குழந்தைகள் நூல்களுக்கான ஓவியங்களைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மனமொன்றி வரைந்துவருகிறார் லலிதா தியாகராஜன். கோடுகளாலும் வண்ணங்களாலும் குழந்தைகளை ஈர்த்துவரும் ஏராளமான ஓவியங்களுக்குச் சொந்தக்காரர் இவர். எழுபது வயதிலும் குன்றாத உற்சாகத்துடன் குழந்தைகளின் கற்பனை உலகிற்கான புதிய வாசல்களை ஓவியங்களின் வழியே திறந்துவைக்கிறார்.
“என் அப்பா அம்மாவோட பூர்வீகம் கும்பகோணம். ஆனா, நான் பிறந்தது பெங்களூரு. புனே, மும்பையில படிச்சேன். சின்ன வயசிலேயே ஓவியங்கள் வரைவேன். மருத்துவம் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். கிடைக்கலே. ஆனாலும், எனக்குப் பிடித்தமான ஓவியத்தையே படித்தேன்” என்று சொல்லும் லலிதா, படித்து முடித்ததும் சென்னையிலுள்ள பள்ளியொன்றில் கலை ஆசிரியராக வேலை செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குமேல் அந்தப் பணியைத் தொடர விருப்பமின்றி, ஒரு விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். குழந்தைகள் நூல்களுக்கான ஓவியங்களை வரையத் தொடங்கினார். பிறகு, பிரபல ஓவியர் கோபுலுவிடம் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.
“என்னிடமுள்ள ஓவியத் திறனைப் பல வகைகளிலும் வெளிக்கொண்டுவந்ததில் ஓவியர் கோபுலுவுக்கு முக்கியப் பங்குண்டு. குழந்தைகளின் உலகம் எப்போதுமே வண்ணமயமானது. குழந்தைகள் எந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்தாலும் அதிலுள்ள படங்களைத்தான் முதலில் ஆர்வமாய்ப் பார்ப்பார்கள். குழந்தைகளின் நூலில் இடம்பெறும் ஓவியங்கள் அவர்களின் கற்பனைத் திறனுக்கு உதவியாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளாமல் குழந்தைகளுக்கான ஓவியங்களை வரைவது கடினம். நான் இயல்பிலேயே குழந்தைகளைக் கூர்ந்து கவனிப்பதால், என்னால் குழந்தைகளை ஈர்க்கும்படியான ஓவியங்களை வரைய முடிகிறது” என்கிறார் லலிதா.
இவரது ஓவியங்களில் கோடுகள் அதிகம் இருப்பதில்லை. “கோடுகள் குறைவாக இருப்பதே ஓவியத்திற்கு அழகு என்பார்கள். தேவையற்ற கோடுகள் இல்லாத ஓவியங்களே நமக்குப் பிடிக்கும். எனது ஓவியங்களிலுள்ள கோடுகள் குழந்தைகளின் ஓவிய ரசனையைத் தூண்டும் வகையில் இருப்பதாகப் பலரும் சொல்லி யிருக்கிறார்கள்” என்று சொல்கிறார்.
இதுவரை ஆயிரக்கணக்கான குழந்தைகள் நூலுக்கு இவர் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அதேபோல், குழந்தைகளின் பாட நூல்களுக்கும் படங்கள் வரைந்திருக்கிறார். எதையும் படித்துவிட்டு ரசித்து ஓவியங்கள் வரைவது இவரது பாணி. ஓவியங்கள் வரைவதோடு புத்தகங்களை வடிவமைப்பு செய்வதிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
“நான் ஒரு நூலை வடிவமைக்கும்போது அதில் ஓவியத்துக்குப் போதுமான இடத்தை என்னால் ஒதுக்கித்தர முடிகிறது. நான் ஓவியம் வரைய வந்த காலத்தில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபடவில்லை. முதல் கமர்ஷியல் பெண் ஓவியர் என்ற பாராட்டும் எனக்குக் கிடைத்தது. தற்போது கம்ப்யூட்டரில் ஓவியம் வரையும் சூழல் உருவாகியிருக்கிறது. இது கால மாற்றத்தில் தவிர்க்க முடியாதது. எதில் வரைந்தாலும் நாம் வரைவது யாருக்காக என்பதில் நமக்கு நல்ல புரிதல் இருக்க வேண்டும். எங்கள் சிறுவயதில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள் நிறைய கிடைக்கும். நாங்கள் அதைத்தான் போட்டிபோட்டு வாங்கிப் படிப்போம். குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைகளில் நேரடியாக புத்திமதி சொல்வதைக் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். கதைகளை கலர் கலரான ஓவியங்களுடன் சேர்த்துத் தரும்போது குழந்தைகள் விரும்பிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்” என்று சொல்லும் லலிதா, “குழந்தைகள் அறிவாளிகள் என்பதை என் ஓவியங்கள் வழியாகவும் நான் பலருக்கும் சொல்லிவருகிறேன்” என்று புன்னகையுடன் முத்தாய்ப்பு வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago