பிறரது அலட்சியத்தால் உயிர்நீத்த முன்களப் பணியாளர்கள்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்த கார்த்திகா (29) எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில் கோவிட் தொற்றுக்குப் பலியானார். சில வாரங்களுக்கு முன் அவருக்கு வீட்டில் சீமந்தம்-வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் கார்த்திகா உள்பட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பலருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. முதலில் திருவண்ணாமலையில் சிகிச்சை பெற்றுவந்த கார்த்திகா பிறகு சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் இறந்தார். இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் பணியாற்றும் யமுனா, கோவிட்-19 பரிசோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தார். யமுனாவுக்கு 2022 ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மே 21 அன்று உடல்நிலை சரியில்லாததால் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்த யமுனா, அவசரப் பணிக்காக அழைக்கப்பட்டதன் பேரில் மருத்துவமனைக்குச் சென்றார். பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மது அருந்திய ஒருவர் ஓட்டிவந்த கார் மோதியதால் இறந்தார். கார்த்திகா, யமுனா ஆகிய இருவருமே முன்களப் பணியாளர்கள். இருவருமே கரோனா தொற்றால் மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவர்களின் அலட்சியத்தாலும் இறந்திருக்கிறார்கள். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி கண்டு பிடித்தாகி விட்டது. சக உயிர்களைப் பறிக்கும் மனிதர்களின் அலட்சி யத்தை எப்படித் தடுப்பது?
பாலஸ்தீன பிரச்சினையைப் பாடும் எகிப்துப் பெண்
சில வாரங்களுக்கு முன் பாலஸ்தீன விடுதலையைக் கோரும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் முகாந்திரத்துடன் காஸா நகரத்தில் இஸ்ரேலிய அரசு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உட்பட பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்தன. மறுபுறம் இஸ்ரேலிலும் பல அப்பாவிகள் ஆயுத தாக்குதல்களுக்குப் பலியாகினர். இதன் மூலம் இந்த டிஜிட்டல் யுகத்தின் இளைஞர்களும் பல ஆண்டுகளாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையை அறிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். எகிப்தில் வசிக்கும் இமான் எஸ்கர் என்னும் இளம் பெண் இந்தப் பிரச்சினையை விளக்கும் பாடல் ஒன்றைத் தாள லயம் மிக்க இசையுடன் பாடி டிக்-டாக் செயலியில் காணொலியாக வெளியிட்டுள்ளார். இரண்டு நிமிடத்துக்குக் குறைவான நேரமே ஓடும் இந்தக் காணொலியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் ஆகிய மும்மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த பாலஸ்தீனம் இஸ்ரேலால் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டுப் பாலஸ்தீனியர்கள் உயிர்களையும் உரிமைகளையும் உடைமைகளையும் இழந்த வரலாற்றைச் சுருக்கமாக விளக்குகிறது. இதில் உதுமானியப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது உருவான ஜியோனிஸ தீவிர யூத தேசியவாத சிந்தனை, முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் இங்கிலாந்தின் காலனி நாடானது, 1948-ல் இஸ்ரேல் என்னும் தனி நாடு உருவானது என்பது போன்ற வரலாறு நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன. ‘ஒருநாள் பாலஸ்தீனம் விடுதலை பெறும்; எனவே, வரலாற்றின் நியாயமான தரப்புடன் நில்லுங்கள்’ என்று உலக மக்களுக்கான கோரிக்கையுடன் காணொலி நிறைவடைகிறது. இன்ஸ்டாகிராமில் இந்தக் காணொலியை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
மழலையின் உயிர்காத்த அன்னையர்
கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் தலைப் பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள இளம் கர்ப்பிணிகள் உள்பட கர்ப்பிணிகள் பலர் கோவிட் தொற்று அல்லது அதன் துணை விளைவுகளால் மரணித்துவருகின்றனர். மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த மீனள் வெர்னேகர் (32) ஏப்ரல் 18 அன்று மாரடைப்பால் இறந்தார். அவர் இறப்பதற்கு முன், மருத்துவர்கள் கையாண்ட அவசரநிலை சிசேரியனால் வயிற்றில் இருந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. மீனளின் விருப்பத்தின்படி குழந்தைக்கு இவான் என்று பெயர் சூட்டப்பட்டது. கருத்தரித்த 32-ம் வாரத்தில் பிறந்த இவானுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக அந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட திரவ உணவு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தத் தகவல் வெளியே தெரிந்தவுடன் எண்ணற்ற அன்னையர்கள் தமது தாய்ப்பாலைத் தந்து உதவியுள்ளனர். இந்தத் தாய்மார்களின் உதவியில்லாமல் தன் குழந்தையைக் காப்பாற்றியிருக்கவும் முடியாது, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கவும் முடியாது என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் நன்றியுணர்வை வெளிப்படுத்தி யிருக்கிறார் இவானின் தந்தை சேத்தன் வெர்னேகர்.
வீட்டுக்கு வந்த பிறகும் குழந்தைக்குத் தாய்ப்பால் தேவைப்பட்டது. இதையடுத்து சேத்தனின் சகோதரி ஷானூ பிரசாத், ஃபேஸ்புக்கில் தாய்ப்பால் வழங்கும் அன்னையருக்கான குழு ஒன்றில் இது குறித்துப் பதிவிட்டார். தற்போது தானேவில் தந்தையுடன் வசிக்கும் இவானுக்கு தானேவிலும் மும்பையிலும் வசிக்கும் அன்னையரிடமிருந்து தடையின்றித் தாய்ப்பால் கிடைக்கிறது.
இவானைக் காக்கும் பணியில் தாய்ப்பால் தந்து உதவும் அன்னையர் மட்டுமில்லாமல் மற்ற பெண்களும் ஆண்களும்கூடத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். முன்னதாக மருத்துவமனையில் இருந்தபோது நாக்பூரில் வசிக்கும் சுனித் நாராயணே என்பவர் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தாய்ப்பாலைச் சேகரித்துக் கொண்டுவந்து கொடுக்கும் பணியை ஒரு மாதத்துக்கு எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் செய்திருக்கிறார். வழக்கறிஞர் பூமிகா, அன்னையர் ஆஷி குப்தா, அஸ்வாரி ரத்னாபார்க்கி, நிதி ஹிராநந்தானி ஆகியோர் கோவிட் பெருந்தொற்றில் தமது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் இந்தத் தாய்ப்பால் கொடைப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago