திருநங்கைகளின் சமீபத்திய நம்பிக்கை நட்சத்திரம் ப்ரித்திகா யாஷினி. இந்திய காவல்துறை வரலாற்றில் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றிபெற்ற முதல் திருநங்கையும் இவரே. அதே நேரம், “இது கொண்டாட வேண்டிய தருணம் அல்ல. திருநங்கைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமைகள் குறித்துப் பேசவேண்டிய தருணம்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் ப்ரித்திகா.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்த கலையரசன் -சுமதி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் இவர். குரோமோசோம்களின் மாயாஜால வித்தைகள் அறியாத பால பருவத்திலும் பெண் குழந்தைகளுடன் விளையாடவே விரும்பியிருக்கிறார். தான் ஒரு பெண் என்ற உணர்வு மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க, வளையல் மாட்டி, பொட்டு வைத்து, பாவாடை அணிந்து அழகு பார்த்திருக்கிறார். அது குழந்தையின் விளையாட்டு என பெற்றோரும் மகிழ, எட்டு வயதுக்குப் பிறகும் பெண் குழந்தையைப் போல நடமாடியவரைக் கண்டு பெற்றோர் பொங்கினர்.
“அவர்களின் உருட்டல், மிரட்டலால் பதினாலு வயசுவரை என் மனம் ரகசியம் காத்தது. யாருமற்ற தனிமையில் பெண்ணாக அலங்கரித்துக்கொண்டு மகிழ்வேன். ஆனாலும் மனதுக்குள் எதையோ தொலைத்த வெறுமை. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தேன்” என்று சொல்லும் ப்ரித்திகாவுக்கு பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை சோதனைக் காலமாக இருந்தது.
“ஆண்கள் கூட்டத்துக்கு நடுவே தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட பெண் போல தவித்துவிட்டேன். தோழன் ஒருவன் நட்புடன் தொட்டாலே கூச்சத்தில் நடுங்கிவிடுவேன். பெண்மை ஒளிரும் என் நளினமான பேச்சையும் நடையையும் கண்டால் நண்பர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? அவர்களின் கேலி, கிண்டல் பேச்சால் சுக்குநூறாக உடைந்துபோனேன். ஆனால் இத்தனைக்கும் இடையில் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல்தான் என் படிப்பு தொடரக் காரணம்” என்று அந்த நாட்களின் வேதனையை வார்த்தைகளில் வடிக்கிறார் ப்ரித்திகா. பிறகு சேலம் அரசு கலைக் கல்லூரியில் பி.சி.ஏ. முடித்தார். கல்லூரி நாட்களில் தனிமைதான் தனக்கு உற்ற தோழியாக விளங்கியது என்கிறார் அவர்.
“இந்தத் தனிமை தந்த பாதுகாப்பு, படிப்பில் கவனம் செலுத்த உதவியது. எத்தனை நாட்களுக்குத்தான் உண்மையை மறைத்துவைக்க முடியும்? மூன்றாமாண்டு இறுதியில் என் பெற்றோரிடம் விஷயத்தைப் போட்டு உடைத்தேன். தங்கள் மகன் இப்படிப் பேசுகிறானே என்று துடித்துப் போனார்கள். ஆனால் நான் இப்போது பேசவில்லை என்றால் என் எதிர்காலம் சூன்யமாகும் என்பதையும் உணர்ந்தே இருந்தேன்” என்று சொல்லும் ப்ரித்திகா, அதற்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்.
ப்ரித்திகாவின் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக பூஜை, ஜோதிடம், மனோதத்துவ மருத்துவர்கள் என்று பெற்றோர் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் அவரது மனதையும் உடலையும் ரணப்படுத்தியது. பெற்றோரின் இறுதி முடிவுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
“சென்னையில் திருநங்கை பானுவின் அலைபேசி எண்ணை வைத்திருந்ததால், அவரிடம் உதவி கேட்டேன். வீடு கிடைக்காமல் தெருத் தெருவாய் அலைந்தோம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் படுத்து ஒரு நாள் பொழுதைக் கழித்தோம்” என்று சொல்லும் ப்ரித்திகா, நீண்ட நெடிய தேடல்களுக்குப் பிறகு பெண்கள் விடுதியில் வார்டனாக வேலைக்குச் சேர்ந்தார். சமூகப் புறக்கணிப்பு, பற்றாக்குறை சம்பளம், எங்கும் நிராகரிப்பு என்று துயரங்கள் தொடர்ந்தாலும் நம்பிக்கையோடு நடைபோட்டார். பிறகு தனியார் மருத்துவமனையில் கவுன்சலர் பணி, இணையதளப் பணி, திருநங்கை அமைப்பில் வேலை இவற்றுடன் தன் வாழ்நாள் கனவான காவல்துறைத் தேர்வுக்கான தயாரிப்பிலும் ஈடுபட்டார். இதற்கிடையே அறுவை சிகிச்சை மூலம் முழுப் பெண்ணாக மாறினார்.
“திருநங்கைகளுக்குக் காவல்துறை பணி குறித்து முறையான வழிகாட்டுதல் இல்லை. அதனால்தான் பணிக்குத் தகுதியிருந்தும் என்னை நிராகரித்தார்கள். வழக்கறிஞர் பவானி அம்மாவின் கருணையும் சென்னை நீதிபதி மகாதேவனின் நேர்மையும் என்னைக் கரைசேர்த்தன” என்று சொல்லும் ப்ரித்திகா, நம் சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்துக் கவலை தெரிவிக்கிறார்.
“பாதுகாப்பற்ற சூழல், பொருளாதாரத்துக்கான போராட்டம், சமூகப் புறக்கணிப்பு இவை அத்தனையும் தாண்டிய சாதனை எப்படிச் சாத்தியம்? இவற்றை எதிர்கொள்ள முடியாத திருநங்கையர் பிச்சை எடுப்பதும் பாலியல் தொழிலுக்கு உட்படுவதும் இயல்புதானே. இதில் மாற்றம் வேண்டுமென்றால் பெற்றோரின் புரிதலும் அரவணைப்பும் ஒவ்வொரு திருநங்கையருக்கும் தேவை” என்கிறார் ப்ரித்திகா.
தனக்குக் கிடைத்திருக்கும் காவல் துறைப் பணி, அனைத்துத் திருநங்கைகளுக்கும் கிடைத்த வெற்றி என்று சொல்கிறார் இவர்.
“ஆண்-பெண் பாகுபாட்டில் திருநங்கைகள் பின்னோக்கித் தள்ளப்படுகின்றனர். இதை நிச்சயம் மாற்றியே ஆக வேண்டும். காவல் துறை பணியில் சேர்ந்ததும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் களையும் பணியில் ஈடுபடுவேன். திருநங்கையருக்கான கல்வி, பணி வாய்ப்பு இடஒதுக்கீடு சட்ட மசோதவை விரைந்து அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கான தனி நபர் சட்டப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பதே அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை” என்று சொல்லும் ப்ரித்திகா, தற்போது ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயராகிக்கொண்டிருக்கிறார். அந்தக் கனவும் விரைவில் மெய்ப்படும்!
ஆண்களின் கனிவான கவனத்துக்கு!
ப்ரித்திகா யாஷினியாகிய நான் ஆண் வர்க்கத்துக்கு விடுக்கும் அன்பு வேண்டுகோள் இது. பெண்களின் காதல் உணர்வைப் போன்றதுதான் எங்கள் மனதும் என்பதை ஆண் சமூகம் ஏனோ காலம் காலமாக ஏற்க மறுக்கிறது. உடல் இச்சைக்கும் மறைமுக வாழ்வுக்கும் பயன்படும் கருவியாக மட்டுமே எங்களைப் பார்க்கின்றனர். குழந்தைப் பேற்றைத் தவிர தாய்மைக்குரிய அனைத்து குணநலன்களும் எங்களுக்கும் உண்டு. குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் எங்களாலும் இனிமையான இல்லற வாழ்வில் ஈடுபட முடியும். திருநங்கைகள் என்றாலும் நாங்களும் பெண்களே!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago