பெண் எனும் பகடைக்காய்: யாருக்கு வேண்டும் பிளாஸ்டிக் பூமாலைகள்?

By பா.ஜீவசுந்தரி

ஊழிப் பெருவெள்ளமாய்க் கிளம்பி, ஊர் முழுவதும் சூழ வலம் வந்து கடலுக்குள் தஞ்சமடைந்தாலும், இன்னமும் விட்டுப் போக மனமில்லாமல் அகழியைப் போலச் சூழ்ந்துகொண்டு நிற்கிறது தண்ணீர். தேங்கி நிற்க அதுவே கழிவு நீராக, சாக்கடையாக உருமாறிக் கொசு உற்பத்திப் பண்ணைகளாகப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே டெங்கு, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. நீர் வடிந்த இடங்களில் எல்லாம் எங்கெங்கிருந்தோ அடித்துக்கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகள், புதிதாக வளர்ந்த மலைகளைப் போல அங்கங்கே வழி மறித்து நிற்பதைப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது மாறாத இயற்கை விதி. இப்போது அதைத்தான் பறைசாற்றிக்கொண்டு நிற்கின்றன அத்தனை அழுக்கும் கசடுகளும்.

கடல் அலைகளின் தாலாட்டில் இவ்வளவு காலமும் ஒரு சொகுசு நகரமாக மட்டுமே அறியப்பட்ட சென்னை மாநகரம், கழிமுகத் துவாரமும் இதுதான் என்பதை இன்று நினைவூட்டியிருக்கிறது. சுற்றுச்சூழலாளர்கள் கதறியபோதெல்லாம் கவனிக்காதவர்கள் இனியாகிலும் பசுமையையும் இயற்கையையும் பேண முன்வர வேண்டும். இது போன்றதொரு மழையை இந்தியாவின் எந்த நகரத்தாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதும் அவர்கள் சொல்லும் கருத்து. உரிய வடிகால் வசதிகளை நீர்வழிகளை எல்லாம் அடைத்துக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு.

உலகெங்கிலும் தொடரும் போர்ச் சூழலில் பெண்கள் படும் பாடுகளைப் படித்து அறிந்துகொண்டதை எல்லாம் அனுபவபூர்வமாகவும் ஓரளவுக்கு உணர வைத்தது இந்தப் பெருமழை. எல்லாக் காலங்களிலும் பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்பவர்கள் பெண்கள். போர்க் காலங்கள், பேரிடர் காலங்களில் அதுவே இரட்டிப்பாகிறது. ஏறக்குறைய ஒரு போர்க் காலச் சூழலைத்தான் அனுபவித்தோம். பதுங்கு குழிகளுக்கு மாறாக, வீட்டுக்குள், முகாம்களுக்குள் அடைந்து கிடந்தது வாழ்க்கை. மின்சாரம், குடிநீர், பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் ஏதுமின்றி, ஊருக்குள் என்ன நடக்கிறது என்று செய்தி அறிய முடியாமல், ஒரு மெழுகுவர்த்தி வாங்கவும் வழியில்லாமல் பட்ட பாடுகள் அனைத்தையும் உணர வைத்தது. மேலிருந்து குண்டு விழாதது ஒன்றுதான் குறை. ஆனால், ஒவ்வொரு நாளும் மழை தொடர்ந்த போதெல்லாம் வானத்தைப் பார்த்து அதிர்ந்தோம்.

கிணறுகளை மூடி சீல் வைத்துவிட்டு, வீட்டுக்கு மேலே நீர்த் தொட்டிகளைக் கட்டி வைத்து, கீழிருந்து நீரை மின் மோட்டார் மூலம் மேலேற்றி, பின் குழாய்களின் வழி கீழிறக்கி செலவழித்த நமக்கு, அனைத்துத் தேவைகளுக்கும் மின்சாரத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, எத்தனை பாடம் சொல்லிச் சென்றிருக்கின்றன இந்தப் பெருமழையும், வெள்ளமும். கழிவறைத் தேவைக்கும்கூடத் தண்ணீரின்றித் தவித்த ஐந்து நாட்கள் என்பது, போதி மரத்தடியில் புத்தனுக்கும் எட்டாத ஞானோதயமாக நமக்கு உறைத்திருக்கிறது. கிணறுகளின் தேவையை இதைவிட உணர வைக்க வேறு வழியிருக்கிறதா? தண்ணீர் சிக்கனத்தையும் சேர்த்தே சொல்லித் தந்திருக்கிறது. நீர் மேலாண்மை பற்றி தனியாகப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

நாம் வீசி எறிந்த ஞெகிழி என்ற பிளாஸ்டிக் குப்பைகள் – நாம் வீசிய குப்பைகள்தான் - இப்போது நம் முன்பாகப் பெரும் சவாலாக எழுந்து நிற்கின்றன. தண்ணீர் அடித்துக்கொண்டு வந்து ஆங்காங்கே அடையாளம் காட்டி வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கின்றன. கழிவுநீர்க் கால்வாய்களை அடைத்துக்கொண்டதில் பெரும் பங்கு இவற்றுக்கு இருக்கிறது. அதை வீசி எறிந்த நமக்கும் அதில் பங்கிருக்கிறது. இந்தக் குற்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டும். நிவாரணப் பொருள்களை அளிக்க இந்த பாலிதீன் பைகள், உணவு பாக்கெட்டுகள் என மீண்டும் இந்த பிளாஸ்டிக் சனியன் முன்னே நிற்கிறது. மேலும் மேலும் குப்பையாகச் சேர்வது அச்சமூட்டுகிறது. எடுத்துச் செல்ல எளிதாகவும், தூக்கி வீசிவிட அதை விட எளிதாகவும் இருப்பதால் பிளாஸ்டிக்கின் பயன்பாடு நிறுத்தப்பட முடியாமல் தொடர்ந்து கொண்டேயிருப்பது பேரவலம். இனியாகிலும் படிப்படியாக அதன் பயன்பாட்டைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

‘மஞ்சப்பை’ என்று கேலி செய்யப்பட்ட துணிப்பைகள் இப்போது ஆபத்பாந்தவனாக நினைவில் நிழலாடுகின்றன. மழை வெள்ளத்துக்கு அனைத்தையும் பலி கொடுத்து வாழ்வாதாரம் ஏதுமின்றி நிற்பவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு துணிப்பைகள் தயாரிக்கும் பணியை அரசு உருவாக்கிக் கொடுத்தால், அது ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பலனளிக்கும். பாலிதீன் பயன்பாட்டையும் குறைக்கும். தையல் பணியைத் தையல்களும் மனமுவந்து ஏற்பார்கள். இரே கல்லில் இரு மாங்காய் பாணியாகவும் இதை ஏற்றுக்கொள்ளலாம்.

தொழில் நுணுக்கம், அறிவியல் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் சிதைக்கப்பட்ட இயற்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இயற்கையைச் சீரழித்து, நாகரிக உலகை, தொழில்நுட்ப அறிவியலைக் கொண்டு பிளாஸ்டிக்கில் அரிசி படைத்து உண்ண முடியாது. நீராதாரமும் பசுமையாக விளைந்த காய்கனிகளும் மனித உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை. சோடியம் விளக்கைப் பால் நிலாவென்று காட்டி ஏமாற்றி நம் குழந்தைகளுக்கு சோறூட்ட நம் அம்மாக்கள் ஒப்புக் கொள்வார்களா? பிளாஸ்டிக் பூக்கள் ஒரு பெண்ணுக்கு எப்போது மனநிறைவைத் தருகிறதோ, அப்போது மறுபடியும் இயற்கையை நோக்கித் திரும்ப மனிதர்களுக்கு மனம் வராமல் போகலாம். ஆனால், அதைவிட கேலிக்கூத்து வேறேதும் இருக்காது. தற்கொலை முயற்சிக்கு ஈடானதுதான் அந்த மனநிலை. அந்த நிலையை நோக்கிப் போவதற்கு முன்பாக, இப்போதே தடம் மாறுவோம். அதற்கான நேரம் இதுதான். பெண்கள் நாமே அதற்கு முன்னுதாரணமாக முன் முயற்சியை எடுக்கலாம்.

இவ்வளவு இன்னல்களை, துன்பங்களை அனுபவித்தபோதும், அதிர்ச்சியான காட்சிகளும் அதிர வைத்தது உண்மை. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளுக்கு இடையிலும் ‘டாஸ்மாக்’ சரக்குகள் மட்டும் குறையில்லாமல் கிடைத்ததைப் பார்த்து மனம் நொந்துபோனது. வீதிகளில் நடமாடிய பலரும் ‘நறுமணம்’ கமழ போதையுடன் தள்ளாடியதையும், துள்ளியதையும் எந்த வார்த்தைகளில் எழுத?

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்