அநேகமாக குழந்தைகளின் காலண்டர் பார்க்கும் பழக்கத்துக்கு தீபாவளிப் பண்டிகையே ஒரு காலத்தில் காரணமாக இருந்திருக்கிறது. ‘எப்போதான் இந்தத் தீவாளி வரும்’ என்று புதிய காலண்டரின் பின் அட்டையை ஜனவரியிலேயே திருப்பிப் பார்ப்பதில் இருந்து, இன்னும் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று மாதத்தையும் தேதியையும் தலைகீழாகப் போட்டுக் கழித்துப் பார்ப்பதுவரை தீபாவளி குழந்தைகளுக்கான செயல்முறைக் கல்வியாக எப்போதோ அறிமுகமாகிவிட்டது. அடுத்தது தீபாவளிக்கான கவுன்ட்-டவுன் 100 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை தீபாவளி ஏழைகளின் திருவிழா!
வானம் கருகருத்துக் கிடக்க மழை எப்போது நிற்கும் என்று காத்திருந்து மத்தாப்புகளையும் வெடிகளையும் கொளுத்தி அந்தக் கரி மருந்துப் புகையை சுவாசிக்காத குழந்தைகள் இருக்க முடியாது. அதனால்தான் தீபாவளி குழந்தைகளின் திருவிழாவாகவும் இருக்கிறது. அதோடு புத்தாடைகள், பரிசுகள். இப்போதெல்லாம் மொபைல், ஸ்மார்ட்போன், டேப், டேப்லட் போன்றவைகளும் குழந்தைகளுக்கான தீபாவளி லிஸ்டில் சேர்ந்து விட்டன. ஆனால் அவையெல்லாம் வசதி படைத்த வீட்டுக் குழந்தைகளுக்கு.
சென்ற தலைமுறை ஆராதித்துக் கொண்டாடிய தீபாவளி பற்றிய சின்னச் சின்ன சந்தோஷங்களும் எதிர்பார்ப்புகளும் இன்றைய தலைமுறையிலும் நீடிக்கிறதா என்றால் அதற்கான பதில் என்னிடம் இல்லை.
புத்தாடைகள் அப்போது ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே கிடைக்கும். அதிலும் ரெடிமேட் என்ற உடனடி ஜீபூம்பா எல்லாம் மிக மிக அபூர்வம். ஜவுளிக் கடைக்குப் போய், அளந்து வாங்கி வரும் துணி, நம் உடுப்பாக மாறி கைக்குக் கிடைப்பதற்குள் அந்தச் சின்னஞ்சிறு மனசு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பள்ளிக்கூடம் விட்டு வந்த நேரமெல்லாம் தையற்கடை வாசலில் தவமாய்த் தவமிருந்த காலமெல்லாம் மனதை விட்டு அகலாதவை. வீட்டிலிருக்கும் நாலைந்து உருப்படிகளுக்கும் ஒரே கலரில் எடுத்துத் தைக்கப்படும் உடைகளை இப்போதைய குழந்தைகள் பார்த்தால் அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு தனி யூனிஃபார்ம் இருந்திருக்குமோ என்றுதான் நினைப்பார்கள். அதை இப்போது நினைத்தாலும் ரத்தக் கண்ணீர் வருகிறது.
யூனிஃபார்ம் என்றதும் நினைவு வந்துவிட்டது. பள்ளிக்கூடத்து அசல் யூனிஃபார்மேகூடச் சில ஆண்டுகளில் தீபாவளி புத்தாடையாய் வாய்த்து, சக பள்ளி மாணவிகள் மத்தியில் நம் மானத்தை வாங்கியிருக்கிறதே.
படபடபடபடபடபடவெனச் சில நிமிடங்களுக்குச் சத்தக்காடாய் அலறும் இன்றைய1000 வாலாக்களெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதவை. டப் டப் என வெடிக்கும் ஒற்றை வெடிகள் மட்டுமே அப்போது மகிழ்ச்சியைத் தந்தவை. முக்கோண வடிவில் ஒற்றை ஒற்றையாய், பாக்கெட்டுகளில் உதிரிகளாய்க் கிடைத்த ஓலை வெடியை மறந்துவிட முடியுமா?
சில தொலைக்காட்சி விளம்பரங் களில் பள்ளிக் குழந்தைகள் ‘பட்டாசு வெடிக்காதீர்கள், அவையெல்லாம் நம்மைப் போன்ற குழந்தைகளின் உழைப்பில் தயாராகின்றன. அதனால் பட்டாசுகளைப் புறக்கணிப்பீர்’ என்று ‘பெரிய மனுஷ’ தோரணையுடன் பேசுவதைப் பார்க்க முடிந்தது. அதோடு அதைச் சொல்லி முடித்ததும் அந்தக் குழந்தை யாரையோ திரும்பிப் பார்க்கிறது. ‘சொல்லிக் கொடுத்தத சரியா ஒப்பிச்சிட்டனா’ என பார்ப்பது போல இருக்கிறது. குழந்தை உழைப்பு, சுற்றுச்சூழல் மாசு எல்லாம் சரிதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் நமக்கில்லை. ஆனால், குழந்தை உள்ளங்கள் இதையெல்லாம் மனதார ஏற்குமா? நாமும் குழந்தைகளாய் இருந்து அந்த நிலையைக் கடந்து வந்தவர்கள்தானே… நமக்கிருந்த மனநிலையும் ஏக்கமும் அவர்களுக்கும் இருக்காதா? எதிர்ப்பையும் பிரச்சாரத்தையும் நாம் மேற்கொள்வோம். குழந்தைகள் பாவம்… அவர்களை விட்டுவிடுவோம். அவர்கள் குழந்தைகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
குழந்தைகளுக்குத் தெரியுமா, பண்டிகை வந்தால் பருப்பு, எண்ணெய் வகையறாக்கள் விலை ராக்கெட் இல்லாமலே விண்ணில் பறக்கும் அதிசயம்! கடனோ, உடனோ ஏதாவதொன்று பட்டுத் தீர்க்கும் பெற்றோருக்குத்தான் தெரியும் அத்தனை குத்தல் குடைச்சல்களும்.
‘பருப்பில்லாமல் கல்யாணமா?’ என்பது போல பலகார, பட்சணங்கள் இல்லாத பண்டிகையா? நாம் ரசித்து ருசித்துச் சாப்பிடும் பலகாரங்களுக்காக மாவு இடிபடும் உரல் உலக்கை சத்தமும், திரிகைகள் அரைபடும் ஓசையும் இப்போது இல்லாமல் போய்விட்டன. கைப்பக்குவத்துடன் அம்மாக்களும் ஆத்தாக்களும் தயாரித்துக் கொடுத்த கெட்டி உருண்டை என்ற பொருள்விளங்கா உருண்டையின் பொருள்கூட இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதே. பயற்ற மாவு உருண்டை, ரவா லட்டு, பூக்கப் பூக்க அரைத்த உளுந்த மாவில் முக்கியெடுத்து, எண்ணெயில் பொரித்த சுகியன் என்ற ‘சீயம்’ நினைவிலாவது இருக்கிறதா? அதிரசத்தின் பெயரே சொல்லுமே அதன் அற்புதச் சுவையை. இவையெல்லாம் நம் இளமைக் காலத்து அதிசயங்கள்! அற்புதங்கள்! ஆனால், இப்போது அதையெல்லாம் எதிர்பார்ப்பதும் நம் அறியாமை அல்லாமல் வேறென்ன?
வீடு ஒன்றே உலகமாக, அடுப்பங்கரையே தங்கள் ராஜாங்கமாக இருந்த நம் ஆத்தாக்களின் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. அதற்காக இப்போதும் பெண்கள் வீட்டில் சமைக்காமலோ, பண்டிகைகள், பட்சணங்களை முழுமையாகப் புறக்கணித்தோ விடவில்லை. அது ஒரு பக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழைய ருசி வேண்டுமானால் இல்லாமல் போகலாம். என்னதான் படித்தாலும் பட்டம் பெற்றாலும், வேலைக்குப் போனாலும் வீட்டு வேலைகளின் வீரியம் மட்டும் குறைந்துவிடுவதில்லை. சாதனங்கள் மாறியிருக்கலாம். உழைப்பு?
பண்டிகை என்பது பெண்களைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அனைத்துப் பொறுப்புகளையும் அவள் மீது ஏற்றும் பெரும் சுமை. கலாச்சாரம், பண்பாடு கெடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் அவளுக்கே. ஆண்கள் இதிலிருந்தெல்லாம் எளிதாகக் கழன்று கொண்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்’ ஆகிவிடும் அதிசய வித்தைகள்.
இதில் அன்றாட வீட்டு வேலை அல்லது பொறுப்புகள் எதனையும் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாத நிலையில், அப்படி யாராவது தனது பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்களா என ஒரு பெண் எதிர்பார்ப்பாளேயானால், ‘நல்ல இல்லத்தரசி’ என்ற மகுடம் அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். இத்தனைக்கும் அவளுக்குக் கிடைப்பது என்ன? வீட்டில் வேலை பார்க்கும் உதவியாளருக்கு 200 ரூபாய்க்குச் சேலை என்றால் எஜமானிக்கு 2000 ரூபாய் சேலை.
இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்கள்கூட பண்டிகை அன்று விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வீட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே. சொந்த வீட்டில் எந்த நாளும் எந்தப் பெண்ணுக்கும் விடுமுறை என்பது இல்லை. எங்கு சமையலறை ஒழிகிறதோ அங்குதான் உண்மையான பெண் விடுதலை இருக்கும் என்பது எத்தனை உண்மை!
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago