கரோனாவை வெல்வோம்: கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி அவசியம்

By செய்திப்பிரிவு

கரோனாவின் இரண்டாம் அலை, வீரியமிக்கதாக உள்ளதால் தொற்று எண்ணிக்கையும் இறப்புகளும் அதிகரித்துள்ளன. மற்றவர்களைப் பாதிப்பதுபோல் கர்ப்பிணிகளையும் சற்று அதிக அளவில் கரோனா தாக்கிவருகிறது. பூ முடித்தல், வளைகாப்பு போன்ற குடும்ப விழாக்களை நடத்துவது கரோனா தாக்கத்துக்கான சாத்தியத்தை மேலும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் உலகிலும் இந்தியாவிலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களில் இதுவரை எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை.

யாருக்கு அதிக கவனம் தேவை?

கர்ப்பிணிகளில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சுவாச நோய், ரத்தசோகை, குறை தைராய்டு, சிறுநீரக நோய் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், கரோனா தொற்று ஏற்படும்போது ஆபத்து அதிகமாகிறது. மேலும் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகமாகிறது.

கர்ப்பிணிகளுக்கு ரத்தம் உறையும்தன்மை பொதுவாகவே அதிகரிக்கும். தவிர, கரோனா தொற்று உள்ளவர்களுக்கும் இதே பிரச்சினை ஏற்படுவதாலும் கர்ப்பிணிகளுக்கு முன்னெச்சரிக்கை அவசியமாகிறது. மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட்டு நீரிழிவு, மிகை ரத்த அழுத்தம், குறை தைராய்டு, ரத்தசோகை போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவது நன்மை பயக்கும்.

கோவிட் 19 தடுப்பூசி

இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதும், தீவிரத் தொற்றால் இறப்பு ஏற்படுவதும் பெரிதும் குறைந்துள்ளது. இந்திய அரசு கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தது. இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஆய்வுகள்

எந்தவொரு தடுப்பூசியும் முதலில் ஆய்வகத்திலும் பின்னர் விலங்குகள் மீதும் பரிசோதிக்கப்படும். பிறகு, இளம் வயதினர், இணை நோய் இல்லாதவர்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் என்கிற வரிசையில் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படுகின்றன. பாதுகாப்பு - செயல்படும் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். வீரியம் குறைக்கப்பட்ட, உயிரோடு இருக்கும் கரோனா வைரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசியைக் கர்ப்பிணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், தற்போது அது போன்ற ஒரு கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இல்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள வைரஸ் வெக்டார் - எம்.ஆர்.என்.ஏ., முறையிலான தடுப்பூசிகளிலும் நடைமுறையில் பிரச்சினைகள் காணப்படுவதில்லை. எனவே, கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசியைக் கொடுப்பதை மறுப்பதற்கு முக்கியக் காரணம் ஏதுமில்லை.

கர்ப்ப காலத்தில் கோவிட் 19

கரோனா வைரஸ் தொற்று, பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக்கொடியில் வில்லைட்டிஸ் அழற்சி, ரத்த ஓட்ட மாறுபாடு போன்றவை இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டியது. கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக்கொடியில் ஆய்வு செய்ததில் வில்லைட்டிஸ் அழற்சி, ரத்த ஓட்ட மாறுபாடு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கர்ப்பமாக இருக்கும்போது கோவிட் -19 தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது என்கிற கருத்துக்கு இக்கண்டுபிடிப்பு வலுச்சேர்க்கிறது.

ஃபைசர், மாடர்னா ஆகிய கோவிட் தடுப்பூசிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் - அவர்களின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் அவரின் மூலமாகவும், தாய்ப்பால் மூலமாகவும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எதிரணு (Antibody) உருவாகிறது. இதில் கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசியால் தூண்டப் பட்ட எதிரணுக்களின் அளவு கர்ப்பிணி - பாலூட்டும் பெண்களுக்குச் சமமாக இருந்தன. கர்ப்ப காலத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதைவிட எதிரணு அளவு மிக அதிகமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தடுப்பூசி மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வில்லை எனவும் தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன.

தடுப்பூசி தொடர்பான ஒவ்வாமை, பக்க விளைவுகள், தடுப்பூசிக்குப்பின் ஏற்படக்கூடிய தொற்று சாத்தியமெல்லாம் மற்றவர்களைப் போல் கர்ப்பிணிகளுக்கும் உண்டு.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பலன்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மகப்பேறு மருத்துவர்களின் சங்கங்கள் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் மகப்பேறு மருத்துவர்களின் அமைப்புகள், பாதுகாப்பான கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் வாய்ப்பைக் கர்ப்பிணிகள் பெற வழிவகைகளைச் செய்ய வலியுறுத்துகின்றன.

இந்திய தேசியத் தடுப்பூசி வழிகாட்டும் அமைப்பு (National Technical Advisory Group for Immunisation) கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கரோனா தடுப்பூசி போட பரிந்துரைத்திருந்தது. ஆனால், மத்திய அரசு இன்னும் இந்தியாவில் கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி வழங்க அனுமதிக்கவில்லை. இருப்பினும், விரைவில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் கர்ப்பிணிகளுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டு கிடைத்த அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள்

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று தமிழக அரசு முன்பு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், தற்போது பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டில் ஏதேனும் ஒன்றைப் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்வது நல்லது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்தடையின்போது தடுப்பூசி போடலாமா?

கோவிட் தடுப்பூசியை மாதவிடாய் காலத்திலும், கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும்போதும், கருத்தரிப்பதற்கு முன்னும் போட்டுக்கொள்ளலாம். கோவிட் தடுப்பூசியைப் போடும் முன், அப்பெண் கர்ப்பமாக இருக்கிறாரா எனப் பரிசோதிக்கத் தேவையில்லை. ஒருவேளை கோவிட் தடுப்பூசியைப் போட்ட பின்பு கருவுற்றிருப்பது தெரியவந்தால், அந்தக் கருவைக் கலைக்கத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாதவிடாய் கோளாறுகளோ மலட்டுத்தன்மையோ வருவதில்லை.

இது பெண்களின் உரிமை

கரோனா தொற்று நீர்த்திவலைகள் - காற்றின் மூலம் பரவுகிறது. தொற்றும் விகிதமும் வேகமும் தீவிரமாக உள்ள நிலையில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நம் நாட்டில் கர்ப்பிணிகள் தங்களைத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது கடினம்.

இந்தியாவில் கர்ப்பமாகவோ, பிரசவித்தோ, குழந்தை பிறந்த நிலையிலோ ஒரு வருடத்தில் 5 கோடிப் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கு கோவிட் தடுப்பூசி பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும். சொந்த விருப்பத்தின் பேரில், மருத்துவரின் ஆலோசனையுடன் கர்ப்பிணிகள், முக்கியமாக இணைநோய் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவத் துறைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. ஆனால், மருத்துவர்களிலும் செவிலியர் களிலும் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதால் பலர் கர்ப்பிணிகளாகவும், குழந்தைகளுக்குப் பாலூட்டும் நிலையிலும் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 40-க்கும்மேற்பட்ட கர்ப்பிணிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதில் இரண்டு மருத்துவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் ஐந்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி மருத்துவர்கள் இறந்துள்ளனர்.

குழந்தை பெறுதல் மூலம் மனித குலம் தழைக்க உதவுவதில் பெண்களின் பங்கு மகத்தானது. ஆனால், அதைக் காரணம்காட்டியே பெண்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசி பெறும் வாய்ப்பைத் தொடர்ந்து மறுக்க முடியுமா? மத்திய அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் தேவைப்படுகிற ஆய்வுகளை விரைந்து மேற்கொண்டு, கர்ப்பிணிகளுக்கு கோவிட் 19 தடுப்பூசியைப் பெற அனுமதி அளிக்க வேண்டும்.

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர். தொடர்புக்கு: drshanthi.ar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

41 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்