குழந்தைத் திருமணம்: களையப்படுமா தேசத்தின் அவமானம்?

By க.நாகப்பன்

நீரிழிவு நோயால் தாயைப் பறிகொடுத்த நிலையில், தந்தையின் பிடிவாதத்தால் 37 வயதான பழ வியாபாரியைத் திருமணம் செய்துகொண்டு, மூன்றே நாளில் இறந்த 14 வயது போடிமெட்டுச் சிறுமியை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

தன் தம்பியின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், அவரைத் தேற்றுவதற்காகத் தன் 14 வயது மகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொடுத்த திருச்சியைச் சேர்ந்த தாயைப் பற்றித் தெரியுமா?

14 வயதுச் சிறுமியை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்றாம் முறையாகக் கர்ப்பமானவர் மீது சந்தேகப்பட்டு, கொடூரமாகத் தாக்கி, உடம்பில் சிகரெட்டால் சுட்டும், தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொன்ற தேனி சுரேஷ் மீது கோபம் வருகிறதா?

இந்த டிஜிட்டல் யுகத்திலும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றனவா என்கிற கேள்விக்கான விடைகளே இந்தச் சம்பவங்கள்.

அதிரவைக்கும் புள்ளிவிவரம்

ஐந்தாம் தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பில் தமிழகம் தவிர்த்து 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற கணக்கெடுப்புத் தகவல்களை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. 6.1 லட்சம் மாதிரிக் குடும்பங்களில் தகவல்கள் திரட்டப்பட்டதில், பெண்கள் சட்டபூர்வ திருமண வயதான 18-ஐ எட்டும் முன்பே திருமணம் செய்துகொள்வது தொடர்பான அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

‘குழந்தைகளுக்கான உரிமைகளும் நீங்களும்’ அமைப்பு (CRY), இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறித்துக் கடந்த 10 ஆண்டுகளின் நிலை எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையைக் கடந்த அக்டோபரில் வெளியிட்டது. இந்திய மக்கள்தொகையில் 10 வயது முதல் 19 வயது வரையிலான 1.72 கோடிக் குழந்தைகள், பதின்வயதினர் திருமணம் முடித்துள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 7 சதவீதம் என்று ‘க்ரை’ தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்ல யுனிசெஃப், 'சைல்ட் லைன் இந்தியா', 'சேவ் தி சில்ரன்' போன்ற அமைப்புகளும் அதிகரித்துவரும் குழந்தைத் திருமணங்கள் குறித்து எச்சரித்துள்ளன.

காரணங்கள்

18 வயதுக்குக்கீழ் உள்ள பெண்ணுக்கும், 21 வயதுக்குக் குறைவாக உள்ள ஆணுக்கும் நடைபெறும் திருமணமே ‘குழந்தைத் திருமணம்’ என்கிறது 2006ஆம் ஆண்டு 'குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்'. 2020ஆம் ஆண்டிலும் இது மாறவில்லை.

கோவிட் நெருக்கடி, வறுமை, கல்வியறிவின்மை, பெற்றோர் இடம்பெயர்ந்து வேலைக்குச் செல்லுதல், பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் உடல்நிலை, சொந்தம்/ சொத்து விட்டுப்போய்விடக் கூடாது, சுய சாதி/ குலப்பெருமை காத்தல், காதல் திருமணத் தடுப்பு, வரதட்சிணை குறைவு, பாலியல் அச்சுறுத்தல்களி லிருந்து தப்பிக்க வைத்தல், கடமையை முடித்துக்கொள்ளுதல், ஜோசியத்தின் மீதான நம்பிக்கை, பாலின விகிதம், வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கான காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன. பெண் பாரமாக/ செலவாகப் பார்க்கப்படுவதே சமூகத்தின் முதன்மைச் சிக்கல்.

தமிழக நிலைமை

கடந்த ஆண்டுவரை தமிழகத்தில் 10,913 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் மட்டும் 2,242 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று தமிழக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கை ஒட்டிய 11 மாதங்களில் மட்டும் குழந்தைத் திருமணம் தொடர்பாக ‘சைல்டு ஹெல்ப் லைன்’ அமைப்புக்கு 1,700 அழைப்புகள் வந்துள்ளன. தமிழகத்தில் சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திருப்பூர், கோவை, மதுரை, திருவண்ணாமலை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

நகர்ப்புறங்களிலும் அதிகம்

கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடக்கும் அவலம் தொடர்வதாகக் கூறுகிறார் குழந்தைகள் நலச் செயற் பாட்டாளரும் ‘தோழமை’ அமைப்பின் இயக்குநருமான தேவநேயன்.

‘‘தமிழகத்தில் மட்டும் மொத்தம் 62,500 திருமணங்கள் 2018இல் நடந்துள்ளன. தமிழக அளவில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இது நமக்கு அவமானம். சென்னையில் குடிசைகளே இருக்கக் கூடாது என்று விளிம்புநிலை மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் ஒருங்கிணைக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக மீண்டும் நகரத்துக்கு வந்து செல்ல வேண்டியிருக்கிறது. இச்சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சிறு வயதில் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர்.

குழந்தைத் திருமணம் செய்தவர்களில் 17 சதவீதத்தினர் கணவரை இழந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 20 வயதுக்கு மேல் மணம் புரிவோருடன் ஒப்பிடுகையில் மகப்பேறு மரண விகிதம் குழந்தைத் திருமணம் செய்வதில் அதிகம். அரசு, சமூகம், குடும்பம் மூன்றும் இணைந்து செயல்பட்டால்தான் இதைத் தடுக்க முடியும்’’ என்று கவலை பகிர்கிறார் தேவநேயன்.

பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பது, 18 வயது முழுமையடையாத பெண்கள் இனக்கவர்ச்சிக்கு ஆளாகி, தாங்களாகவே விரும்பி, வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்து கொள்வது எனக் குழந்தைத் திருமணங்களை இரு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயலட்சுமி.

குழந்தைத் திருமணத் தடுப்புப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக டெல்லியிலுள்ள தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவால், தமிழகத்தின் சிறந்த ஆணைக்குழு வழக்கறிஞராக (பேனல் லாயர்) கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற அவரின் கருத்து இன்னொரு ஆபத்தையும் பதிவு செய்கிறது.

குற்றச் செயல்கள் அதிகரிப்பு

‘‘குழந்தைகள் விருப்பத் திருமணங்கள் செய்கிறபோது, அவர்களுக்குப் பெற்றோர் ஆதரவுக்கரம் நீட்டுவதில்லை. அத்தகைய திருமணங்கள் தோல்வியில் முடியும்போது தற்கொலைகள் அதிகரிக்கின்றன. அவர்களின் வாரிசுகள் சிறார் நீதிக் குழுமத்தில் அதிக புகார்களுக்கு ஆளாகின்றனர்; குழந்தைத் திருமணத்துக்குள் தள்ளப்படுகின்றனர். குழந்தைத் திருமணம் ஒரு தலைமுறையை மட்டுமல்ல, அவர்களின் வாரிசுகள் உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறையின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் அழித்துவிடுகிறது.

வேலூரைச் சேர்ந்த மாணவி ஒருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. சுதாரித்துக்கொண்டவர் மொட்டை அடித்துக்கொண்டதால் திருமணம் நின்றுபோனது. இப்போது அவர் கல்லூரியில் படித்துக்கொண்டி ருக்கிறார். இந்தத் துணிச்சல் எல்லாச் சிறுமிகளிடமும் இருக்க வேண்டும்’’ என்கிறார் விஜயலட்சுமி.

கல்வி மீட்கும்

50-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்திய ‘அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க’த்தின் தேனி மாவட்டச் செயலாளர் வெண்மணி கூறுகையில், ‘‘தாழ்த்தப்பட்ட வர்கள், பழங்குடியினர் சமூகங்களிலும், விவசாயக் குடும்பங்களிலும், கிராமப்புறங்களிலும் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதற்கான காரணம் அவர்கள் கல்வி கற்பதற்கான சூழல் இல்லாததே. போக்குவரத்து வசதி உள்ளிட்ட கல்விக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்தால் குழந்தைத் திருமணங்கள் குறையும்.

குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் அதற்குப் பிறகு ரகசியத் திருமணங்களாக நடத்தப்படுகின்றன. நிறையக் குழந்தைகளின் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினாலும் அது வழக்குகளாகப் பதிவாவதில்லை. உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக புகாரைக் கூடப் பதிவு செய்ய முடியாத யதார்த்தமே உள்ளது’’ என்று ஆதங்கப்படுகிறார் வெண்மணி.

‘‘குழந்தைத் திருமணம் நடக்கப்போவது தெரிந்தால், காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம்” என்கிறார் எஸ்.ருக்மணி. மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநராகப் பல துறைகளின் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் இவர், “151-வது பிரிவின்கீழ் கண்டறியப்படும் குற்றத்தைத் தடுப்பதற்காகக் கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. குழந்தைத் திருமணத்தை நிறுத்த பெற்றோர் மறுத்தால், 13ஆம் பிரிவின் கீழ் குழந்தைத் திருமணத் தடை உத்தரவு அளிக்கும்படி முதல் வகுப்பு நீதிபதியிடம் புகார் அளிக்கலாம்.

குழந்தைத் திருமணம் நடந்து முடிந்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காவல் நிலையத்தில் இருக்க வைக்கக் கூடாது. அக்குழந்தையை மீண்டும் மீண்டும் தன் வாக்குமூலத்தை வெவ்வேறு அதிகாரிகளிடம் கூறச்செய்து மனத்தைப் புண்படுத்தக் கூடாது’’ என்று அறிவுறுத்துகிறார்.

பாலினச் சமத்துவமின்மை

உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலினச் சமத்துவமின்மைக் குறியீடுகள்-2020 அறிக்கையில், இந்தியா 112-வது இடத்தில் உள்ளது. இந்த தேசம் பெண்கள் முன்னேற்றத்தில், பெண்கள் உரிமையில் காட்டும் அலட்சியத்தின் வெளிப்பாடுதான் இது. பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலமே பாலினச் சமத்துவமின்மையைக் குறைக்க முடியும்.

குழந்தைத் திருமணத்தைப் பொறுத்த வரையில் 99 சதவீதத் தவறுகள் ஆண்களால் அல்லது ஆண்மையச் சிந்தனை யாலேயே நிகழ்கின்றன. எனவே ஆண்களுக்கும், ஆண் மையச் சிந்தனையில் இருப்பவர்களுக்கும் சரி, தவறு, சமூக அநீதி குறித்த புரிதலை பரவலாக உருவாக்க வேண்டும். சமத்துவத்தின் மூலம் சமூக அவலங்கள் களையப்பட வேண்டும். குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா என்பதே நம் லட்சியமாக மாற வேண்டும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்