சமையலறை: ஆண்களுக்கு விலக்கப்பட்ட கனியா?

By பிருந்தா சீனிவாசன்

அந்தப் பெண்ணுக்கு அறுபது வயதிருக்கும். பின்தங்கிய கிராமத்தில் பிறந்த அவர் எட்டு வயதிலேயே சமைக்கத் தொடங்கிவிட்டார். பதினான்கு வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார்.

பத்துக்கும் குறையாத உறுப்பினர்களுடன் புகுந்த வீடு, இரட்டை அடுப்பும் பெரும் பானைகளுமாக அவரை வரவேற்றது. 'மூத்த மருமகள்' என்கிற பட்டத்துடன் அடுக்களை கிரீடம் அவருக்கு அணிவிக்கப்பட்டது. புள்ளினங்கள் பாடத் தொடங்கும் முன்பே எழுந்து களி கிண்டி அடுக்கும் அவர், வீட்டு வேலைகளையும் வயல் வேலைகளையும் முடித்துவிட்டு நிமிர்வதற்குள் நிலா நடுவானுக்கு வந்திருக்கும். பொதுவான நாள்களில் இப்படியென்றால், நாள்-கிழமையென்று வந்துவிட்டாலோ சமைத்து மாளாது.

விரும்பி அணியும் சங்கிலிகள்

கிராமத்திலிருந்து சிறு நகரத்துக்குக் குடியேறிய பிறகும் வேலையின் தன்மை மாறியதே தவிர, எதிலிருந்துமே அவருக்கு விடுதலையில்லை. அடுத்தடுத்துப் பிள் ளைகள், மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல், இட்லிகள், தோசைகள், கிலோ கிலோவாக கறிச்சோறு என்று வேலை கொஞ்சம் கொஞ்சமாக நவீனப்பட்டது.

சாதத்தைக் குழையாமல் வடிக்க வேண்டும். ஒரே ஒரு கல் இருந்தாலும் அதை எடுத்துத் தன் கையில் தரும் கணவன், “இது மட்டும் வேகவில்லைபோல” என்று கேட்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுவார் அந்தப் பெண். அந்த அளவோடு மட்டும் கணவன் நிறுத்திக்கொண்ட நிம்மதி அவருக்கு. அவளுடைய தோழியின் கணவன், சோற்றில் கல் இருந்தால் அதை எடுத்துத் தோழியின் தொடையில் வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அழுத்தித் தேய்ப்பாரம். தொடை தப்பியதே என்கிற நிம்மதி இவருக்கு!

தற்போது பேரன், பேத்தி எடுத்துவிட்ட பிறகும் பொறுப்பு, கடமை என்கிற போர்வையில் தன்னைப் பிணைத்திருக்கும் சங்கிலியை அவிழ்க்க அவருக்கு விருப்பமில்லை. கருப்பையை நீக்கிவிட்ட நிலையிலும் காலை எட்டு மணிக்கெல்லாம் கணவருக்குச் சிற்றுண்டியைத் தயாராக எடுத்துவைப்பார்.

அதிகாரம் இல்லாத ‘அதிகாரம்’

இவரே இப்படியென்றால், அம்பை எழுதிய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதையில் வருகிற ஜீஜி இவரையும் விஞ்சக்கூடியவர். ஜீஜியும் இந்தக் கிராமத்துப் பெண்ணைப் போல பதினான்கு வயதில் பப்பாஜிக்கு மணம் முடிக்கப்பட்டவர். வீட்டில் மொத்தம் முப்பது பேர். ஐந்து கிலோ ‘ஆட்டா’ பிசைய வேண்டும். தினமும் முந்நூறு சப்பாத்திகள் இட்டார். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் ரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. அப்போது பப்பாஜி சொன்னார், “சபாஷ்... நீ நல்ல உழைப்பாளி” என்று.

“சமையலறையை ஆக்ரமித்துக்கொள். அலங்காரம் செய்துகொள்ள மறக்காதே. இரண்டும்தான் உன் பலம்; அதிலிருந்துதான் அதிகாரம்” என்று ஜீஜியின் அம்மா திருமணம் முடிந்ததும் சொல்லி அனுப்பியிருந்தார். அதுதான் ஜீஜியைச் சமையலறையை விட்டு வெளியேறவிடாமல் வைத்தி ருந்தது. லட்சக்கணக்கில் சப்பாத்திகளை இட்டார், கூடைகூடையாக வெங்காயம் அரிந்தார். பீரோ சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு தான் செல்வாக்குடன் அதி காரம் செலுத்துவதாக நினைத்தி ருந்தார். ஆனால், அவர் ஆட்சி செலுத்திய சமையலறையில் உள்ள தொட்டியின் கீழே செங்கல் வைத்த சாக்கடை முற்றத்தை கட்ட வேண்டுமெனச் சொல்லக்கூட, கடைசிவரை அவருக்கு அதிகாரம் வாய்க்கவில்லை.

நவீனக் கொத்தடிமை

ஜீஜியின் நிலைதான் அண்மையில் வெளியாகி, பொதுவெளியில் விவாதங்களை உருவாக்கியிருக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளத் திரைப்படத்தின் நாயகிக்கும். அவளும் தன் புகுந்தவீட்டுச் சமையலறைத் தொட்டிக் கழிவுநீர்க் குழாயின் கசிவைச் சரிசெய்யச் சொல்லி நாள்தோறும் கணவனுக்கு நினைவூட்டுகிறாள். “வீடு என்பது கணவனும் மனைவியும் நெகிழ்வுத்தன்மையுடன் கட்டமைக்கும் சமூகத்தின் சிறிய அலகு” என்று வகுப்பு எடுக்கும் ஆசிரியரான அவளுடைய கணவனுக்கோ, சொல்லிவைத்ததுபோல் மனைவியின் நினைவூட்டல் மறந்துவிடுகிறது. ஆனால், நாள்தோறும் இரவில் மனைவியின் விருப்பம் அறியாமலேயே விளக்கை அணைக்கச் சொல்ல மட்டும் அவன் தவறுவதில்லை.

வாட்ஸ்அப்பில் வீடியோக்களைப் பார்க்க முடிகிற மாமனாருக்கு, பேஸ்ட்டும் பிரஷ்ஷும் அவள்தான் எடுத்துத் தர வேண்டும். அந்தக் காலத்திலேயே எம்.ஏ. முடித்திருந்த தன் மனைவி, தன் அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காக வேலைக்குச் செல்லவில்லை என்று மாமனார் பெருமிதத்துடன் கூறும் ஆலோசனையை ஏற்று, நடன ஆசிரியர் பணிக்கு அவள் விண்ணப்பிப்பதற்குத் தடை போடப்படுகிறது. சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் சாமிக்கு அவ்வப்போது சமைத்த உணவைத்தான் தர வேண்டும் என்பதுகூடத் தெரியாதா என்று கணவனும் மாமனாரும் திட்டுகிறபோது மறு வார்த்தை பேசாமல் அவள் நிற்க வேண்டும். மாதவிடாய் நாள்களின் தனிமை குறித்து உறவுப் பெண் வகுப்பெடுக்கும்போது வாய் திறவாமல் கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வளவையும் அந்தப் பெண் முகம் சுளிக்காமல் செய்கிறார்.

ஆணாதிக்கத் தந்திரம்

இதில் என்ன இருக்கிறது; இவையெல்லாம் பெண்களின் வேலைதானே என்கிற கேள்வி நமக்கு எழுந்தால், பல நூறு ஆண்டுகளாக நம் மூளைக்குள் புகுத்தப்பட்டிருக்கும் பெண்ணடிமைச் சிந்த னையும் ஆணாதிக்கமும் இன்னும் நம்மைவிட்டு சிறிதளவுகூட அகலவில்லை என்று பொருள். வீட்டு வேலைகளையும் குழந்தைப் பராமரிப்பையும் வெகுநேர்த்தியாகத் திட்டமிட்டுப் பெண்களின் தலையில் சுமத்தியதில்தான் இருக்கிறது ஆண்களின் தந்திரம். பெண்களும் வேறு வழியின்றி, குடும்ப அமைப்பில் அதிகாரம்மிக்க ஆணுக்குப் பணிவிடை செய்வதன் வாயிலாகத் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். உண்மையில் கடமை என்கிற பெயரில் அவர்களின் உழைப்புச் சுரண்டப்படுகிறதே தவிர, அதனால் பெண்ணுக்கு எந்தவொரு நன்மையும் கிடைப்பதில்லை.

காலையில் தாமதமாக எழுந்தாலோ, சரியான உணவைச் சமைக்கவில்லை என்றாலோ, வீடு சுத்தம் செய்யப்படாமல் இருந்தாலோ குற்றவுணர்வுக்கு ஆளாகும் வகையில் பெண்களைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறது ஆணாதிக்கச் சமூகம். வீட்டிலும் வெளியிலுமாகப் பெண்கள் செய்கிற வேலைகளுக்கெல்லாம் ஊதியத்தை நிர்ணயித்தால், அது ஆண்களின் வருமானத்தை விஞ்சிவிடும். அந்த அச்சத்தால்தான் ஊதியமற்ற, அதிக உடலுழைப்புக் கோருகிற வேலைகளில் பெண்களை ஈடுபடுத்திவிட்டு ஆண்கள் காலாட்டியபடியே இருக்கிறார்கள், மாமதயானையை சிறுகுச்சியால் அடக்கிவிடுகிற பாகனைப் போல.

இப்போது நிலைமை மாறிவிட்டது என்று சொல்கிறவர்கள், ‘இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்று சொல்கிறவர்களுக்கு நிகரானவர்கள். தவிர, அங்கொன்றும் இங்கொன்றுமான விதிவிலக்குகளே புதிய விதிகள் ஆகிவிடாது. அமர்ந்த இடத்திலேயே காபி, டீ கேட்கிறவர்களும், சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவுகிறவர்களும், தன் உள்ளாடைகளைக்கூடத் துவைத்துக் கொள்ளாதவர்களும், ‘வீட்ல அப்படி என்னதான் வேலை இருக்கோ’ என்று சலித்துக்கொள்கிறவர்களும், தட்டில் விழுகிற உணவுக்காகச் சிறு விரலைக்கூட அசைக்காதவர்களும் தங்கள் வீட்டுப் பெண்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறவர்களே.

விட்டு விடுதலையாவோம்

கதையிலும் திரையிலும் வந்த பெண்கள் ஒரு கட்டத்தில் விழித்துக்கொள்கின்றனர். பெண்ணுரிமை பேசுகிற முகநூல் பதிவை நீக்கும்படி கணவன் சொல்ல, அதைச் செய்ய மறுப்பதன் வாயிலாகப் பழமைவாதத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான தன் நிலைப்பாட்டை உணர்த்துகிறாள் திரையில் வரும் பெண். வீடு என்பது ஆண், பெண் இருவரும் அனைத்து வேலைகளையும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டிய இடம் என்பதை குடிக்கத் தண்ணீர் கொண்டுவரும்படி தன் அம்மாவிடம் சொல்லும் தம்பியைக் கண்டிப்பதன்மூலம் அவள் உணர்த்துகிறாள்.

அம்பையின் கதையில் இடம்பெற்ற பெண்ணும் வாழ்க்கையின் இறுதியில் தன்னைக் கண்டடைகிறார். சமையலறை, நகைகள், குழந்தைகள், பப்பாஜி எல்லாவற்றையும் துறந்தால், எல்லா வற்றிலிருந்தும் விடுபட்டால் எஞ்சுவது துலாரிபாய் மட்டும்தான். அதுதான் பலம்; அங்கிருந்துதான் அதிகாரம் தொடங்கு கிறது என்பது ஜீஜிக்குப் புரிகிறது. உடம்பின் அங்கங்கள் யாவும் கழன்று விழுந்த பிறகு, சமையலறை மணம் தூர விலகிய பிறகு எஞ்சுகிற துலாரிபாய் ஒரு வகையில் பெரியாரின் கருத்தைப் பிரதிபலிக்கிறார்.

ஆனால், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அறுபது வயதுப் பெண், நம்மில் பெரும்பாலானோரைப் போலவே கருகிவிடாத, மெத்தென்ற தோசைகளை இன்றைக்கும் சுட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அதில் அவர் அவமானப்பட ஒன்றுமில்லை. இவ்வளவு ஆண்டுகளாக அவரது உழைப்பைச் சுரண்டி வாழ்வதுடன், அது அவரது கடமை என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் அவரது வீட்டு ஆண்கள்தாம் வெட்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

நீங்க என்ன சொல்றீங்க?

தோழிகளே, வீட்டு வேலைகள் அனைத்தும் ஏன் பெண்களின் தலையிலேயே சுமத்தப்படு கின்றன? ஊதியம் இல்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு கணக்கில்கொள்ளப்படாமல் இருப்பதன் அரசியலை எப்படிச் சீரமைப்பது? வீட்டு வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கும் பங்கு இருப்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது? உங்கள் கருத்து என்ன, அனுபவம் என்ன? எங்களுக்கு எழுதியனுப்புங்கள், விவாதிக்கலாம். மின்னஞ்சல்: penindru@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்