சங்க காலமோ பெருந்தொற்றுக் காலமோ எதுவாக இருந்தாலும் பெண்கள், குழந்தைகள் மீது ஆண்கள் பிரயோகிக்கும் வன்முறை காலந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து நம்மிடம் போதிய தரவுகளோ வரலாற்றுப் பதிவுகளோ இல்லாததைச் சாக்கிட்டு, அந்தக் காலத்தில் பெண்களும் சிறுமிகளும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்கள் என்று நம்புவதற்கில்லை. இப்போது பெண்களின் பொதுவெளிச் செயல்பாடும் சமூக ஊடகங்களின் பயன்பாடும் அதிகரித்துவருவதால் ஆண்கள் பிரயோகிக்கும் வன்முறைகள் குறித்து ஓரளவுக்குப் பொதுச் சமூகத்துக்குத் தெரியவருகிறது.
நம் சமூகத்தின், பண்பாட்டின், வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இதுபோன்ற வன்முறைகள் மாறிவிட்ட அவலத்தைக் களையவோ கட்டுப்படுத்தவோ நாம் எந்த அளவுக்குச் செயல்பட்டிருக்கிறோம் என்பதைத்தான் அவ்வப்போது பொதுவெளிக்கு வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மையில் சென்னையின் தனியார் பள்ளி ஒன்றின் மாணவியர் சிலர் தங்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய ஆசிரியர் குறித்துப் புகார் அளித்ததைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளிலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உடற்பயிற்சிக் கூடங்களிலும் விளையாட்டுத் துறையிலும் பாலியல் அத்துமீறல் நடப்பதையும் சிலர் கவனப்படுத்தியுள்ளனர். இவை குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் மீதான #MeToo விவகாரமும் வெளிவந்திருக்கிறது.
வீட்டுக்குள் காத்திருக்கும் ஆபத்து
பள்ளிகளில் மாணவிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டலைக் குறித்துப் பேசுகிறோம் என்பதற்காக வீடுகள் எல்லாம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பானவை என்று சொல்லிவிட முடிவதில்லை. குடும்பம், பள்ளி, அலுவலகம், பொதுவெளி என்று எல்லா இடங்களிலும் கொடுங் கரங்கள் பெண்களைத் தீண்டக் காத்துக்கொண்டிருக்கின்றன. ‘இதையெல்லாம் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?’ என்பதாகத்தான் இந்தப் பாலியல் குற்றங்களைப் பெரும்பாலான குடும்பங்கள் அணுகுகின்றன. இவற்றைச் சகித்துக்கொள்வதைத் தவிர பெண்களுக்கு வேறெந்தப் பாதையை யும் நாம் திறந்துவிடுவதில்லை. பொறுத்துக்கொள்ள முடியாமல் வெடித்துக் கிளம்பும் பெண்களையும், ‘நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் அப்படிப் பண்ணப் போறான்?’ என்று சொல்லி நிலைகுலைய வைத்துவிடுகிறோம்.
பொதுவாக இப்படியான குற்றங்கள் எல்லாமே ஆண்மை, பெண்மை, கற்பு என்பது போன்ற கற்பிதங்களால் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப் படுகின்றன. குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண் பெரும்பாலும் நம் இலக்காக இருப்பதில்லை. அவனால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணையே நாம் கலாச்சார நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி விசாரிப்போம். ‘இந்தியாவில் பெண்ணாக இருப்பது என்பது...’ என்று ட்விட்டரில் ஒருவர் எழுத, அவரைத் தொடரந்து பெண்கள் பலரும் தங்கள் அனுபவங்களை ஓரிரு சொற்களில் பகிர்ந்தனர். ‘அடக்கமாக இரு, அங்கே செல்லாதே, இதை அணியாதே, தலைமுடியைக் கத்தரிக்காதே, ஆண்களுடன் பேசாதே, படித்தது போதும், இரவில் வெளியே செல்லாதே, ஃபேஸ்புக்கில் இயங்காதே, சமையலைக் கற்றுக்கொள், வேலைக்குப் போகாதே...’ என்று நீண்டுகொண்டே போன அந்தப் பட்டியல், முன்னேறிவிட்டதாக நாம் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளும் சமூகத்தில் பெண்களின் நிலையை அப்பட்டமாக உணர்த்துகிறது.
எது ஆதாரம்?
திரை இயக்குநர், பாடலாசிரியர், பேராசிரியர், முன்னாள் மத்திய அமைச்சர், பத்திரிகை ஆசிரியர், அரசு அதிகாரி என்று யார் மீது #MeToo புகார் எழுந்தாலும், கருத்துச் சொல்லும் ‘கனவான்கள்’ களமாடத் தவறுவதில்லை. இவர்கள் எதற்கெடுத்தாலும் கருத்துச் சொல்வது வழக்கம்தான் என்றபோதும், பாலியல் புகார் குறித்து எந்த நுண்ணுணர்வும் இல்லாமல், “இவர்கள் எல்லாம் ஏன் அப்போதே சொல்லவில்லை, இப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம்?” என்றெல்லாம் கேட்டு பிரச்சினையைத் திசைதிருப்புவார்கள். பெரும்பாலும் இப்படியான கேள்விகள் குற்றமிழைத்தவருக்கே சாதகமாக முடியும். பொதுவாகப் பாலியல் சீண்டல் என்பதை உடல் சார்ந்த வல்லுறவாக மட்டுமே பலரும் புரிந்துகொண்டிருப்பதுதான் இங்கே சிக்கல். பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக அவள்மீது நிகழ்த்தப்படும் எல்லாமே வன்முறைதான். அது பேச்சாகவோ தொடுதலாகவோ குறுஞ்செய்தியாகவோ இருக்கலாம். அவளது அந்தரங்கத்தின் எல்லையைத் தாண்டிச் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வன்முறைக்கான ஆதாரத்தை அவள் எப்படிச் சேகரிக்கவோ பாதுகாக்கவோ முடியும்? ஒரு நாளில் ஒரு கணமேனும் நினைவுகளின் வழி அவளைக் கொல்லும் அருவருப்பும் பொங்கும் கோபமும்தானே ஆதாரங் களாக இருக்க முடியும்? ‘சரி போகட்டும்’ என்று அவ்வளவு எளிதாக உதறித் தள்ளிவிட முடியாத வேதனையையும் அவமானத்தையும் சுமக்கும் பெண்ணுக்கு, பல ஆண்டுகள் கழித்தாவது குற்றவாளியை அடையாளப்படுத்தும் திடம் வாய்ப்பதை நம்மில் பலரும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்?
முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி எழுப்பிய #MeToo பாலியல் குற்றச்சாட்டின் மீதான வழக்கின் தீர்ப்பில், “தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு பெண் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எங்கே வேண்டுமானாலும் எழுதலாம், சொல்லலாம். அது உண்மையின் தன்மையை நீர்த்துபோகச் செய்யாது” என்று மூன்று மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது இதன் அடிப்படையில்தான். காரணம், தன்னுடல் மீதான வன்முறையைப் பெரும்பாலான பெண்களால் அவ்வளவு எளிதாகக் கடந்துவந்துவிட முடியாது.
அதிகாரத்தின் ஆட்டம்
பள்ளி, அலுவலகம், குடும்பம் போன்ற நிறுவனங்களில் சிறுமியர், பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தப் படுவதற்குக் காரணமாக இருப்பது அதிகாரம். அது ஆண் என்பதில் தொடங்கி சாதி, வர்க்கம், பதவி, சமூக அந்தஸ்து என எந்தவிதமான அதிகாரப் படிநிலையாகவும் இருக்கலாம். இந்த அதிகாரப் படிநிலைகளில் பெண்கள் எப்போதும் கடைநிலையில் வைக்கப்பட்டி ருக்கிறார்கள். அதுவே அவர்களை எளிதில் அணுகத்தக்க இரையாகவும் ஆக்கிவிடுகிறது. இப்படியொரு கடைநிலையில் இருந்துகொண்டு தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ஒரு பெண் பொதுவெளியில் சொல்லும்போதுதான் சிலர், “ஒரு ஆளுமையையும் அவரது தனிப்பட்ட செயல்பாட்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள். இங்கே ‘தனிப்பட்ட’ என்பதே சிக்கலானதுதான். நம் சமூக அமைப்பில் யாரும் ‘தனி’ கிடையாது. குற்றமிழைத்த ஆணும் அவரால் அநீதிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணும் இந்தச் சமூகத்தின் உறுப்பினர்களே. எப்போது ஒன்று மற்றொன்றைப் பாதிக்கிறதோ அது எப்படி ஒருவரது தனிப்பட்ட செயலாக இருக்க முடியும்?
எங்கே பாதுகாப்பு?
“இதையெல்லாம் சகித்துக் கொண்டு அவர்கள் ஏன் அங்கேயே இருக்க வேண்டும், அதிலிருந்து வெளியேறலாமே?” என்கிற அர்த்தமற்ற பிதற்றலையெல்லாம் கேட்கிற நிலையில்தான் பெண்களை நாம் வைத்திருக்கிறோம். காரணம், தவறு செய்கிறவர்களைத் தண்டிப்பதைவிட, பாதிக்கப்பட்டவர்களை விலகியிருக்கச் சொல்வது எளிதுதானே. உண்மை என்னவென்றால் அப்படி விலகியிருக்கவும் முடியாத நிலையில்தான் பெண்களின் இருப்பு இருக்கிறது. ஆசிரியரும் அதிகாரியும் தவறிழைக்கிறார்கள் என்பதற்காகப் பள்ளியையும் அலுவலகத்தையும் மாற்றிக்கொண்டு செல்ல முடியுமா? அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடுமா? புதிய பள்ளியிலும் அலுவலகத்திலும் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்பதற்கான குறைந்தபட்ச உத்தரவாதம் இருக்கிறதா? நாம் வெளியேறுவதால் நமக்குப் பதில் வேறொரு பெண் பாதிக்கப்படுவாரே தவிர பிரச்சினை தீராது.
உறவினரோ கணவரோ அத்துமீறுகிறார் என்பதற்காக ஒரு பெண் குடும்பத்தைவிட்டு வெளியேற முடியாத அமைப்பில் இருந்துகொண்டுதான் நாம் பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறோம். மாற்று ஏற்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி வெவ்வேறு சிக்கல்களில் சிக்கிச் சிதைவதைவிட ஒரே பிரச்சினைக்குள் அமிழ்ந்து மூழ்கிப்போவதே மேல் என்கிற முடிவைத்தான் பெரும்பாலான பெண்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. பெண்களையும் குழந்தை களையும் இப்படியான கையறு நிலையில் வைத்துக் கொண்டு, நாம் காண்கிற முன்னேற்றமெல்லாம் எந்த வகையில் சேரும்?
கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago