நிதர்சனம்: குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சட்டம் மட்டும் போதுமா ?

By க.நாகப்பன்

சில நேரம் கற்பனைக்கும் எட்டாத கொடூரமெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடப்பதுண்டு. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு நேர்ந்ததும் அப்படியொரு கொடுமைதான்.

நெல்லூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியின் அக்காவுக்கு சுவாச பாதிப்பு உள்ளது. ஆனால், சிகிச்சைக்குப் பணம் இல்லை. சிறுமியின் பெற்றோர் பக்கத்து வீட்டுக்காரரான 46 வயது சின்ன சுப்பையாவிடம் பண உதவி கேட்டனர். அவரோ, உங்கள் மூத்த மகளைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. சிகிச்சைக்கான பணமாக ரூ.10 ஆயிரம் தருகிறேன். உங்கள் இளைய மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

வறுமையின் பிடியில் வாடிய குடும்பம், வேறுவழியின்றி சம்மதித்தது. மூத்த மகளின் நலனைக் கருத்தில்கொண்டு இளைய மகளை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. சின்ன சுப்பையா தன்னைவிட 34 வயது குறைவான சிறுமியைத் திருமணம் செய்துகொண்டார். இத்தகவல் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்ததன் பேரில்,சின்ன சுப்பையா விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

25 லட்சம்

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியால் அடுத்த 5 ஆண்டுகளில் உலகெங்கிலும் 25 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் ஆபத்துள்ளது என்று ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பு எச்சரித்துள்ளது. அப்படிப்பட்ட திருமணங்களில் ஒன்றுதான் இதுவும்.

இப்படிப்பட்ட திருமணங்கள் குழந்தைகளின் விருப்பத்துடன் நடந்தாலும், விருப்பமில்லாமல் நடந்தாலும் இது தண்டனைக்குரிய குற்றமே. திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள், அழைப்பிதழை அச்சடித்துக் கொடுத்தவர்கள், திருமணம் நடத்திய பெரியவர்கள், கோயிலில் நடந்தால் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், தேவாலயத்தில் நடந்தால் பாதிரியார்கள், அப்பகுதி சார்ந்த அரசு அலுவலர்கள், திருமணத்தில் பங்கேற்றவர்கள் என அனைவர் மீதும் சட்டம் பாயும். இவர்களை எல்லாம் சிறையில் வைக்க வேண்டுமென்றால் நூற்றுக்கணக்கான சிறைகள் தேவைப்படும். எனவே, சட்டம் மட்டும் போதாது என்பதே நடைமுறை யதார்த்தம்.

என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சட்டம் மட்டும் போதுமா, தடுத்து நிறுத்து வது எப்படி என்று ‘தோழமை’ அமைப்பின் இயக்குநரும், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளருமான தேவநேயனிடம் பேசினோம்.

“சட்ட அமலாக்கம், சமூகக் கட்டமைப்பு என்ற இரண்டு நிலைகளில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். சாதாரண குடும்பம், ஏழைக் குடும்பம், நடுத்தரக் குடும்பம் என்று எவற்றை எடுத்துக்கொண்டாலும் மகள்களைப் பெற்றவர்களின் எண்ணம் அவர்களைத் திருமணம் செய்துகொடுப்பதாகவே இருக்கிறது.

குழந்தைகள் வாழும் உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை, சமூகத்தில் உயர்அந்தஸ்து பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள் என்றெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை, கவலைப்படுவதுமில்லை.

சாதி, மத, கலாச்சாரக் கூறுகளைக் காப்பாற்றுவதற்காகப் பிள்ளைகளை பலி கொடுக்கக் கூடாது. பூப்பெய்துவது திருமணத்துக்குத் தயாராகி விட்டாள் என்பதற்காக அல்ல. அது ஆரம்பகட்ட வளர்ச்சியே. அந்த வயதில் திருமணம் செய்வது அறிவியல் பூர்வமாக, மருத்துவபூர்வமாக உகந்ததல்ல. குறைப்பிரசவம், இறந்து பிறக்கும் குழந்தைகள், அறிவு வளர்ச்சிக் குறைபாடு எனப் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

பாரம்பரியம் என்கிற பெயரில், மூட நம்பிக்கைகளுக்கு இடம் தரக் கூடாது. பாலினச் சமத்துவத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். மாவட்ட அளவில் சமூக நலத்துறை அலுவலர் தான், குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர். நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வேலைகள் அவருக்கு இருக்கும். குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதே பிரதான வேலையாக இருக்காது. எனவே, மாவட்ட அளவில் தனியாகக் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

கிராம, நகர அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை வலுப்படுத்த வேண்டும். பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் குழந்தைத் திருமணம் இல்லாத பகுதி என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க கிராம அளவில் தலையாரி, கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார அலுவலர்கள், ஆசிரியர்கள், காவல்துறை ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும். பல அமைப்புகள் இணைந்து வேலை செய்ய வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலம் மாதம் 3 கூட்டங்களை மாவட்ட ஆட்சியர் நடத்த வேண்டும்.

மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும். அரசு, சமூகம், குடும்பம் மூன்றும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்” என்கிறார் தேவநேயன்.

அரசு செய்ய வேண்டியவை

பாலீர்ப்பு, இளவயதுக் காதலில் கரைந்து போகாமல் இருக்க பள்ளிக்கு ஒரு உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில் ஆசிரியர்களையே வழிகாட்டுநர்களாகத் தயார்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறைகள் இல்லாததால், மாதவிடாய்க் காலத்தில் சிரமப்படும் மாணவிகள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகின்றனர்.

அதனால், அந்தக் குறைபாடும் களையப்பட வேண்டியதே. அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இலவச நாப்கின் வழங்கப்பட வேண்டும்.

கிராமங்களில் பெற்றோர் இடம்பெயராத அளவுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

தாலிக்குத் தங்கம் வழங்கும் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்களைப் பரவலாக்க வேண்டும். திருமணங்களை எளிமையாக நடத்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும். அரசு, தனியார் துறை வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் முழுநேர குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் கிராமம், நகரங்களில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக்களில் ஆண்களைச் சேர்க்க வேண்டும். பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆண்களை உணரச் செய்து, அவர்களையே திட்டப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

- க.நாகப்பன்
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்