அந்த மயானத்தில் சிதை ஒன்று எரிந்துகொண்டிருக்கிறது. அருகில் கையில் கொள்ளிச்சட்டியோடு மெலிந்த தேகமும் அமைதியான முகமுமாக எரிந்துகொண்டிருக்கும் சிதையையே வெறித்துக் கொண்டிருப்பவர்தான் சாவித்ரி வைத்தி.
தனது ‘விஸ்ராந்தி’யைச் சேர்ந்த ஒரு பெண்மணி இறந்துவிட்டார் என்று தொலைபேசியில் அவரது குடும்பத்துக்குத் தெரிவித்திருந்தார், சாவித்ரி. அந்திமக் கிரியைகளை செய்யக்கூட அவர்கள் யாரும் வராத தால், தானே அந்தப் பெண்ணுக்குக் கொள்ளிவைத்திருந்தார். சுடுகாட்டுக்குச் செல்லவே பெண்கள் தயங்கும் நிலையில், தீச்சட்டி ஏந்தி நிற்க சாவித்ரியிடம் எவ்வளவு துணிவும் போராட்டக் குணமும் இருந்திருக்க வேண்டும்! ஒரு கவளம் சோற்றை நிம்மதியாக உண்பதற்கு முடியாமல், மகன் - மருமகளிடம் வன்சொற்களைக் கேட்டுத் தள்ளாடும் பெரியவர்களுக்கு ஊன்றுகோலாக திகழ்வது, சாவித்ரி வைத்தி உருவாக்கிய விஸ்ராந்திதான். ஒருவர் வாழ்க்கையில் என்னவாகத் திகழப்போகிறார் என்பதை அவரது பிறந்த நாளே சூசகமாகத் தெரிவித்து விடும். உலக முதியவர்கள் நாளாகக் கொண்டாடப்படும் அக்டோபர் 1 அன்றுதான் சாவித்ரி பிறந்தார்.
திருப்புமுனை
சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சாவித்ரிக்குத் திடீரென்று ஏற்பட வில்லை. 16 வயதிலேயே ஏற்பட்டு விட்டது. அதற்கு உந்துதலாக இருந்தது ஒரு நிகழ்வு. 1946-ல் சூளை பகுதியில் இருந்த குடிசைப் பகுதிகளின் வழியாகப் பயணித்தபோது, காலணிகள்கூட அணியாமல் கொளுத்தும் வெயிலில் நடமாடிய குடிசைவாழ் மக்களைக் கண்டு சாவித்ரி மனம் பதறினார். உடனே, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே காலணி அணியா பாதசாரிகள் (Barefoot Walkers) என்கிற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம், அந்தக் குடிசைவாழ் மக்களின் குறைகளைத் தீர்த்து, அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கும் சாவித்ரி உதவினார்.
பிறகு, ‘ஜெமினி' எஸ்.எஸ். வாசனின் மனைவி பட்டம்மாளின் சகோதரர் வைத்தியைக் கரம்பிடித்தார் சாவித்ரி. சமூகத்துக்குத் தான் தொண்டாற்ற நினைப்பதைக் கணவரிடம் தெரிவிக்க, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வ தில்லை என்று அந்தப் புதுமணத் தம்பதி தீர்மானம் எடுத்தது. சிறிய அளவில், பெண்களைத் திரட்டி ஆன்மிகப் பாடல்களைப் பாடுவது, பேக்கரி வகுப்பு, தையல் வகுப்புகள் என்று 20 பெண்களைக் கொண்ட பெண்கள் சங்கமாகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாவித்ரி.
1956-ல் கில்ட் ஆஃப் சர்வீஸ் தலைவரும், அப்போதைய சென்னை யின் ஷெரிப் பதவியில் இருந்தவருமான மேரி கிளப்வாலா ஜாதவ்வை அழைத்துத் தங்கள் சங்கத்தின் விழா ஒன்றில் பேச வைத்தார். சாவித்ரியின் தொண்டு மனப்பான்மையைக் கண்டு வியந்து போனார் மேரி கிளப்வாலா.
“இவ்வளவு ஆர்வத்தை வைத்துக்கொண்டு எதற்காக லேடீஸ் கிளப் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்? முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லத்தைப் போன்று பெரிய அளவில் சமூகத்துக்கு எதையாவது செய்யுங்கள்” என்று அவர் கூற, அவரது கோரிக்கை, சாவித்ரியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. ஆனால், உடனே அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. விளம்பரம் இன்றி, சிறிய அளவில் சமூகத் தொண்டாற்றிக்கொண்டிருந்தார்.
ஒரு திங்கள்கிழமை மாலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சமூகத் தொண்டாற்ற ஒரு பெரிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் சாவித்ரிக்கு ஏற்பட்டது. திங்கள்கிழமையன்று அந்த எண்ணம் தோன்றியதால், அந்த அமைப்புக்கு ‘திங்கள் தர்ம சங்கம்’ (மண்டே சாரிட்டி கிளப்) என்று பெயரிட்டார். அண்மையில் சங்கத்தின் பொன்விழா ஆண்டை சாவித்ரி வைத்தியின் தலைமையில் மிக சிறப்பாகக் கொண்டாடியிருந்தார், அதன் தற்போதைய நிர்வாக தலைவர் கௌசல்யா சேஷாத்திரி.
இருவருடன் தொடக்கம்
முதலில் அந்த அமைப்பின் சார்பில் ஒரு புத்தக வங்கியைத் தொடங்கினார்கள். ஏழை மாணவர்களுக்குக் கல்லூரிக் கட்டணம் செலுத்துவது, பாடநூல்களை வாங்கித் தருவது போன்றவற்றைச் செய்தது இந்த அமைப்பு. தான் வாழ்ந்த ஆர்.ஏ. புரம் வீட்டையே அந்த அமைப்பின் அலுவலகமாக மாற்றியிருந்தார் சாவித்ரி. 1978-ல் குரோம்பேட்டை சென்றபோது, கிறித்துவப் பெண்மணி ஒருவர், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டுத் தெருவில் கதறிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்.
உடனே, அந்தப் பகுதியிலேயே ஒரு வீட்டை 250 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டில் அவரைக் குடியேறச் செய்தார். விரைவிலேயே, இன்னொரு முதிய பெண்மணியும் அந்த வீட்டில் அடைக்கலம் புகுந்தார். அந்த இருவரைக் கொண்டு தொடங்கப் பட்டது ஒரு முதியோர் இல்லம்.
பிறகு திருவான்மியூர் பகுதியில் ‘விஸ்ராந்தி’யைத் தொடங்கினார். ஏவி.எம். மெய்யப்ப செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி அம்மையார் பால வாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விஸ்ராந்திக்கு நன்கொடையாக அளிக்க, அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி கட்டடத் துக்கு அடிக்கல் நாட்டினார். ஹெல்பேஜ் இந்தியாவும் உதவிக்கரம் நீட்டியது.
தற்போது விஸ்ராந்தியில் நூற்றுக்கணக்கான முதியவர்களும் சிறார்களும் முப்பது பணியாளர்களும் உள்ளனர். ஒருமுறை, எம்.எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெறப்போவதாக நாளிதழில் வந்திருந்த விளம்பரத்தை அங்கிருந்த பாட்டி ஒருவர் பார்த்திருக்கிறார். “பிள்ளைகளுடன் இருந்தாலே கச்சேரிக்குப் போக வேண்டும் என்று உரிமையுடன் கேட்க முடியாது. நாம் ஆஸ்ரமத்தில் இருக்கிறோம். நாம் எங்கே கச்சேரிக்கெல்லாம் போவது?” என்று அந்தப் பாட்டி புலம்புவதை சாவித்ரி கேட்டார். எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அவர் போன் செய்ய, மறுநாளே விஸ்ராந்திக்கு வந்து முதியவர்களுடன் பொழுதைக் கழித்து அவர்கள் கேட்ட பாடல்களையெல்லாம் பாடிவிட்டுச் சென்றார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
“இதுபோல் முதியவர்கள் ஆசைப்பட்டவற்றையெல்லாம் நடத்திக்காட்டியவர் சாவித்ரி வைத்தி” என்கிறார் தற்போது ‘மண்டே சாரிட்டி கிளப்’ செயலாளராக இருக்கும் பிரபா ஸ்ரீதர்.
விருதைத் தேடாத தாயுள்ளம்
சாதி, மதம், இனம், மொழி வேறுபாடெல்லாம் விஸ்ராந்தியில் கிடையாது. ரயில்வே பிளாட்பாரம், கோயில் குளங்கள், கடற்கரை போன்ற இடங்களில் பரிதவித்துக்கொண்டிருக்கும் முதியவர்களை விஸ்ராந்திக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்கென்றே ஒரு படையை அமைத்திருந்தார் சாவித்ரி. அமெரிக்கன் பையோகிராபிகல் நிறுவனத்தின் (AIB) 2000 விருது, சி.என்.என்.-ஐ.பி.என். விருதுகளையும் பெற்றவர் என்றாலும், விருதுகளைத் தேடி அவர் பயணிக்கவில்லை. ஊடகங்களை விளம்பரங்களுக்காகத் தேடாமல், நிராகரிக்கப்பட்ட முதிய பெண்களின் மீது சமூகத்தின் கவனத்தைத் திருப்பவே வேண்டினார்.
விஸ்ராந்தியிலேயே ஒரு பகுதியில் தங்கியிருந்த சாவித்ரி வைத்தி, சில மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்தார். ஆபரணங்கள் அணிவதைப் பொதுவாகவே தவிர்த்தவர், குங்குமம் மட்டும் நெற்றி நிறைய வைத்துக்கொள்வார். “குங்குமம் என்பது பாதுகாப்புக்கு வைப்பது. எனது நெற்றி நிறைய குங்குமத்தை வைப்பது, விஸ்ராந்தி முதியவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்” என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆதரவற்றோருக்கு ஊன்றுகோலாகத் திகழ்ந்த சாவித்ரி வைத்தி, அக்டோபர் 10 அன்று மறைந்துவிட்டார். அவரது இழப்பை விஸ்ராந்தி முதியவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. “என்னைக் கரையேற்றாமல் போய்விட்டார்” என்று பலர் புலம்புகின்றனர். “எங்கள் பிள்ளைகள் கைவிட்டபோதுகூட நாங்கள் கலங்கவில்லை.
ஆனால், அவரது மறைவால் கலங்கி நிற்கிறோம். அவர்போல் எங்களைக் கவனிக்க யார் இருக்கிறார்கள்?” என்று கதறும் அவர்கள், அமைப்பின் மற்ற உறுப்பினர்களிடம் “எங்களைச் சந்திக்க அடிக்கடி வாருங்கள்” என்று கூறுகின்றனராம். பொதுவாகவே விழாக்களில் தான் சந்திக்கும் முதியவர்களிடம், “உங்களை உங்கள் குழந்தைகள் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்களா?” என்று ரகசியமாகக் கேட்பாராம் சாவித்ரி வைத்தி. அப்போது, அப்படியெல்லாம் பிரச்சினை ஒன்றுமில்லை என்று சற்று காட்டத்துடன் சாவித்ரியிடம் பதில் அளித்த சிலர், பின்னாளில் விஸ்ராந்தியில் சரண் அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு வாரத்துக்கு சாவித்ரியின் முகத்தில் விழிக்கவே வெட்கப்பட்டுக்கொண்டு, சாப்பிடக்கூட மறுப்பார்களாம். பிறகு சாவித்ரி மனம் விட்டுப் பேசி, அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவாராம்.
சாவித்ரி வைத்திபோல் நம்மால் முழுநேர சேவகர்களாக மாற முடியாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போது அருகில் இருக்கும் முதியோர் இல்லத்துக்குச் சென்று, பாசத்துக்கு ஏங்கும் மூத்த குழந்தைகளைச் சந்தித்து நலம் விசாரித்து, அன்பு காட்டினாலே அந்தத் தாய் உள்ளம் எங்கிருந்தாலும் மகிழும் அல்லவா!
கட்டுரையாளர், தொடர்புக்கு: tanthehindu@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago