உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ரெபேகா லோலோசோலி கென்யாவின் சம்புரு பழங்குடியைச் சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளாகப் பெண்கள் மட்டுமே வாழும் கிராமத்தை உருவாக்கி, பெண்கள் சுயசார்புடன் வாழ்க்கை நடத்தப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
சம்புரு பழங்குடிகளில் பெண் களுக்கு உரிமைகளோ மதிப்போ கிடையாது. ஆண்கள் ஆடு, மாடுகளை வரதட்சணையாகக் கொடுத்து, பெண்களைத் திருமணம் செய்துகொள்வார்கள். ஒரு பொருளைப் போன்று வாங்கப்பட்ட பெண்கள், ஆண்களுக்குக் கீழ் அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி கிடையாது. வேலை செய்து சம்பாதிக்க முடியாது. கட்டாயத் திருமணம், பெண் உறுப்புச் சிதைப்பு போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியாது.
ரெபேகா பள்ளிக் கல்வி பயின்றவர். 18 வயதில் திருமணம், 5 குழந்தைகள். பிரிட்டன் ராணுவ வீரர்கள் ரெபேகா உட்பட 15 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தனர். பலாத்காரத்தைக் காரணம் காட்டி, ரெபேகாவை விற்க முடிவெடுத்தார் அவருடைய கணவர். இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தார் ரெபேகா. அங்கே பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்களைக் கணவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. சிலர் உணவின்றி இறந்துபோவார்கள். சிலர் கழுதைப்புலிகளுக்குப் பலியாவார்கள். எஞ்சியிருப்பவர்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, மிக மோசமாக நடத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினார் ரெபேகா.
தன்னந்தனியே
ஒற்றுமை என்று பொருள்படும் ‘உமோஜா’என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார்கள். பழங்குடி உணவுகளைச் சமைத்து விற்க ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு உணவு விற்பனை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர். இந்தத் தொழில் சூடு பிடித்தது. அதோடு பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிவந்த பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், கணவனின் வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள், படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள் என்று ஏராளமானவர்கள் உமோஜாவை நாடிவந்தனர். அனைத்துப் பெண்களையும் அன்புடன் அரவணைத்துக்கொண்டார் ரெபேகா.
தாக்குதல் தொடுக்கும் ஆண்கள்
பெண்கள் தனியாக இயங்கு வதையும் சம்பாதிப்பதையும் பழமையில் ஊறிய பழங்குடி ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதுபோல கிராமத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இடத்தைக் காலி செய்ய வற்புறுத்தினர். சொந்தமான இடமாக இருந்தால் யாரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார் ரெபேகா.
பெண்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தனர். தாங்கள் வசிக்கும் இடத்தைச் சொந்தமாக வாங்கினார்கள். நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தார்கள். சுற்றிப் பார்க்கவோ, தங்கள் பொருட்களை வாங்கவோ ஆண்கள் வரலாமே தவிர, பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் உள்ளே ஓர் ஆணும் அடி எடுத்து வைக்கக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். கூட்டம் கூட்டமாக ஆண்கள் வந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் பெண்கள் ஒற்றுமையாக நின்று அனைத்தையும் சமாளித்து வருகிறார்கள்.
கல்வி, மருத்துவம், சட்டம்
கல்வி அறிவே தங்கள் நிலையை மாற்றும் என்பதை உணர்ந்தவர்கள், தங்கள் சேமிப்பில் ஒரு பள்ளியைக் கட்டினார்கள். இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். இன்று உமோஜா குழந்தைகள் மட்டுமின்றி, அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இங்கே படிக்கிறார்கள். இரண்டு வேளை சூடான உணவு வழங்கப்படுகிறது.
சுகாதாரத்துக்காக ஒரு மருத்துவமனையையும் உருவாக்கினார்கள். சுகாதாரம், ஆரோக்கிய உணவு, ஹெச்ஐவி குறித்துப் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. சட்டம் குறித்தும் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது. சம்புரு பழங்குடிகளிலேயே நீதிமன்றம் சென்று விவாகரத்து கோரிய முதல் பெண்ணாக இருக்கிறார் ரெபேகா.
அறுபது பெண்களும் 200 குழந்தை களுமாக கிராமம் பெருகிவிட்டது. நச்சாமி பெண்கள் குழு என்று பிரித்து, அவர்கள் தனி கிராமத்தில் இயங்கி வருகின்றனர். கோழிப் பண்ணைகளின் மூலம் முட்டைகளையும் இறைச்சியையும் விற்பதுதான் இந்தப் பெண்களின் முக்கியத் தொழில்.
53 வயது ரெபேகா 25 ஆண்டுகளாகப் பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கடினமாக உழைத்துவருகிறார். இன்று சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவருடைய திட்டங்களுக்குப் பல்வேறு நாட்டுத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளிடம் இருந்து நிதியும் கிடைத்துவருகிறது.
“பெண் என்றைக்கும் ஆணின் அடிமைதான். பெண்கள் சம்பாதிப்பதும் படிப்பதும் எங்கள் வழக்கத்தை மீறிய செயல். தொடர்ந்து தவறுகளைச் செய்துவருகிறார்கள் இந்தப் பெண்கள். என்றாவது ஒருநாள் எங்கள் கைகளால்தான் ரெபேகாவுக்கு மரணம். ஆண் என்றால் அத்தனை சாதரணமாகப் போய்விட்டதா இவர்களுக்கு?’’ என்று இன்றும் பேசித் திரிகிறார்கள் பழங்குடி ஆண்கள்.
முற்போக்குப் பெண்கள்
உமோஜா பெண்களோ, “அதெல்லாம் அந்தக் காலம். ஆண்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆணின் கொடூரமான முகத்தைச் சந்தித்த பெண்கள்தான் எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் மீண்டும் தங்கள் கணவரிடம் செல்ல கனவில்கூட நினைக்க மாட்டார்கள். அவர்களைவிட கல்வியில் நாங்கள் முன்னேறிவிட்டோம்.
எங்களால் எங்களையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள முடியும்போது அவர்களின் தயவு எதற்கு? எங்கள் குழந்தைகளுக்கு ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணத்தை விதைத்து வளர்க்கிறோம். எதிர்காலத்திலாவது பெண்களுக்குச் சிறந்த துணையாக ஆண்கள் உருவாகட்டும்” என்று தெளிவான சிந்தனைகளுடன் சொல்கிறார்கள்.
உமோஜா கட்டுப்பாடுகள்
உமோஜா கிராமத்தில் இணைவதற்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. பாரம்பரிய உடைகளையும் ஆபரணங்களையும் அணிய வேண்டும். புகைப்பிடிப்பதற்கும் பெண் உறுப்புச் சிதைப்புக்கும் தடை. அருகில் இருக்கும் கிராமத்துப் பெண்களுக்குப் படிப்பு, பெண் உரிமைகள், ஆண்-பெண் சமத்துவம், வன்முறையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.
“பெண்களே பேச ஆரம்பியுங்கள். இனியும் மவுனமாக இருந்தால் நம் முன்னேற்றம் சாத்தியப்படாது. நாங்கள் கல்வி, சுகாதாரம், சட்டம், தொழிலில் மட்டுமல்ல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் முன்னணியில் இருக்கிறோம். எங்களுக்கு இணையதளம் இருக்கிறது. எங்கள் கிராமத்தில் பிற்போக்குத்தனமான ஆண்களுக்கு என்றுமே அனுமதி கிடையாது. பெண்களை மதிக்கும் ஆண்கள் எங்கள் மதிப்புக்குரியவர்கள்” என்கிறார் ரெபேகா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago