துபாயில் தொழில்முனைவு: சாதிக்கும் தமிழ்ப்பெண்

By க்ருஷ்ணி

கணவரின் வேலை நிமித்தம் துபாய்க்குக் குடியேறியவர் அனுராதா. நல்ல வேலையில் இருக்கும் கணவன், மூன்று குழந்தைகள் என்று குறையில்லாத வாழ்க்கை அனுராதாவுக்கு. முதலில் சிறிய அளவில் நர்சரிப் பள்ளியை நடத்தினார். இருந்தாலும் ஏதோவொரு போதாமை வாட்ட, அதைக் கணவரிடம் பகிர்ந்துகொண்டார். அந்தப் புள்ளியில் உதித்த எண்ணம் இன்று அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராகச் சுடர்விடச் செய்திருக்கிறது.

அனுராதாவின் தந்தை, பள்ளித் தலைமை ஆசிரியர். அம்மாவும் அக்காவும் ஆசிரியர்கள். அவர்களின் வழியைப் பின்பற்றி அனுராதாவும் கல்வித் துறை சார்ந்த பணியை மேற் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு கணவர் கங்காதரனுடன் துபாய்க்குச் சென்றார். “அங்கே நர்சரிப் பள்ளியைத் தொடங்க விரும்பினேன். அது அவ்வளவு சுலபமாக இல்லை. அதற்கென இருக்கும் தேர்வுகளை வெற்றிகரமாகக் கடந்து, ஒருவழியாகப் பள்ளியைத் தொடங்கிவிட்டோம். ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மொராக்கோ உள்ளிட்ட பல நாட்டுக் குழந்தைகளும் எங்களிடம் படிக்கிறார்கள்” என்கிறார் அனுராதா. வீட்டில் மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறவருக்குப் பள்ளியில் அவ்வளவு குழந்தைகளைச் சமாளிப்பது எளிதுதான் என்று புன்னகைக்கிறார்.

தமிழுக்கு மரியாதை

கணவர் கைநிறைய சம்பாதித்தாலும் அதில் திருப்தி இல்லை என்று சொல்ல, இருவரும் என்ன செய்வது என்று யோசித்திருக்கின்றனர். துபாயில் தமிழ்க் கடைகள் சிறிய அளவிலேயே இருப்பதால் பெரிய அளவில் கடையைத் திறக்க முடிவெடுத்தனர். “துபாயில் நினைத்ததுமே கடையைத் திறந்துவிட முடியாது. குறிப்பாக, உணவு தொடர்பான தொழிலைத் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. ஏகப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள். ஒவ்வொன் றையும் பொறுமையாகக் கடந்துவந்தோம். செயற்கை உணவுப் பொருள்களை எங்கள் கடையில் அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருந்தோம்” என்று சொல்கிறார் அனுராதா. பிறகு 2018 தமிழ் வருடப் பிறப்பன்று ‘தமிழ் மினி மார்ட்’ உதயமானது. அது தமிழ்க் கடை என்பதை உறுதிப்படுத்தும்விதமாக ‘ழ’கரத்தைத் தங்கள் நிறுவனத் தின் அடையாளச் சின்னமாக வைத்திருக்கிறார்கள்.

“எங்கள் கடைக்குள் நுழைந்ததுமே தமிழகத்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நுழைந்த அனுபவம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் செயல்பட்டோம். ஒரு பக்கம் பூக்களும் மறுபக்கம் ஊதுவத்தியும் மணம் வீச, கடைக்குள் மெல்லிய நாகஸ்வர இசை ஒலித்தபடி இருக்கும். கடைக்குள் வந்தால் அனைத்துமே கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழக விவசாயிகளிடமிருந்து தானியங்களை நேரடியாகக் கொள்முதல் செய்கிறோம். தின்பண்டங்களையும் அப்படித்தான் வாங்குகிறோம். எங்கள் நிறுவனத்தின் பங்குதாரரும் என் தம்பியுமான தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் இதை யெல்லாம் கவனித்துக்கொள்கிறார்.

மண்பானை, இருப்புச்சட்டி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தாயக்கட்டை, பல்லாங்குழி என்று தமிழக வீடுகளில் அரிதாகிப்போன வற்றைக்கூட எங்கள் கடையில் வாங்கலாம். இங்கே வசிக்கும் தென்னிந்தியர்கள் மட்டுமல்லாமல் வட நாட்டவரும் ஆர்வத்துடன் இவற்றை வாங்குகின்றனர்” என்கிறார் அனுராதா. பிரண்டை, வல்லாரை, தூதுவளை போன்ற மூலிகைக் கீரை வகைகளை திருச்சி விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றனர்.

சர்வதேச அங்கீகாரம்

கடையைத் திறந்ததுமே வாடிக்கை யாளர்கள் குவிந்துவிடவில்லை. ஆனால், அனுராதாவும் அவருடைய கணவரும் ஒவ்வொன்றிலும் இருந்து பாடம் கற்றனர். எதிர்மறை விமர்சனங் களுக்குச் செவிகொடுத்து அதைச் சரிசெய்தனர். வாடிக்கையாளர்களின் சிறு கோரிக்கையைக்கூடக் குறித்துவைத்து நிறைவேற்றினர். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

“சர்க்கரை, மைதா, செயற்கைக் குளிர் பானங்கள், சிகரெட் போன்றவற்றுக்கு இடம் தராததன் மூலம் உணவே மருந்து என்பதைக் கடைப்பிடிக்கிறோம். அது பலரைக் கவர்ந்தது. எண்ணத்தில் நேர்மையும் அக்கறையும் இருந்தால் வெற்றி தானாகத் தேடிவரும் என்பார்கள். அதற்கு நாங்களே சாட்சி” என்று தங்களுக்கு வழங்கப்பட்ட விருது குறித்துச் சொல்கிறார் அனுராதா. இவர்களது கடை ‘சிறந்த இந்தியக் கடை’ என்கிற ஆர்ட்டிக் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. “இந்த அங்கீகாரத்துக்குப் பின்னால் பலரது உழைப்பு இருக்கிறது. எதுவுமே என் தனித்த வெற்றியல்ல” என்று சொல்லும் அனுராதா, துபாயில் தமிழ் கற்றுத்தரும் குழுவிலும் இருக்கிறார்.

“நாம் எங்கே சென்றாலும் தாய்மொழிக்குப் பிறகுதானே மற்ற அனைத்தும். அதனால், ‘அன்னை மொழி அறிவோம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, கட்டணம் இல்லாமல் தமிழ் பயிற்சி வகுப்பை நடத்திவருகிறோம். 10 தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள்” என்று சொல்லும் அனுராதா, வீடு, பள்ளி, கடை என்று நிற்க நேரமில்லாமல் சுழல்கிறார். இவை போதாதென்று, சிறுதானிய உணவின் மகத்துவத்தைச் சொல்வதற்காக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். “இது போதும் என்று நாம் பின்னடைகிறபோது வாய்ப்பு தன் வாசல்கள் அனைத்தையும் மூடிக்கொள்ளும். தேடல் தொடங்குகிற போது வெற்றிக்கான புதிய பாதை திறக்கும்” என்று தன் வெற்றிக்கதையை இருவரியில் முடிக்கிறார் அனுராதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்