பார்வை: பெண்கள் பாதுகாப்பே நாடடின் முனனேற்றம்

By தனசீலி திவ்யநாதன்

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25-ம் தேதியை ‘பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளா’கக் கடைபிடிக்க அழைப்புவிடுக்கிறது. முதல் உலக நாடுகள் தொடங்கி மூன்றாம் உலக நாடுகள்வரை பெண்களின் நிலை வருந்தத்தக்கதாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, உலக நிதியம் மற்றும் பல்வேறு நாடுகளின் சட்டங்களும் திட்டங்களும் பெண்களின் நலன், உரிமைகள், முன்னேற்றம், பாதுகாப்பு போன்றவற்றில் தொடர்ந்து அக்கறைகாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் பெண்கள் அவற்றை அடைவதற்குப் பெரும் தடையாக இருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறை. வன்முறை அற்ற வாழ்வே, ஆண் - பெண் சமத்துவம், அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுக்க முடியும். எனவேதான், ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இந்த நாளைக் கடைப்பிடிக்க அழைப்புவிடுத்துள்ளது. அது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையப் பொருளில் (Theme) இந்த நாளைக் கொண்டாட அழைக்கிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருள், ‘வன்முறையைத் தடுப்போம்’.

உலக அளவில் ஒரு பெண் அவளின் வாழ்நாளில் ஒருமுறையாவது உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள். தனிமனிதர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தச் சமூகமே பெண்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்துவதையே இது உணர்த்துகிறது. ஒரு சமூகம், வன்முறையை உருவாக்கி, அங்கீகரித்து, செயல்படுத்த முடியும் என்று சொன்னால், அதே சமூகம் அதைத் திட்டமிட்டுத் தடுக்கவும் முடியும் என ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது. ஆனால், அது அவ்வளவு எளிதானதா? ஓர் உயிர்க்கொல்லி நோய்க்கான கிருமி எதுவெனக் கண்டறிந்து தடுப்பதுபோல் நாம் இதனைத் தடுத்துவிட முடியாது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்குக் காரணமான கிருமிகள் எண்ணற்றவை, தொன்மையானவை, நம்பிக்கை, பண்பாடு, கருத்தியல் சார்ந்தவை. ஆண் - பெண் பாகுபாட்டால் தொடர்ந்து நிகழ்பவை. எனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் செயல்பாடுகளும் பன்முகத்தன்மை கொண்டதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு இது தேவையா?

பெண்களை தெய்வமாக, நதியாக, நிலமாகக் கொண்டாடும் இந்தியாவில் இந்த நாள் குறித்த விழிப்புணர்வும், கொண்டாட்டங்களும் அவசியமா என்ற கேள்வி எழலாம். ஆனால், சமூகத்தில் அரங்கேறும் அவலங்கள் இந்த நாளை நாம் கொண்டாட வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நாடுகள் எவை என சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சுகாதாரப் பிரச்சனை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறை, பண்பாடு, மதம் மற்றம் பாரம்பரியத்தின் பெயரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளங்கள் சரியாகக் கிடைக்காதது, பெண் கடத்தல் என்ற ஆறு பிரச்சினைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும் அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் காங்கோ, பாக்கிஸ்தான் நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உலகமக்கள் நிதியம், மற்றும் வாஷிங்டனில் செயல்படும் சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை, இந்தியாவில் 60% ஆண்கள் மனைவியை அடிப்பதை ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான நிகழ்வுகள் சென்ற ஆண்டைக்காட்டிலும் 19% அதிகரித்தி ருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை நமது தேசிய அவமானம் என்பதைக் காட்டுகின்றன. மேலும் இந்த நாளை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதோடு, திட்டமிட்ட தொடர் செயல்பாட்டுக்கு ஆண் - பெண் இருவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

வன்முறையை எதிர்க்கும் ஆரஞ்சு வண்ணம்

உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்களும் பெண்களும் ஆரஞ்சு வண்ணத்தில் உடையணிந்து, வன்முறை ஒழிப்பு தினத்தைக் கொண்டாடு கின்றனர். ஆரஞ்சு வண்ணம், வன்முறையற்ற வண்ணமயமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது என்கின்றனர். அரசும் முக்கியமான கட்டிடங்கள், சுற்றுலாத்தலங்களை ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிரச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வன்முறையைத் தடுத்தலும் முடிவுக்குக் கொண்டுவருதலும் அனைவரின் பொறுப்பு. வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்கான திட்டமிட்ட செயல்பாடுகளை ஊக்குவிப்பது, வன்முறைக்கு ஆளான பெண்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்குவது, அவர்களுக்கு உடல், மன நல உதவிகளைத் தருவது, ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்துவது, தனிநபர் தொடங்கி அரசு வரையிலான அனைத்து மட்டங்களிலும் இதற்கான முயற்சிகள் இன்றியமையாதவை.

தேவை விழிப்புணர்வு

மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பவை தனிமனிதச் செயல்பாடு கள். மேலம் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் களாக இருப்பவர்கள் என்ற உண்மை, தனிமனித மாற்றத்தைக் கோருகிறது. வன்முறை, வீட்டுக்குள் நிகழ்ந்தாலும் அது குற்றச்செயலே என்ற உண்மையை உணர்வதும், அது தண்டனைக்குரிய குற்றம் என ஏற்றுக்கொள்வதும் அவசியம்.

வன்முறைக்கு உட்படுத்தப்படும் பெண்கள், கணவன் அடிப்பதை இயல் பான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளாமல், அதனை எதிர்க்கவும், தடுக்கவும் வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியை நாடத் தயங்கக் கூடாது. ஆண் - பெண் இருவருமே வன்முறையற்ற வாழ்வைத் தேர்வுசெய்ய வேண்டும்.

குடும்பம்

கருவறை முதல் கல்லறை வரை பெண்களின் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் குடும்ப அமைப்பே வன்முறையை உற்பத்தி செய்து, ஏற்றுக்கொண்டு, அங்கீகரித்துச் செயல்படுகிறது. அதோடு ஆண் - பெண் இருவரையும் அதனை ஏற்றுக்கொள்ள பழக்குகிறது. ஆண் - பெண் உறவு, அடக்குதல் - அடங்கிப்போதல் என்பதில் உள்ளதாக நம்புகிறது. பெண்ணை அவள் இருக்க வேண்டிய இடத்தில் வைக்க, ஒழுங்குபடுத்த, அடக்கி ஒடுக்க, தண்டிக்க போன்றவற்றுக்கு வன்முறையையே நமது குடும்ப அமைப்புகள் நம்புகின்றன. இதிலிருந்து நமது குடும்பு அமைப்புகள் விடுபட வேண்டும். பெண்ணுக்குப் பாதுகாப்பை, உரிமைகளை, சுதந்திரத்தை உறுதி செய்யும் ஜனநாயக அமைப்பாக அது மாற வேண்டும்.

சமூகம்

சமூகம், தனிமனித, குடும்ப, குழு வாழ்வுக்கான நெறிகளை வகுத்து, அதைப் பண்பாடாகப் பயிற்றுவிக்கிறது. பெரும்பாலான சமூக அமைப்புகள் தந்தை ஆதிக்க, ஆணாதிக்க அமைப்புகளாகவே விளங்கியவை. அதன் தொடர்ச்சியை இன்றும் நாம் காண முடியும். பெண்களை அதிகம் படிக்கவைக்காமல் இருப்பது. படித்தாலும் வேலைக்கு அனுப்பாத நிலை, இளம் வயதில் திருமணம், ஏராளமான வரதட்சணை, விதவை களுக்கு மறுமணம் மறுப்பு என்பவை யெல்லாம் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தச் சமூக ஒழுங்குகளே பெண்ணின் உரிமைகளை, வாழ்வை தீர்மானிப்பவையாக உள்ளன. ஆனால், சமூக அமைப்புகளில் வகுக்கப்படும் நெறிகளும் பண்பாடும் மாறும் தன்மை கொண்டவை என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. பெண்களுக்கு எதிரான நெறிமுறைகளை அது சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

அரசாங்கம்

மக்களின் வாழ்வைத் தீர்மானிப்பதில் அதிகாரம் கொண்ட அமைப்பு, அரசாங்கம். இதன் நீதித் துறை, நிர்வாகத் துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டின் மூலமே அமைதியான சூழலை உருவாக்க முடியும். அமைதியே முன்னேற்றத்தின் முதல் படி. இது பெண்களுக்கும் பொருந்தும். பெண்களின் முன்னேற்றம் அவர்களின் பாதுகாப்பில், அமைதியில் அடங்கியுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது. அரசாங்கம் பெண்களின் உரிமைகளை பாதுகாத்து, வன்முறையற்ற வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும். தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்குவது, பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் வழங்குவது போன்றவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்