தண்ணீர் தேடிக் காலங்காலமாகக் குடங்களுடன் அலைந்து திரிந்தவர்கள் பெண்கள். கே.ஏ. அப்பாஸின் ‘தோ பூந்த் பானி’ (இரு துளி நீர்) திரைப்படமாக்கப்பட்டு 1970-களில் வெளி வந்தது. ராஜஸ்தானத்துப் பெண்கள் கொடும் பாலைவனத்தில் வெயிலில் தண்ணீருக்காக அலையும் கண்ணீர்க் கதை அது. குடங்களின் மீது குடங்களை வைத்துக்கொண்டு பழக்கத்தின் காரணமாக அநாயாசமாக அவர்கள் நடந்து வருவதைப் பார்ப்பதற்கு நமக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை நடைமுறையாகிப் போன அவர்களுக்கு அது எளிதல்ல. கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் அத்திப்பட்டு கிராமங்கள் இப்போது தமிழகமெங்கும் இருக்கின்றன. பத்தும் பத்துமாக இருபது கல் தொலைவுக்குச் சென்று தண்ணீரைச் சுமந்துவரும் சரிதா கதாபாத்திரம் அவ்வளவு எளிதாக மறக்கக்கூடியதா?
குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையும் ஒரு காலத்தில் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்போமா? ஆனால், அந்த நிலையையும் நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறாம். விலைக்கு வாங்கியே தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டுவிட்டோம். காசு கொடுத்து வாங்கினாலும் கரப்பான் பூச்சிகளும் புழுக்களும், ஏன் சில நேரங்களில் பாம்புக்குட்டிகளும்கூடத் தண்ணீருடன் இலவச இணைப்பாகக் கிடைக்கும் கொடுமையை யாரிடம் சொல்வது?
தண்ணீர்த் தட்டுப்பாடு
மாநகராட்சி முன்பெல்லாம் முறை வைத்து தினமும் தண்ணீர் விட்டதெல்லாம் மாறி, நான்கைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் என்ற நிலை. சில ஊர்களிலோ வாரம் ஒரு முறை. கோவில்பட்டி போன்ற ‘தண்ணியில்லாக் காடு’களில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் என்பதெல்லாம் மிகச் சாதாரணம். தண்ணீர் வரும் நாட்களில் அதிகாலை இரண்டரை மணியிலிருந்து தண்ணீர்க் குழாயை அடிக்கும் சத்தம் விடிய விடிய கேட்டுக் கொண்டேயிருக்கும். இப்படிக் கண் விழித்து தண்ணீரைச் சேகரித்து, சேமித்து வைத்துவிட்டு, அதைச் சிக்கனமாகக் கையாள வேண்டும். பின் அலுப்பில்லாமல் வீட்டு வேலைகள் முடித்து வெளியில் வேலைக்கும் செல்ல வேண்டும். தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் ஏறக்குறைய இந்த நிலைதான்.
ஏரிகள் மறைந்த கதை
பல ஆண்டு கால அம்பத்தூர்வாசியாக நம் சமகாலத்தில் கண்ணெதிரிலேயே இதில் பலவற்றை வேடிக்கை பார்க்கும் ‘பொதுஜன’மாக நான் இருந்திருக்கிறேன். அம்பத்தூர் ஏரியின் பாதியளவு பிளாட் போட்டு விற்கப்பட்டு வீடுகளானது. மிச்சமிருக்கும் ஏரித் தண்ணீரும் லாரிகள் மூலமாக சென்னைக்குப் பயணப்பட்டதையும் பார்த்திருக்கிறோம். இன்று அந்த ஏரி பரப்பளவில் பாதிக்கும் கீழாகச் சுருங்கி விட்டது. அந்தப் பகுதிகளில் புதிதாக உருவான நகர்களின் வீடுகளிலிருந்து கழிவு நீர் லாரிகளில் சேகரிக்கப்பட்டு, இரவு நேரத்தில் ரகசியமாக ஏரியிலோ அல்லது காலி மனைகளிலோ விடப்படுகிறது.
தமிழகம் முழுவதுமே ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், கண்மாய்கள், ஊருணிகள், கிணறுகள் என நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. கொஞ்சநஞ்சம் இருக்கும் தண்ணீரும் சாயக் கழிவுகளால் பாழ்படுத்தப்படுகிறது.
ஏரிகளின் மாவட்டமான அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர் என்று பாகப்பிரிவினை செய்யப்பட்டுவிட்டது. அதில் பல ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் தனிநபர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன. சென்னையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏரிகள், குளங்களைத் தூர்த்து, பள்ளி, கல்லூரிகளைக் கட்டிய நவீன ‘கல்வித் தந்தைகள்’ உருவானார்கள். குளங்களின் மீது திரையரங்குகள்கூட கட்டப்பட்டி ருக்கின்றன.
பாழாகும் நீர்நிலைகள்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள், குப்பைத்தொட்டிகளாகக் கருதப்பட்டு இந்திய, பன்னாட்டு நிறுவனங்கள் ரசாயனம் மற்றும் மக்காத கழிவுகளை எல்லாம் கொட்டிச் சீரழித்ததை அந்தப் பகுதியினர் அறியாமலா இருந்தார்கள்? இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆயிரத்து 81 கோடி ரூபாய் மதிப்பில், 16 இந்தியப் பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில்தான் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் ஏரிகள், நீர்நிலைகளை மேலும் மேலும் குப்பைத்தொட்டிகளாக்கி அவற்றை இல்லாமலே செய்துவிடும். வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட இத்தகைய அராஜகங்களின் விளைவை எல்லாம் மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.
இன்று சென்னையின் புறநகர்ப் பகுதிகள் முழுவதுமே தண்ணீரில் தத்தளித்து மிதக்கின்றன. இயல்பாகவே கூவம், அடையாறு ஓடி வந்து கடலில் கலக்கும் இடத்தில்தான் சென்னை மாநகரம் இருக்கிறது. பற்றாக்குறைக்கு பக்கிங்ஹாம் கால்வாய் நீரும் இந்த வழியாகத்தான் போகிறது. நீர் வரும் பாதைகளை எல்லாம் வளர்ச்சி என்ற பெயரில் அடைத்துக்கொண்டே வந்ததன் பலன், இன்று வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. கான்கிரீட் வனங்களாக, செயற்கையாக உருவாக்கப்பட்ட நவீன சென்னை அபரிமிதமாக ஓடி வரும் தண்ணீரை எப்படி எதிர்கொள்ளும்?
வணிகப் பொருளா தண்ணீர்?
காய்கறிகளைக் கூறு கட்டி வைத்து கூவிக் கூவி அழைத்து விற்றது போல, ‘ரியல் எஸ்டேட்’ என்ற பெயரில் அனைத்து இடங்களையும் விற்றுக்கொண்டே இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். சமீப காலமாக, ஆன் லைன் வர்த்தகமாகவும் சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்திலும் பிளாட்டுகள் விற்கப்படும் நிலை வந்துவிட்டதையும் பார்க்கிறோம். இதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றுதான் புரியவில்லை.
தண்ணீர் வடிந்த பின்னும், பல மாதங்களுக்கு நீடிக்கப் போகும் துன்பங்களை எந்த விதத்தில் எதிர் கொள்ள இருக்கிறோம்.
தண்ணீர் புகுந்த வீடுகளில் இருக்கும் அன்றாடப் பயன்பாட்டுக்கான பொருட்கள் இனி பயன்படுமா? ஏற்கனவே நகைகள், இருந்த இடங்களை விற்றோ, அடமானம் வைத்தோ வாங்கிய அல்லது கட்டிய வீடுகளுக்காக அடைக்க வேண்டிய கடன்கள் ஒருபுறம் அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்க இவையெல்லாம் மேலும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் இல்லையா? இது நடுத்தர வர்க்கத்தின் நிலை என்றால், அடித்தட்டு மக்களின் துயரமோ அளவிட இயலாதது. வீடுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து ஏறக்குறைய தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் அவர்கள்தான். இந்தக் கண்ணாமூச்சிகள் அனைத்திலும் பாதிக்கப்படுபவர்கள் என்னவோ எளிய மக்கள்தான் என்பது வேதனைக்குரியது.
இன்று வீட்டைச் சுற்றித் தண்ணீர். ஆனால், குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாத நிலை. எத்தகைய முரண்பாடு? நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை ஏன் மறந்து போனோம்? ஏரிகளை, கால்வாய்களை, குளங்களை, கிணறுகளை, நீர்நிலைகளைப் பாதுகாப்போம். தண்ணீர் வணிகப் பொருள் அல்ல என்பதையும் உணர்வோம், உணர்த்துவோம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago