மருத்துவர் வி. சாந்தா
(1927 - 2021)
இறந்த பிறகும் இறவாப் புகழோடு வாழ்கிறவர்கள் மனிதராகப் பிறந்ததன் பொருளைப் பூர்த்திசெய்கிறார்கள். மக்கள் சேவையையே வாழ்நாள் கடமையாகக்கொண்டு வாழ்ந்தவர்களே அத்தகைய பேறு பெறுகிறார்கள். விழித்திருந்த நேரமெல்லாம் புற்றுநோயாளிகளின் நலவாழ்வுக்காகவே உழைத்த மருத்துவர் வி.சாந்தா, மறைவுக்குப் பிறகும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
1927-ல் பிறந்த சாந்தா, சிறந்த கல்வி யாளர்களை உறவினர்களாகக் கொண்டவர். நோபல் பரிசு பெற்றவர்களான எஸ். சந்திர சேகர், இவருடைய தாய்வழி மாமா, சி.வி.ராமன் இவருடைய தாய்வழித் தாத்தா. அதனாலேயே கல்வி இவருக்கு இனித்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டி ருந்தபோதுதான், புற்றுநோயாளிகளின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய மாற்றம் சாந்தாவின் வாழ்க்கையில் நிகழ்ந்தது.
குருவின் வழியில்
மகப்பேறு மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்திருந்த சாந்தா, புற்றுநோய் சிகிச்சையின் பக்கம் திரும்பியதற்குக் காரணம் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி. தென்னிந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்ணான முத்துலட்சுமி ரெட்டியின் மகனான இவர், தன் அம்மா தொடங்கவிருந்த புற்றுநோய் மருத்துவமனை குறித்து மருத்துவக் கல்லூரி மாணவியாக இருந்த சாந்தாவிடம் அடிக்கடி சொல்வாராம். இந்தியா போன்ற நாட்டில் புற்றுநோய் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களின் தேவை குறித்தும் கிருஷ்ணமூர்த்தி சொல்ல, மெட்ராஸ் தாய் - சேய் நல மருத்துவமனையில் உதவி அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியாற்ற கிடைத்த வேலையை ஏற்காமல் அடையாறு புற்றுநோய் மையத்தில் சாந்தா இணைந்தார்.
1954-ல் முத்துலட்சுமியால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வளர்ச்சிக்காக கிருஷ்ண மூர்த்தியுடன் இணைந்து உழைத்தார். கிருஷ்ணமூர்த்தியின் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான அறிவும் செயல்பாடும் தன்னைப் பெருமளவில் ஈர்த்ததாகச் சொன்ன சாந்தா, அவரைத் தன் குருவாக மதித்தார்.
அடையாறு புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் அறுவைசிகிச்சைக்குத் தனிப் பிரிவு தொடங்கப்பட்டதில் சாந்தாவின் பங்கு முதன்மை யானது. அதன் பலனாக இந்தியாவின் முதல் புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்புப் பயிற்சி மையம் 1984-ல்அடையாறு புற்றுநோய் மையத்தில் தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோயை இனங்கண்டறியும் பரிசோதனைகள் போன்றவற்றிலும் அடையாறு புற்றுநோய் மையத்தை முதன்மை பெறச் செய்தார்.
ஓய்வறியா உழைப்பு
60 ஆண்டுகளுக்கும் மேலாகப் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை வழங்கும் பணியை மேற்கொண்டுவந்த சாந்தா, ஓய்வென்ற சொல்லே இல்லை என்னும் அளவுக்கு உழைத்தார். அடையாறு புற்றுநோய் மையத்தின் வளாகத்துக்குள்ளேயே சிறு வீட்டில் வசித்தார். 24 மணி நேரமும் நோயாளிகளைச் சந்திக்கத்தான் இந்த ஏற்பாடு. முதுமையின் தளர்வையும் அந்த வயதுக்கே உரிய சிக்கல்களையும் புறந்தள்ளிவிட்டுத் தொடர்ந்து மருத்துவப் பணிகளில் ஈடுபட்டார்.
தான் இறப்பதற்கு முதல் நாள் மாலைவரை பணியில் இருந்தார். தனக்கு வழங்கப்பட்ட மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், ரமோன் மகசேசே போன்றவற்றைவிட, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் புன்னகையையே பெரும் விருதாகக் கருதினார் சாந்தா. அதுதான் 93 வயதிலும் அவரைத் துடிப்புடன் பணியாற்ற வைத்தது. கரோனா ஊரடங்குக் காலத்தில் அவருக்கிருந்த பெருங்கவலை, நோயாளிகள் சிகிச்சைக்காக எப்படி வருவார்கள் என்பதுதான். அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ததும், ஊடகங்களைத் தகவல் தொடர்பு சாதனமாகப் பயன்படுத்தியதும் சாந்தாவுக்குப் புற்றுநோயாளிகள் மீதிருந்த அன்புக்கும் அக்கறைக்கும் சான்றுகள்.
புற்றுநோய் தொற்றுநோயல்ல
அந்தக் காலத்தில் புற்றுநோய் குறித்து மக்களிடம் அச்சமும் அறியாமையும் ஒருங்கே குடியிருந்தன. புற்றுநோய் என்றாலே ரத்தம் கக்கிச் சாவது ஒன்றுதான் முடிவு என்று மக்கள் நம்பியிருந்தனர். அப்படியொரு சூழலில்தான் புற்றுநோய் மருத்துவத் துறைக்குள் சாந்தா நுழைந்தார். சிகிச்சை ஒரு பக்கம் என்றால், மக்களிடம் இந்த நோய் குறித்து வேரோடியிருந்த மூடநம்பிக்கையைக் களைவதிலும் முனைப்புடன் செயல்பட்டார்.
புற்றுநோயாளியைத் தொட்டாலே தனக்கும் நோய் பரவிவிடும் என்று படித்தவர்களும் நம்பியிருந்த காலத்தில் புற்றுநோயாளிகளை நெருங்கி, பரிவுடன் சிகிச்சை அளித்தார். இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் பரவலாக்கப்படாத காலத்தில் சாந்தாவும் அவருடன் பணியாற்றிய மருத்துவர்களும் புற்றுநோய் சிகிச்சை குறித்த பயிற்சிகளை மற்ற மருத்துவர்களுக்கு வழங்கினர். இதைப் புற்றுநோய் சிகிச்சை முறையில் மைல் கல் என்றே சொல்லலாம்.
அனைவருக்குமானவர்
நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்தவ ரல்ல சாந்தா. புற்றுநோய் மற்ற நோய்களைப் போன்றது அல்ல. அது உடலுடன் மனதை யும் சேர்த்தே வருத்தும் என்பதைப் புரிந்துகொண்டதால்தான், இரண்டுக்குமான சிகிச்சையிலும் ஆர்வம் காட்டினார். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பலருக்கும் மறுவாழ்க்கைக்கான ஆலோசனையையும் வழங்கினார். நோய் குணமாகும் என்று ஒரு மருத்துவராகத் தான் சொல்வதைவிட, நோயிலிருந்து மீண்டவர்கள் சொல்வது பொருத் தமாக இருக்கும் என்பதால் பல தளங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தன்னிடம் சிகிச்சை பெற்றவர்களை அந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் பேச வைத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
பலரும் புற்றுநோயுடன் போராடி மீள, மீண்டவர்களின் வார்த்தைகள் உந்துசக்தியான விளங்கின. அதேபோல் வலி தணிப்பு சிகிச்சை யிலும் சாந்தா அக்கறை செலுத்தினார். கீமோ தெரபி, கதிரியக்கச் சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றால் வலியுடன் அவதிப் படுவோருக்கு அதைத் தணிப்பதற்கான சிகிச்சையும் ஆறுதலான வார்த்தைகளும் அவசியம் என்பதால் அவை கிடைக்கவும் வழிசெய்தார்.
சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு அறக்கட்டளை மூலம் சிகிச்சை கிடைப்பதற்கான ஏற்பாடுகளிலும் பங்கெடுத்தார். கல்வியறிவில்லாதவர்கள்கூட புற்றுநோய் என்றதும் ‘அடையாறுக்குச் சென்றால் போதும்’ என்று நினைக்கும் நிலையை, அந்தப் புற்றுநோய் மையம் அடைந்திருப்பதில் சாந்தாவின் பங்களிப்பு அளவிட முடியாதது. அதனால்தான் எல்லாத் தரப்பு மக்களின் மனங்களிலும் அவர் உயர்ந்து நிற்கிறார். அவரது இறுதி ஊர்வலத்தில் மருத்துவத் துறையினர் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டதே அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago