பெண் எனும் பகடைக்காய்: சிறகடிக்கும் ஒற்றைப் பறவைகள்!

By பா.ஜீவசுந்தரி

தனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளத்தின் மீது ஆச்சி மனோரமா மிதந்து சென்ற காட்சி நம் வாழ்நாள் முழுவதும் மறக்காது. அநேகமாக அண்மைக் காலங்களில் பெண் ஆளுமை ஒருவரின் இழப்புக்காக இவ்வளவு மக்கள் வெள்ளம் திரண்டதில்லை.

பொதுவாகத் தங்கள் அபிமான ஆண் நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்களுக்கே இது போன்ற பெரும் வெள்ளம் திரளும். ஆனால், ஆச்சிக்குத் திரண்ட கூட்டம் சிந்திக்க வைக்கிறது. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நகைச்சுவை நாயகியாக நடித்தவர் என்பதாலா அல்லது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் என்பதாலா, அல்லது பழக மிகவும் இனியவராக, யார் மீதும் தவறாக ஒரு சொல் கூறாதவராக, யாரிடமிருந்தும் ஒரு சொல் கேளாதவராக வாழ்ந்து அனைவரிடமும் நட்பு பேணியதாலா?

அவரது இழப்பிலிருந்து மீள முடியாமல் அவரை அறிந்தவர்கள் கூறிய அஞ்சலிக் குறிப்புகள் அனைத்திலும் ஓர் உண்மை இருந்தது. அவர் ஒற்றைப் பறவையாக வாழ்ந்தவர். அவர் ஏற்ற பாத்திரங்கள் இனித்ததைப் போல அவரது சொந்த வாழ்க்கை இனிப்பானதல்ல. சோகங்கள், துயரங்கள், துரோகங்கள் இவற்றைச் சந்தித்துக்கொண்டேதான் அவர் மக்களுக்கு மகிழ்வூட்டிக்கொண்டிருந்தார்.

தோல்வியை எதிர்கொள்வதன் சவால்கள்

ஒரு பெண் தன் மண வாழ்க்கை தோல்வியுறும்போது எதிர்கொள்ளும் துன்பங்கள் அவ்வளவு எளிதான வையல்ல. அதிலும் குழந்தைகளுடன் தனித்து விடப்படும்போது அவர்களுக்கு அன்பும் ஆதரவும் தந்து அரவணைக்கக்கூடிய பெற்றோர், உடன் பிறந்தவர்களின் அண்மை மிக அவசியம். தன் கையே தனக்குதவி என வாழ நேரும்போதும் பொருளாதார பலம் பெற்றால்தான் பாதிக் கிணறு தாண்டியவர்களாவார்கள். அது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கும். அவர்களின் பெரும் பலமும் அதுவே.

உற்றவர்களின் ஆதரவு இல்லாதபோது அக்கறை என்ற பெயரில் உள்ளே புகும் நபர்கள், சாய்ந்துகொள்ளத் தமக்குத் தோள் கொடுப்பதாக நினைத்து மயங்கி மீண்டும் சரிவை நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். உண்மையிலேயேயே மாறாத அன்பும் அக்கறையும் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் அக்கறையானவர்கள்தானா என்பதைக் கண்டுகொள்வதற்குள் காலம் குப்புறத் தள்ளிவிட்டுக் குழியும் பறித்துவிடுகிறது. ஆச்சிக்கு தாயாரின் உற்ற துணை, அசலான நண்பர்கள் பலரின் ஆதரவு இருந்தது.

பல ஆண்டுகளின் முன் சென்னைப் புறநகரில் 25 கி.மீ தாண்டிக் குடியிருந்தபோது, அன்றாடம் மின்சார ரயிலில் பயணித்து அலுவலகம் வர வேண்டும். அதில் பெண்கள் பெட்டி என்பது பலவிதமான கூட்டுக் கலவைகளும், உணர்வுகளும், வண்ணங்களும் நிறைந்த அனுபவத்தைக் கொடுக்கும். தலைவிரி கோலமாக, இடுப்பில் குழந்தை, குழந்தைக்கான உணவு, உடை அடங்கிய பை, ஹேண்ட்பேக் சகிதம் ஓடி வந்து ரயிலைப் பிடிக்கும் ஒரு பெண்ணை தினமும் நாங்கள் சந்திப்போம்.

அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும் மற்றவருக்கு உற்ற தோழியாய், தாயாய் உருமாறி பரஸ்பரம் உதவிக்கொள்வோம். குழந்தைக்கு ஒரு பெண் சோறூட்டுவதற்குள், தலைவிரி கோலமாய் வந்தவள் கூந்தலைச் சீவி முடித்து சிங்காரித்திருப்பாள். மற்றொரு பெண் அந்தக் குழந்தைக்கு உடையுடுத்தி, அலங்காரம் செய்வாள். அதிகாலை முதல் வீட்டு வேலைகள், சமையலை முடித்துவிட்டுச் சாப்பிட நேரமில்லாமல் வரும் பெண்கள் தங்கள் சாப்பாட்டுக் கடையை அங்குதான் முடிப்பார்கள். வாய்க்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிட முடியாத, வயிற்றுப் பிள்ளையுடன் வரும் ஒரு கர்ப்பிணிக்காக, அவள் விருப்பம் அறிந்து சமைத்து எடுத்து வந்து கொடுக்கும் அன்பு அதன் உச்சம்.

சென்ட்ரல் ஸ்டேஷன் வருவதற்குள் இத்தனையும் நடந்து முடிந்திருக்கும். பின் அவரவர் வழி, அவரவர் பாடு.

மாலை வீடு திரும்பும் போதும் இதே காட்சி. உதிரியாக வாங்கி வரும் பூ தொடுத்து முடிக்கப்பட்டிருக்கும்; அடுத்த நாள் சமையலுக்கான கீரைக்கட்டுகள் பல கைகளின் உதவியோடு ஆய்ந்து முடிக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிகள் எப்போதும் காணக்கூடியவை. மின்சார ரயிலில் அன்றாடம் பயணிக்கும் அத்தனை பெண்களுக்கும் இது அத்துப்படி. அதே அன்பு, பிரியம், வாத்ஸல்யத்துடன் இப்போதும் அம்மாதிரி நட்பும் பயணமும் தொடர்கின்றன. ஒரு மணி நேரப் பயணத்தில் கிடைக்கும் இந்த மாதிரியான அன்பும், ஆதரவும் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவளுக்கு எல்லா இடங்களிலும் கிடைத்துவிட்டால் ஒற்றைப் பெண் எதையும் சாதிப்பாள்.

குழந்தைகளை வளர்க்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு மாதிரியானவை. ஒருவருக்கொருவர் அவர்களே எதிரிகள், அவர்களே நண்பர்கள் என இரட்டை அவதாரம் எடுக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப கொஞ்சம் தாமதமானாலும் பயம் அடிவயிற்றில் உருக்கொள்ளும். குழந்தை என்ன செய்கிறானோ / செய்கிறாளோ என்ற கவலை வேலைகளின்போது கவனத்தைச் சிதறடிக்கும். பள்ளிப் பருவம் தாண்டும்போது வேறு மாதிரியான பயங்கள். வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் மிகுந்த பொறுமையையும் எச்சரிக்கை உணர்வையும் கைக்கொள்ள வேண்டும். பின் கல்லூரிப் படிப்பு தாண்டும் வரை பயம், பயம், பயம்தான்.

ஒரு குழந்தை மட்டும் கொண்டுள்ள பெற்றோர் எதிர்கொள்ளும் அச்ச உணர்வு மிக நியாயமானது. தன் வாழ்க்கைதான் இப்படியானது, தன் குழந்தைகள் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் யார் இங்கு? ஒற்றைப் பெண் எப்போது இங்கு சாதனையாளராகிறாள்? அவள் பொருளாதார ரீதியாகத் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து, குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து, அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக் கொடுக்கும்போதுதான் அவளுக்கான சவால் நிறைவு பெறுகிறது.

இதில் எது ஒன்றில் சறுக்கினாலும் அவள் தோல்வி கண்டவளாகவே சமூகத்தால் புறம் தள்ளப்படுவாள். ஆனால், பொருளாதாரம் எனும் கடிவாளம் அவர்கள் கையிலேயே இருக்க வேண்டும், அப்போதுதான் மரணத்தின்போதும் அவள் வாழ்க்கையை வென்றவளாகிறாள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்