தையலால் நிமிர்ந்த தையல்

By பிருந்தா சீனிவாசன்

சாலையில் நம்மைக் கடந்து செல்கிறவராகவோ, பேருந்தில் நமக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கிறவராகவோ, நியாய விலைக் கடை வரிசையில் நமக்கு முன்னால் நின்று கொண்டோ அவர் இருக்கலாம். ஆனால் அவரிடம் நம் கேள்விக்குத் தேவையான பதில் ஒளிந்திருக்கலாம். நாம் பயணிக்க வேண்டிய பாதையின் வழிகாட்டியாகவோ, தத்தளித்துக் கொண்டிருக்கும் வாழ்வுக்குத் திசைகாட்டியாகவோ அவர் இருக்கக்கூடும். அப்படியொரு வர்தான் லக் ஷ்மி பிரியா. திருச்சி, ரங்கத்தில் இருக்கும் அவருடைய தையல் கடை, பலருக்கும் பாடம் சொல்லும் போதிமரம்.

எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங் களும், காத்திருப்புகளும் நிறைந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் லக் ஷ்மி பிரியா. அப்பா சவுண்ட் சர்வீஸ் உரிமையளார், அம்மா இல்லத்தரசி. திருச்சியில் பிறந்து, வளர்ந்தவர், திருமணத்துப் பிறகு மதுரை சென்றார். லக் ஷ்மியின் கணவர் பாண்டிக்கு புக் பைண்டிங் தொழில். தொடக்கத்தில் நன்றாக வருமானம் தந்துவந்த தொழில், நாளடைவில் நசியத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நஷ்டக் கணக்கு தலைக்கு மேல் செல்ல, வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார் பாண்டி.

“அவருக்குத் தொழில்ல நஷ்டம் வரும்னு எதிர்பார்க்கவே இல்லை. அதுக்காக வருமானம் இல்லையேன்னு உட்கார்ந்துட்டா வேலையாகிடுமா? நான் பத்தாவது முடிச்சதுமே டெய்லரிங்ல டிப்ளமோ கோர்ஸ் முடிச்சிருந்தேன். குடும்பம், குழந்தைங்கன்னு ஆனதுக்குப் பிறகு தையல் வேலையைக் கவனிக்க நேரமில்லாம இருந்தது. தேவைன்னு வந்தப்போதான் தையலைக் கையில எடுத்தேன். குழந்தைங்க ஸ்கூலுக்குப் போன பிறகு தையல் வேலை செய்தேன். என் வீட்டுக்காரரும் வெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னார். அதனால திருச்சிக்கே போயிடலாம்னு முடிவு பண்ணோம்” என்று சொல்லும் லக் ஷ்மிக்கு, கணவர் வெளிநாடு சென்றும் வாழ்க்கைப் பிரகாசிக்கவில்லை.

அயராத உழைப்பு

“அவரு வெளிநாட்ல இருந்து சம்பாதிச்சு அனுப்பினார்னா, ஓரளவுக்கு வாழ்க்கையில செட்டிலாகிடலாம்னு நினைச்சோம். விதி யாரை விட்டது? அங்கே அவருக்கு விபத்து ஏற்பட்டு, இந்தியாவுக்குத் திரும்பற மாதிரி ஆகிடுச்சு. இங்கே வந்து அவர் கிடைச்ச வேலையை செய்தார். பையனும், பொண்ணும் வளர்ந்துட்டாங்க. என் பங்கா இந்தக் குடும்பத்துக்கு ஏதாவது இருக்கணுமே. ஆரம்பத்துல ஒரு இடத்துல பீஸ் ரேட்டுக்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு பிளவுஸ் தைச்சுக் கொடுத்தா மூணு ரூபாய் கிடைக்கும். சில கடைகளில் ஜாப் வொர்க் எடுத்து செய்தேன். தையல் பயிற்சி நிறுவனத்துல பகுதிநேர பயிற்சியாளராகவும் இருந்தேன். இப்படி தையல் சார்ந்து எனக்குக் கிடைச்ச வேலைகளைச் செய்தேன். எவ்ளோதான் வேலை பார்த்தாலும் போதுமான அளவுக்கு வருமானம் வந்தபாடா இல்லை. அப்போதான் அடுத்தவங்ககிட்டே போய் வேலை செய்யறதைவிட நமக்கான வேலையை ஏன் நாமே உருவாக்கக்கூடாதுன்னு நினைச்சேன். அதற்கும் தையல்தான் மூலாதாரம்” என்று சொல்லும் லக் ஷ்மி, தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, தையல் கடையைத் தொடங்கினார்.

முன்னேற்றப் பாதையில்

ஆனால் அத்தனை சுலபத்தில் அவரால் தையல் கடையைத் தொடங்கிவிட முடியவில்லை. கடைக்கு அட்வான்ஸ் கொடுக்கப் பணம் கிடைக்காமல் தவித்திருக்கிறார். அதுபோன்ற இக்கட்டான நேரங்களில் கைகொடுத்து உதவியவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

“நான் பணம் இல்லாம தவிச்சப்போ எனக்கு உதவுனவங் களும், என்கிட்டே ஆர்டர் தருகிற வாடிக்கையாளர்களும் எனக்குக் கடவுள்தான். அவர்கள் இல்லையென்றால் என்னால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. கையில காசு இல்லாதப்போ 2500 ரூபாய் கொடுத்து செகண்ட் ஹேண்ட்ல தையல் மிஷின் வாங்கித்தான் இந்தத் தொழிலைத் தொடங்கினேன். இப்போ நாலு மிஷின் ஓடுது. என்கிட்டே நாலு பேர் வேலை பார்க்கிறாங்க. ஒரு பிளவுஸ் தைக்க மூணு ரூபாய் வாங்கின நான், இன்னைக்கு என்கிட்டே வேலை பார்க்கிறவங்களுக்கு 25 ரூபாய் தர்றேன். காரணம் உழைப்போட மதிப்பு எனக்கு நல்லாத் தெரியும்” என்று சொல்லும் லக் ஷ்மி, எப்போதும் வேலை சார்ந்த சிந்தனையோடுதான் இருக்கிறார்.

பெண்களால் பெண்களுக்காக

முழுக்க முழுக்க பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் அசத்துகிறார் இவர். குறிப்பாக மணப்பெண்ணுக்கான ஆடை வடிவமைப்பில் கலையம்சம் வெளிப் படுகிறது. அவற்றில் செய்யப்படுகிற வேலைப்பாடுகள், லக் ஷ்மியின் திறமையைப் பறைசாற்றுகின்றன.

“இது ஆபீஸ் இல்லை. காலைல பத்து மணிக்கு வந்துட்டு சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்குப் போக முடியாது. சில சமயம் ராத்திரி முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்போம். மாசம் பொறந்தா நிரந்தமான சம்பளமும் கிடையாது. இது பண்டிகையையும் சீசனையும் நம்பி நடத்துற தொழில். முகூர்த்த மாதங்களிலும், பண்டிகை நாட்களிலும் நிறைய ஆர்டர் வரும். ஸ்கூல் திறக்கும்போது யூனிஃபார்ம் ஆர்டர் கிடைக்கும். ஆடி, ஆனி மாதங்களில் பிசினஸ் டல் அடிக்கும். அதுக்காக வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளம் தராம இருக்க முடியாது. எப்படியோ சரிகட்டி நடத்திட்டுத்தான் இருக்கோம். என் கணவரும் என் குழந்தைகளும் எனக்குப் பக்கபலமா இருக்கறதாலதான் என்னால் இந்த அளவுக்கு நிற்க முடியுது.

கைகொடுக்கும் குடும்பம்

“முக்கியமான ஆர்டர் முடிக்கும்போது திடீர்னு மிஷின் ரிப்பேராகிடும். என்ன பண்றது? உடனே என் வீட்டுக்காரருக்குத்தான் போன் பண்ணுவேன். அவரும் கையோடு மெக்கானிக்கைக் கூட்டிட்டு வந்து சரி பண்ணி தருவார். லைனிங் வாங்கறது, தேவையான மெட்டீரியல் வாங்கறதை எல்லாம் என் மகன் பார்த்துப்பான். நான் கடையில வேலையா இருக்கும்போது ஒன்பதாவது படிக்கிற என் பொண்ணுதான் வீட்டைக் கவனிச்சுப்பா. ஸ்கூல்ல இருந்து வந்ததுமே வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, நைட்டு என்ன டிபன் பண்றதுன்னு என்கிட்டே கேட்பா. அவளும் ஆரி வேலைப்பாடு செய்வா. புதுப்புது டிசைன்களைப் போடறதுல உதவியா இருப்பா” என்று தன் முன்னேற்றத்தில் தன் குடும்பம் முழுமைக்கும் பங்கு இருக்கிறது என்பதையும் பதிவுசெய்துவிட்டு துணியைத் தைக்கத் தொடங்குகிறார் லக் ஷ்மி. வெற்றியின் தாளமாகக் கேட் கிறது தையல் மிஷின்களின் ஓசை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்