாவில் 18 வயதைக் கடந்தவர்களில் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதைக் கடந்த அனைவருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தடுப்பூசிப் பற்றாக்குறையைத் தாண்டி கிராமப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தயக்கமும் பெரும் தடையாக நீடிக்கிறது. இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச அரசு பெண்களுக்கு மட்டும் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான ‘சிறப்பு இளஞ்சிவப்பு மையங்க’ளைத் (Special Pink Booths) தொடங்க முடிவுசெய்துள்ளது. மாநிலத்தின் 75 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் 18-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒன்று, 45 வயதைக் கடந்த பெண்களுக்கு ஒன்று என 150 தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. பெண்கள் தயக்கத்தைக் கடந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதற்காகக் கிராமப்புறப் பெண்களுக்கு உதவியாகவும் அவர்களுக்கான தனி தடுப்பூசி மையங்களைத் தொடங்கியிருப்பதாக அரசு கூறியுள்ளது. சோதனை முறையில் இரண்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கென்று தனி தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை.

குழந்தை வளர்ப்புக்கும் அன்னையின் உறவுநிலைக்கும் தொடர்பில்லை

மணவிலக்கு பெறும் இணையர்களின் குழந்தைகள் சுயமாக முடிவெடுக்கும் வயதை அடையும்வரை தாயின் அரவணைப்பில்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் கணவனைப் பிரியும் பெண்கள் தாம் பெற்ற குழந்தைகளைத் தம்முடன் வைத்துக்கொள்வதற்குப் பல்வேறு தடைகளைக் கணவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் ஏற்படுத்துகின்றனர். கணவனைப் பிரிந்த பெண், வேறோரு ஆணைத் திருமணம் செய்துகொள்வது அல்லது உறவில் இருப்பது அந்தப் பெண்ணிடம் குழந்தையை ஒப்படைப்பதற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட வழக்கு ஒன்றில் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு குழந்தைகளைத் தம்முடன் வைத்துக்கொண்டு வளர்ப்பதற்கான பெண்களின் உரிமைக்கு வலுச்சேர்க்கக்கூடும்.

கணவரைப் பிரிந்து ஆஸ்திரேலியாவில் வாழும் பஞ்சாபியப் பெண் ஒருவர் தன்னுடைய நான்கரை வயது மகளைக் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்தப் பெண் வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததுதான் தங்கள் மணவிலக்குக்குக் காரணம் என்றும் அதனால் குழந்தையை அவரிடம் ஒப்படைக்க முடியாது என்றும் கணவரின் வழக்கறிஞர் கூறினார். ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ஒரு பெண் திருமண உறவின்மூலம் பெற்றெடுத்த குழந்தையை ஒப்படைக்க மறுப்பதற்கு அவர் வேறோரு ஆடவருடன் உறவில் இருப்பதை நியாயமான காரணமாக ஏற்க முடியாது என்று கூறி குழந்தையை அன்னையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இன்னொரு துணையைத் தேடிக்கொண்ட பெண் முந்தைய துணையின் மூலம் பெற்ற குழந்தைக்கு நல்ல அன்னையாக இருக்க மாட்டார் என்று முடிவெடுத்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மனுதாரர், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி தந்தைவழிச் சமூகத்தில் பெண்களின் நடத்தை குறித்து அவதூறு பரப்புவதே பொதுத்தன்மையாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்