வீட்டு வேலைகளில் மூழ்கடிக்கப்பட்டு வாழ்நாளெல்லாம் ‘கடமை’யாற்றுவது பெண்ணுக்கு மட்டும் விதிக்கப்பட்டதா என்று 2020 ஜனவரி 31 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். பாலினப் பாகுபாடு நிறைந்த இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் வீட்டு வேலைகளிலும் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதிலும் ஆண்களின் பங்களிப்பை உறுதிசெய்வது எப்படி என்று கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
பெண்களை வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி நிர்பந்தித்த வரலாற்றுப் பிழையைத் திருத்தும் அதிகாரமும் செயல்திறனும் தாய்க்கு உண்டு. வளர்ந்து முடிந்த மரத்தைப் பராமரிப்பதைவிடப் புதிய தளிரிலிருந்து மாற்றங்களைக் கொண்டுவர முயல்வதே நல்ல பலனைத் தரும். தன்னிடம் இருக்கும் ‘குழந்தைப் பராமரிப்பு’ என்கிற பொறுப்பையே ஆண் குழந்தைகளுக்குச் சமத்துவத்தைக் கற்றுத்தரும் கருவியாகவும் தாய் பயன்படுத்தலாம்.
ச. யுவராஜ், சேலம்.
------------------------------------------------------------------------------
தன் மகனுக்கு வீட்டு வேலைகளைச் செய்யக் கற்பிப்பதன் மூலம் மாற்றத்துக்கு வித்திடலாம். பெண்கள் குடும்பத்துக்காகத் தங்கள் கனவுகளைக் கொன்று கடமைகளுக்காக மட்டும் வாழத் தொடங்குவதைக் கைவிடுவதன் மூலமும் புதிய பாதையை அமைக்கலாம்.
டாகடர் அபிஷா.
-------------------------------------------------------------------------------
சமையலறை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்குமானது என்பதை உணர்கிற ஒருவன், மனைவியை மட்டுமே சமைக்கச் சொல்லாமல் தானும் சமைப்பான். அவனைப் பார்த்து வளரும் அவனுடைய மகனும் அதைத் தொடர்வான். ஒரு தலைமுறைக்கு நாம் வழிகாட்டிவிட்டால் அந்த நற்பண்பு பல தலைமுறைகளுக்குத் தொடரும்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
------------------------------------------------------------------------------
எளிதாகக் கிடைக்கிற எதற்குமே மதிப்பில்லை. பெண்ணின் உழைப்பும் அப்படித்தான். இதற்குத் தீர்வுகாண, வீட்டு வேலை இருபாலருக்கும் பொதுவானது, ஆண்கள் அதைச் செய்வதால் எந்தக் கிரீடமும் சரிந்துவிடாது என்று கற்றுக்கொடுத்துக் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
மலர் மகள், மதுரை.
------------------------------------------------------------------------------
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பெண் ஒருவர், மகன் தனக்குப் பிற்காலத்தில் சோறு போடுவான் என்பதற்காக அவனை விழுந்து விழுந்து கவனிப்பதாகச் சொன்னார். இன்னொரு பெண்ணோ, அவன் கடைக்குச் சென்று மளிகைப் பொருள்களை வாங்கிவருகிற கடுமையான வேலையைச் செய்வதாகவும் மகள் வீட்டு வேலை என்கிற ‘சும்மா இருக்கிற’ வேலையைச் செய்வதாகவும் சொன்னார். பெண்களின் மனத்தில் பசுமரத்தாணியாக இருக்கிற இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மாற வேண்டும்.
பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
------------------------------------------------------------------------------
வீட்டு வேலையைச் செய்யும் ஆண்கள்கூட அதை வெளியே சொல்வதையோ, உறவினர் முன்பு செய்வதையோ அவமானமாக நினைக்கிறார்கள். அந்த எண்ணம் மாற வேண்டும். மற்றவரிடம் சொல்லும்போதுதான் வீட்டு வேலையில் நமக்கும் பங்கு உண்டு என்பது மற்றவர் மனத்திலும் உறைக்கும்.
ராஜேஸ்வரி ரிஷிகர்.
------------------------------------------------------------------------------
ஏறத்தாழ முப்பது வயதுவரை வீட்டின் அனைத்துப் பெண்களும் ஆணுக்குப் பணிவிடை செய்து, அவர்கள் அறியாமலே உறவென்ற பெயரில் அவனுக்கு வேலைக்காரர்களாகவும், அவனை ஒரு குட்டித் தலைவனாகவும் ஆக்கிவிட்ட பிறகு, வீட்டு வேலைகளில் அவன் பங்கெடுப்பான் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஆனால், வெளிநாட்டுக்குக் குடிபெயரும் இந்திய ஆண்கள், அனைத்து வீட்டு வேலைகளிலும் பங்கெடுக்கிறார்களே எப்படி? அவனை விமர்சிக்கும் நட்பும் சுற்றமும் உடன் இல்லாதது காரணமா? இதே வழியில் சிந்தித்தால் அடுத்த தலைமுறையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகம்.
கே. ராஜலட்சுமி, சென்னை.
------------------------------------------------------------------------------
‘சமையலறை அற்ற வீட்டை நிர்மாணிப்போம்’ என்கிற பெரியாரின் கருத்தைக் வழிமொழிய வேண்டிய தருணம் இது. பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தைத் தன் திறனால், கடின உழைப்பால் மேம்படுத்தினாலும் முழுமையாக வீட்டிற்கேற்ற பெண்ணென்று ஆக மாட்டாள். அந்தப் பட்டத்தை அவள் அடைய வேண்டுமெனில், ஒரு நாளின் பெரும்பகுதியைச் சமையலறைப் பணிகளுக்காகச் செலவழிப்பவளாக இருக்க வேண்டும் என்பதே இங்கே நியதி. உண்மையில் இது போன்ற அழுத்தங்களிலிருந்து பெண்கள் வெளிவந்தால்தான், அடுத்தடுத்த மாற்றங்களைக் காண முடியும்.
அனிச்சம் கனிமொழி, ஈரோடு.
------------------------------------------------------------------------------
மாற்றத்தை முதலில் பெண்கள் தங்களுக்குள் கொண்டுவர வேண்டும். அதைத் தனியாகச் செய்ய முடியாதுதான். ஆனால், வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து செயல்பட்டால் இது சாத்தியமே. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தங்களது அடிப்படை வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளப் பழக வேண்டும். சாப்பிடுவதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் ஆண்கள், சமைத்தல் என்பதை மட்டும் அருவருப்பாகப் பார்க்கும் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தேஜஸ், காளப்பட்டி, கோவை.
------------------------------------------------------------------------------
அனைத்து வேலைகளிலும் என் கணவர் உதவுவார். ஆனால், அதை மற்ற பெண்கள் பெரும்பாலான நேரம் கேலியாகவும் குத்தலாகவும் விமர்சித்திருக்கிறார்கள். சில நேரம் உறவினர்களும் நண்பர்களும் இதைக் கிண்டல் செய்யும்போது வருத்தமாக இருக்கும். ஆனால், அவர் இது குறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகவும் தெளிவாக இருப்பதால், கேலி பேசுகிறவர்கள்தாம் வெட்கப்பட வேண்டும் என்பார். இதை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தி. சித்ரா மோகன், பம்மல், சென்னை.
------------------------------------------------------------------------------
வேலைக்குச் செல்லும் ஆண்களுக்குக்கூட ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது. ஆனால், வீட்டு வேலைகளில் உழன்றுகொண்டிருக்கும் பெண்களுக்கு ஓய்வோ விடுமுறையோ போதுமான அளவு கிடைப்பதில்லை. ‘இல்லத்தரசி’களை இயல்பாக ஏற்றுக்கொள்கிறவர்கள், ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’டை ஏற இறங்கத்தான் பார்க்கிறார்கள்.
ரா. காயத்ரி, மாத்தூர், புதுக்கோட்டை.
------------------------------------------------------------------------------
ஆண்களை மட்டுமல்ல; ஆண் பிள்ளைகளை அமர வைத்துவிட்டுப் பெண்களிடம் வேலை வாங்கும் பெண்களையும் மாற்ற வேண்டும். வீட்டு வேலையில் உதவிசெய்யச் சொல்லி என் கணவரிடம் சொன்னதற்கு, என்னை வெளியே அழைத்துச் செல்வது அவரது கடமை என்றும் வீட்டு வேலை செய்வது என் கடமை என்றும் சொல்லிவிட்டார். இதுதான் நிதர்சனம்.
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
------------------------------------------------------------------------------
என் மகனுக்கு அப்போது பத்து வயது. என் பிறந்தநாளுக்கு எனக்குத் தெரியாமல் சார்ட் பேப்பர் வாங்கி அதில், ‘என் அம்மாவை இன்று சமையலறை பக்கம் போகவிட மாட்டேன்; இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா’ என்று எழுதியிருந்தான். சமையலறையில் அன்னை படும் சிரமங்களை அந்த வயதிலேயே அறிந்திருந்தான் என்பதே அன்று எனக்கான பிறந்தநாள் பரிசானது. இப்படியும் பிள்ளைகளை வளர்க்கலாமே.
ஜெ. ஜான்சி சுப்புராஜ், கோண்டூர், கடலூர்.
------------------------------------------------------------------------------
வீட்டு வேலைகளில் பேதம் பார்க்கமாட்டேன். என்னால் முடிந்த வேலைகளைக் கேட்டுச் செய்வேன். பணி நிறைவுக்குப் பின்னர் குழம்பு, சட்னி போன்ற அடிப்படை உணவு வகைகளைச் செய்யப் பழகத் தொடங்கினேன். ‘பெண் இன்று’ பகுதியில் வரும் சமையல் குறிப்புகளும் கைகொடுத்தன. பாராட்டுகள் வரத் தொடங்கிய தருணம், ‘சமையலறையை ஆக்கிரமித்துக்கொள்’ என்பதை என் மனைவி கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். இப்போதும் சமையலறையில் என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை. வீட்டில் ஒரேயொரு பெண் இருந்தாலும் ஆண் அடுக்களை பக்கம் போவதில்லை. இப்படிப்பட்ட ஆண்கள் முதலில் திருந்த வேண்டும். ஓர் ஆண் காலையில் அடுப்பைச் சுத்தம் செய்யும்போது இனிய உறவு தொடங்கிவிடும். தினமும் பொழுது இனிதாகும்.
சி. இரமேசு, விசுவநாதபுரம்.
------------------------------------------------------------------------------
ஊதியம் இல்லை என்பதால்தான் வீட்டு வேலை களுக்கு மதிப்பில்லை. அதைப் பெண்களைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கப்படுகிறது. குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட பெண்கள் செய்யும் வேலைகளை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் சேர்த்துக்கொள்வதில்லை. இந்த நிலை மாறினால்தான் வீட்டு வேலை செய்வது அவமானம் என்று கருதும் ஆணாதிக்கவாதிகள், வீட்டு வேலையை மதிப்பதுடன் வேலை செய்யவும் தொடங்குவார்கள். கணவரின் ஊதியத்தில் ஒரு பங்கு அவரவர் மனைவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் சட்டம் இயற்றினால்தான் பெண்களின் உழைப்புக்கு மதிப்பிருக்கும். இது சற்று கடினமான வழி என்றாலும், இது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
பிரியங்கா பெருமாள்.
------------------------------------------------------------------------------
ஆண் ஓட்டலில் சமையல் செய்தால் அது வேலை என அங்கீகரிக்கப்பட்டு, அதற்குச் சம்பளமும் தரப்படுகிறது. அதுவே, பெண் வீட்டில் சமைத்தால் அவள் சும்மா இருக்கிறாள் என்கிற அவப்பெயர்தான் மிஞ்சுகிறது; தான் சும்மா இருப்ப தாக பெண்ணும் நம்பவைக்கப்படுகிறாள். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
ஜே. லூர்து, மதுரை.
------------------------------------------------------------------------------
18.3.1947 தேதியிட்ட ‘குடி அரசு’ இதழில் பெரியார் இவ்வாறு எழுதினார்: “பெண்களைச் சமையலறையிலிருந்து வெளியேற்ற பொதுச் சமையல் கூடங்களை உருவாக்க வேண்டும். பெண்களைச் சமையலறை அடிமைகளாக நடத்துவது, வருணாசிரமக் கொள்கையைவிட மோசமானது”. பெரியாரின் இக்கூற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் நம் சமூகத்தில் பேசுபொருளாகக்கூட ஆகவில்லை என்பது ஆணாதிக்கச் சமூகத்தின் கோர முகத்தைப் பிரதிபலிக்கிறது. 33% இட ஒதுக்கீடு கேட்கும் அதே நேரம், ஆயுள் கைதிகளாகச் சமையலறையில் கிடந்து அல்லாடும் பெண்களுக்கு முதலில் 'பரோல்' பெறவாவது முயல்வோம்.
கவிதா இராமலிங்கம், உதவி ஆணையர் (ஜி.எஸ்.டி.), சென்னை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago