கரோனாவை வெல்வோம்: எது உண்மையான செவிலியர் நாள் வாழ்த்து?

By பிருந்தா சீனிவாசன்

கரோனா இரண்டாம் அலையின் தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. அவற்றில் மருத்துவப் பணியாளர்களின் இழப்பும் அடக்கம்.

மே 10 நிலவரப்படி கர்ப்பிணி மருத்துவர் ஒருவரையும் இரண்டு செவிலியரையும் கரோனா இரண்டாம் அலைக்குப் பலியாகக் கொடுத்திருக்கிறோம். ஏழு நாள் வேலை, ஏழு நாள் தனிமைப் படுத்துதல் என வீட்டுக்கே திரும்பாமல் மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் சேவையை அங்கீகரிப்பதன் ஓர் அங்கமாக, சர்வதேச செவிலியர் நாளான மே 12 அன்று செவிலியருக்கு வாழ்த்துச் செய்திகளும் பாராட்டு மடல்களும் பூங்கொத்துகளும் அனுப்பப்பட்டன.

ஆனால், தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்குவதுடன் பணிச் சுமையைக் குறைப்பதுதான் தற்போதைய தேவை என்கின்றனர் செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள்.

கர்ப்பிணி கள், பாலூட்டும் தாய்மார்கள், இணைநோய் உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர் ஆகியோர் கரோனா பிரிவில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. இருந்தும், மருத்துவப் பணியாளர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாவது தொடர்கிறது. கரோனா பிரிவில் கவச உடையணிந்து பணியாற்றுவதால் தொற்று ஆபத்து குறையும். ஆனால், கரோனாவின் தீவிர சமூகப் பரவல் நிலையில் மற்ற பிரிவுகளில் நோயாளிகளை எதிர்கொள்ளும்போது, மருத்துவப் பணியாளர்களுக்குத் தொற்று ஆபத்து அதிகமே என்பதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்

“தமிழகத்தில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தான் இருக்கின்றனர். மருத்துவர் பற்றாக்குறையால் அனைவரும் ஏதோவொரு பிரிவில் பணியாற்றத்தான் வேண்டியிருக்கிறது. இதைக் குறைக்க, போர்க்கால அடிப்படையில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்லாமல், பாராமெடிக்கல் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

எளிதாகத் தொற்றக்கூடிய ஆபத்தை எதிர்கொள்ளும் மருத்துவப் பணி யாளர்களை, நேரடியாக நோயாளிகளைச் சந்திக்கத் தேவையற்ற பணிகளுக்கு மாற்றலாம். கர்ப்பிணிகளுக்கு மற்றவர்களைவிட நோய்த்தொற்று தீவிரமடையும் சாத்தியம் அதிகம் என்பதால், அவர்களுக்குத் தடுப்பூசி போடப் பரிந்துரைக்கலாம். அமெரிக்காவில் அதற்கான ஆய்வு கள் முடிந்து, அங்கே கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடப்படு கிறது. இங்கேயும் தகுந்த ஆய்வுகளைத் துரிதப்படுத்துவதுடன், தாயின் உயிர் காக்கும் பொருட்டு கர்ப்பிணிகளின் ஒப்புதலோடு தடுப்பூசியைப் பரிந்துரைக்கலாம். நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை எதிர்கொள்வதால், தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் மறுதொற்று ஏற்படக்கூடும். அதனால், தடுப்பூசி போட்டுக்கொண்டதைக் காரணமாகச் சொல்லி அவர்களுக்குத் தனிமைப் படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கக் கூடாது.

ஏழு நாள் பணி, ஏழு நாள் தனிமைப் படுத்துதல் அவசியம். மருத்துவர் பற்றாக்குறையால் இவர்களை ஏழு நாட்கள் முடியும் முன்பே பணிக்குத் திரும்பச் சொல்லக் கூடாது. முதல் அலை தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 15 மாதங்களாகத் தொடர்ந்து கரோனா பணியில் இருப்பதால் அதிகத் தொற்று, மரணம் போன்றவை மருத்துவர்களையும் மனரீதியாகப் பாதிக்கக்கூடும். அதனால், அவர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்துதல் அவசியம். அதற்கான ஏற்பாட்டையும் அரசு செய்துதர வேண்டும்.

மகப்பேறு விடுப்பைக் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மருத்துவக் கருவிகள், பாதுகாப்புக் கவசங்கள், மாத்திரைகள் ஆகியவற்றைத் தட்டுப்பாடின்றி அரசு வழங்குவது சிகிச்சையைத் துரிதப்படுத்தும். சிலருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும், நுரையீரல் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கின்றனர். அவர்களது மரணங்களையும் கரோனா மரணமாகக் கருதி இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் கேட்பதெல்லாம் சலுகைகள் அல்ல. அடிப்படைத் தேவைகளைத்தான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர்.

பணிச்சுமையைக் குறையுங்கள்

செவிலி என்றதுமே பெண் செவிலியின் நினைவுதான் பலருக்கும் வரும். பரிவு, பொறுமை, சேவை மனப்பான்மை போன்றவை எல்லாம் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் என்கிற நினைப்பால் தோன்றும் சித்திரமாகவும் அது இருக்கலாம். தமிழகத்தில் ஐந்து சதவீத செவிலியர் ஆண்கள். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலி ஒருவர், தன் கரோனா கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக மோசமாக இருக்கிறது. இணை நோய்கள் இல்லாத, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்தவிதக் கெட்டப் பழக்கமும் இல்லாத 25, 35 வயதுள்ள இளைஞர்கள் இரண்டாம் அலையில் இறப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. நிலைமையின் தீவிரம் புரியாமல் சாதாரணக் காய்ச்சல்தான், சளித்தொற்றுதான் என்று ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதன் விளைவு இது. இப்படிச் செய்வது அவர்களது குடும்பத்துக்கு மட்டுமான தனிப்பட்ட இழப்பல்ல. அவர்கள் மற்றவர்க ளுக்கு நோயைப் பரப்புவதுடன் மருத்துவப் பணியாளர்களின் பணி நெருக்கடியையும் சேர்த்தே அதிகரிக்கிறார்கள்.

செவிலிப் பணி என்பது 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்வது. பலருக்கும் ஆக்சிஜன் அளவு சரிவதால், அவர்களால் உட்காரவோ, எழவோகூட முடியாது. கரோனா வார்டில் உதவியாளரை அனுமதிக்க முடியாத நிலையில் நோயாளிகள் சிறுநீர், மலம் கழிக்க செவிலியரே உதவ வேண்டியிருக்கிறது. ஒரு வார்டில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் இல்லாத நிலையில் பணிச்சுமை கூடுகிறது. அதனால், போதுமான அளவுக்குச் செவிலியரைப் பணிக்கு அமர்த்த வேண்டும்.

மருத்துவப் பணியாளர் வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் 1,212 பேருக்குப் பணி நிரந்தரம் வழங்கியது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகப் பணியாளர்களாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிவருகின்றனர். கரோனா கால நெருக்கடியை மனத்தில் கொண்டாவது, அவர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். கணவன், மனைவி இருவருமே மருத்துவப் பணியில் இருந்தால் ஒருவருக்கு கரோனா பணியில் இருந்து விலக்கு அளிக்கலாம். செவிலியருக்கான தனிமைப்படுத்துதல் மையங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதுடன் உணவின் தரத்தையும் சீராக்க வேண்டும்.

மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை யால் சில மருத்துவமனைகளில் ஏழு நாள் தனிமைப்படுத்துதலை மூன்று நாட்களாகக் குறைத்துக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. இது தவறான அணுகுமுறை. மருத்துவப் பணியாளர்க ளுக்கு மூன்று மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அறிவிப்புடன் நின்றுவிடாமல், அதை விரைந்து வழங்க வேண்டும். காரணம், கடந்த ஆட்சியில் ஏப்ரல் 2020-ல் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையான ஒரு மாத ஊதியம் இப்போதுவரை வழங்கப்படவில்லை” என்று தங்களது தேவைகளைப் பட்டியலிடுகிறார் பெயர் வெளியிட விரும்பாத செவிலி ஒருவர்.

நமக்கும் பொறுப்பு உண்டு!

மருத்துவப் பணியாளர்கள் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிற அதேநேரம் பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. ஊரடங்கில் வீட்டுக்குள் இருப்பதும், தவிர்க்க முடியாத சூழல் அமைந்தால் இரட்டை முகக்கவசம் அணிந்து வெளியே செல்வதுடன் சமூக இடைவெளியைக் கடைபிடித்து நோய்த்தொற்றையும் பரவலையும் குறைப்பதும் அவசியம்.

எந்தச் சிறிய அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் சிகிச்சை பெறுவது நோய்ப்பரவலைக் குறைப்பதுடன், மருத்துவப் பணியாளர் களின் நெருக்கடியையும் நிச்சயம் குறைக்கும். நோய் வந்துவிட்டால் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் நம்மைக் காப்பாற்ற வேண்டு மென எதிர்பார்க்கிறோம். அதேபோல், அவர்களுடைய பணிச்சுமையையும் நெருக்கடி யையும் அதிகரிக்காமல் இருக்க நாமும் பொறுப்புடன் செயல் படுவதுதானே சரியாக இருக்கும்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்