புகழ்பெற்ற தென்னாப்பிரிக்காவின் மாற்றுத் திறனாளி ஓட்டப் பந்தய வீரர் 'பிளேடு ரன்னர்' என்ற ஆஸ்கர் பிஸ்டோரியஸ், காதலியைக் கொன்ற காரணத்துக்காக வீட்டுச் சிறையில் இருப்பது செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், அவரைப் போன்றே இரண்டு கால்களும் இல்லாத பெலாரஸ் வீராங்கனை உலகை கம்பீரமாக நிமிர்ந்து உட்காரவைத்திருக்கிறார்.
அவர் இரண்டு கால்களும், நான்கு கைவிரல்களும் இல்லாத தத்சியானா க்விட்ஸ்கோ. உபயம்: 1986-ல் செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்பு.
தவழுதலிலிருந்து பாய்ச்சலுக்கு
கிழக்கு ஐரோப்பா முழுவதும் கதிரியக்கம் பரவக் காரணமாக இருந்த செர்னோபில் அணுஉலை விபத்து நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் பெலாரஸில் தத்சியானா பிறந்தார். மிக மோசமான பிறவிக் குறைபாடுகளுடன். இரண்டு முழங்கால்களுக்குக் கீழே எதுவுமில்லை. இடது கையில் மூன்று விரல்கள் இல்லை. வலது கையில் ஒரு விரல் இல்லை. இவ்வளவு மோசமான உடல்உறுப்புக் குளறுபடிகளுக்கு, தாய்க்கு ஏற்பட்ட கதிரியக்க பாதிப்பே காரணம் என்றார்கள் மருத்துவர்கள்.
பிறவிக் குறைபாடுகளுடன் இருந்த பிஞ்சுத் தளிரின் முகத்தை, ஒவ்வொரு நாள் காலையிலும் பார்த்தபோது அப்பா, அம்மாவின் மனம் வலித்தது. நீண்ட காலத்துக்கு அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. வருத்தம் மேலிட ஆதரவற்றோர் இல்லத்துக்கு தாரைவார்த்தார்கள். கால்கள் இல்லாத காக்கை மூலையில் முடங்காதபோது, கால்கள் இல்லாத தத்சியானா மட்டும் பேசாமலா இருப்பாள்? முட்டிகளை இழுத்து இழுத்து தவழக் கற்றாள். 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தவழுதல் பாய்ச்சலாக மாறும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். யாரும் நினைக்காததை தத்சியானா நிகழ்த்திக் காட்டினார்.
இன்றைக்கு, தொழில்முறை ஓட்டப் பந்தய வீராங்கனைகளுக்கு இணையாக அவர் கால்களால் பறந்துகொண்டிருக்கிறார் - ஒரு மாரத்தான் வீராங்கனையாக, பெண் பாடிபில்டராக. நேரடியாகவும் சமூக வலைதளங்களிலும் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் அவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.
வருத்தம் ஏதுமில்லை
தத்சியானாவுக்கு நான்கு வயதானபோது ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு குடும்பம் அவளைத் தத்தெடுத்தது. பதின்பருவத்தைத் தொட்டபோது தத்சியானாவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அன்பு பொங்க அவளைத் தத்தெடுத்த அதே குடும்பம்தான், பிஞ்சு வயதில் அவளைத் தத்துக்கொடுத்த குடும்பம்தான் என்பது. தாரை வார்த்த அவளுடைய பெற்றோர் மனசு மட்டும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கவில்லையே!
“என் அம்மா லூடாவின் 13 வயதுப் படத்தை ஒரு நாள் பார்த்தபோது, என் முகமும் அவருடைய முகமும் ஒன்றுபோல் இருப்பதைப் பார்த்தேன். அம்மாவிடம் கேட்டபோது, அவள் உடைந்து அழுதாள். ‘நான்தான் உன் அம்மா தத்சி. நீ பிறந்த பிறகு தினசரி உன்னைப் பார்க்க தைரியம் இல்லாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தோம். மனசு பொறுக்காமல் நான்கு வயதில் மீண்டும் கூட்டிக்கொண்டு வந்தோம்' என்றார்.”
தன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்ட பெற்றோர் குறித்து தத்சியானாவுக்கு சின்னதாகக்கூட வருத்தமில்லை. தனக்கு எதிராக எதையும் அவர்கள் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்று சந்தேகங்களை தூரமாகத் தள்ளி வைக்கிறார்.
கிடைத்தது கால்
ஐந்து வயதில் பெலராஸில் இருந்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ‘மீட்டெடுக்கும் நலஅமைப்பு' என்ற அமெரிக்க மருத்துவர் அமைப்பு, பெலாரஸ் குழந்தைகளுக்கு உதவ முன்வந்த நேரத்தில் அவர்களுடைய கண்ணில் தத்சியானா பட்டார். அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் சிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆறு வயதில் அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. பள்ளி நாட்களில் பெலாரஸில் படிக்கும் அவர், ஒவ்வொரு கோடைக் காலத்திலும் சிகிச்சை பெற தனியாகவே அமெரிக்கா சென்றுவந்தார். அங்கு அவரை மூன்று தத்துக் குடும்பங்கள் மாறிமாறிக் கவனித்துக்கொண்டன.
2008-ல் கான்சாஸ் சிட்டிக்கே இடம்பெயர்ந்த அவர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கச் சேர்ந்தார். அந்த காலத்தில் ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கான விலை மதிப்புமிக்க செயற்கை பிளேடு கால்களை இலவசமாகக் கொடுத்தது.
நடக்கிறேன், பறக்கிறேன்
“செயற்கை பிளேடுகளை என் கால்களில் பொருத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தவுடன், நிலத்திலிருந்து ஜிவ்வென்று மேலெழும்பி பறப்பதைப் போன்ற உணர்வைப் பெற்றேன். வேகமான ஓட்டத்தை எப்படி நிறுவதெனத் தெரியாமல் விழித்தேன். யாராவது என்னைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கிறது. என் வாழ்நாளில் நான் ஓடியதில்லை என்பதாலும், எப்போதும் பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுவதாலும்தான் இப்படி நடக்கிறது” உண்மைதான், கால்கள் அற்ற ஒரு மாற்றுத் திறனாளிக்கு, செயற்கை பிளேடுகள் தரும் சிறகு அப்படிப்பட்டது.
பிளேடுகள் கிடைத்த மூன்றே மாதங்களில் 5 கி.மீ. ஒட்டம் ஒன்றில் முதன்முதலில் தத்சியானா பங்கேற்றார். பிறகு டஜனுக்கும் மேற்பட்ட 10 கி.மீ. ஓட்டப் பந்தயங்களிலும் இரண்டு ஹாஃப் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
ஓட்டப் பந்தயங்களோடு அவருடைய தாகம் தீர்ந்துவிடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாடிபில்டிங் பந்தயம் ஒன்றில் பங்கேற்று அசத்தியிருக்கிறார். உடல் முழுமைக்குமான ஜிம் பயிற்சிகளையும் சவாலுடன் செய்துவருகிறார். இதில் பளுதூக்கும் பயிற்சி உள்ளிட்டவை அடங்கும். “எல்லா ஜிம் பயிற்சிகளையும் செய்ய முடியவில்லையே என்று கோபம் வரத்தான் செய்கிறது” என்று சொல்லி வாயைப் பிளக்க வைக்கிறார்.
என் உடல் என் பெருமை
“சில நேரங்களில் ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று மனசு ஓரத்தில் ஓர் ஆசை எட்டிப்பார்க்கும். ஆனால், எனக்கு நிஜக் கால்கள் இருந்திருந்தால் இப்போது இருப்பதைப் போல, என் மீதும் என் உடல் மீதும் அதீத விருப்பத்துடன் இருந்திருப்பேனா தெரியவில்லை. இப்போது இருப்பதைப் போல திருப்தியுடன் இருந்திருப்பேன் என்று நிச்சயமாகத் தோன்றவில்லை.
உடல்ரீதியிலும் மனரீதியிலும் உணர்ச்சிரீதியிலும் என்னுடைய மாற்றுத் திறன் காரணமாகவே நான் உறுதியானவளாக இருக்கிறேன். ஓட்டப் பந்தயம் என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறது. கால்கள் இல்லாவிட்டால் என்ன, என்னால் இப்போது ஓட முடிகிறதே என்று என் மனம் குதூகலிக்கிறது. ஓடும் பிளேடுகளைப் பொருத்திக்கொண்டு பறந்து செல்ல யத்தனிக்கிறேன்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார்.
இதுவரை அவர் பங்கேற்றது எதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் அல்ல என்பதால், பதக்கம் வெல்லாததைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. மாறாக, முகம் தெரியாத ஆயிரக் கணக்கான ரசிகர்களை வலைதளம் மூலமாக வென்று அவர் வாகை சூடியிருக்கிறார்.
“அவர்களுக்கு நான் உத்வேகம் தருவதாக”, எத்தனையோ பேர் குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். “என்னைப் போன்ற ஒரு மனுஷியால் என்ன செய்ய முடியும் என்பதை மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, இயல்பான திறன் கொண்டோருக்கும் நான் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன். மனதில் உறுதி இருந்தால், எதற்காகவும் அயர்ந்து உட்காரத் தேவையில்லை. வெற்றி நம் கூடவே ஓடி வரும்,” முடிக்கிறார் தத்சியானா.
வெற்றி இவரைப் போன்ற மன உறுதி மிக்கவர்களைத் தேடி வராமல் வேறு யாரிடம்தான் போகும்?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago