சமூக அவலம்: யார் குற்றவாளி?

By எல்.ரேணுகா தேவி

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியுடன் மேலும் ஒரு செய்தியும் ஊடகங்களில் வெளியானது. உத்தரப்பிரதேசத்தின் லக்ஹம்பூர் பகுதியில் 13 வயதுப் பெண் குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட செய்திதான் அது. இந்தியாவுக்கு இது புதிதல்ல. ஏற்கெனவே பதிவாகியிருக்கும் எண்ணற்ற குற்றங்களில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது.

தேசியக் குற்றப் பதிவேட்டில் 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,557 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர். குழந்தைகள் மீதான வன்முறைகள் பெரும் பாலும் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிற நிலையில், பதிவுசெய்யப்பட்டிருக்கும் சொற்பக் குற்றங்களின் எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நினைக்கவே அச்சமாக இருக்கிறது. குழந்தைகள் மீதான வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களும் குழந்தைப் பாதுகாப்புக் கொள்கை களும் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2012-ல்இயற்றப்பட்ட ‘போக்சோ‘ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கானச் சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனாலும், தேசியக் குற்றப் பதிவேட்டின் புள்ளிவிவரங்கள் குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதை எடுத்துக்காட்டுகின்றன.

குழந்தைகள் உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ, வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தியக் குழந்தைகளில் சுமார் 53 சதவீதத்தினர் ஏதோவொரு வகையான வன்முறையை எதிர்கொள்கிறார்கள். குழந்தை களின் வாழ்க்கை, வளர்ச்சி, மாண்பு, உடல்நலன் உள்ளிட்டவற்றுக்கு ஊறுவிளைவிக்கும் அனைத்துமே குழந்தைகள் மீதான வன்முறையே என்கிறது யுனிசெஃப்.

குழந்தைகளின் பாதுகாப்பு?

வீடு, பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், விடுதி என எல்லா இடங்களிலும் குழந்தை கள் மீதான வன்முறை பதிவாகியுள்ளது. பொதுவாக இந்த இடங்கள் அனைத்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானவை என்று நாம் கருதுகிறோம். ஆனால், அங்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகவே உள்ளது. குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான், அவர்களை வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர்.

இன்றைய புதிய வளர்ச்சிப்போக்குகளும் பல்வேறு வகையான தாக்குதல்களைக் குழந்தைகள் மீது தொடுக்கின்றன. ஆனால், அவை எங்கும் பதிவாகாமலும் சமூகத் தலையீடு இல்லாமலும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. இவை குறித்து உரிய கவனம் செலுத்தத் தவறினால், அது குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறை குறித்து, எவ்விதத் தயக்கமும் இன்றி குழந்தைகள் பேசும் வகையிலான சூழலை உருவாக்குவதே நம் முதல் பணியாக இருக்க வேண்டும்.

வெளியே சொன்னால் அசிங்கம், ஊர் என்ன சொல்லும் என்று நமது சமூகம் உருவாக்கிவைத்துள்ள மோசமான கற்பிதமே, குழந்தைகளை மௌனமாக இருக்கச் செய்வதுடன் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடவும் வழிவகுக்கிறது. இந்தப் போக்கை உடைத்தெறிய வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்துச் சொல்லித்தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் கட்டாயம் இதைக் கற்றுத்தர வேண்டும். அத்துடன் பெற்றோரும், தங்களுடன் நெருங்கி இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகள் மீதான பாலியல்ரீதி யான வன்முறைகளைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஓரளவுக்குக் கைகொடுக்கும். இது போன்ற வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைகளுடன் உரையாடுவது அவசியம். குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பவை குறித்துத் தங்கள் பெற்றோருடன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். சிலநேரம் அவர்கள் சொல்லும் விஷயங்கள் சற்று அச்சமூட்டுவதாக இருந்தாலும், உடனடியாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தமுறை அதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பார்கள், குற்றம் நடந்தாலும் அச்சத்தால் அதை மறைப்பார்கள். அவர்கள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு அதில் உள்ள சரி, தவறுகளையும் சிக்கல்களையும் வேறொரு நேரம் பேசிப் புரியவைக்க வேண்டும்.

குழந்தைகளிடம் பேசுங்கள்

சுயபாதுகாப்பு குறித்துச் சிறுவயதிலேயே குழந்தைகளிடம் பேச வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மேலும் கூடுதலாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உடல் குறித்துப் பேசுவதில் உள்ள தயக்கத்தை உடைக்க வேண்டும். ‘உன்னுடைய அந்தரங்கப் பகுதிகளை யாரும் தொடவோ, பார்க்கவோ அனுமதிக்கக் கூடாது. மற்றவர் யாரும் அவர்களின் அந்தரங்கப் பகுதியை பார் என்றோ, தொடு என்றோ கூறுவதும் தவறு. அந்தரங்கப் பகுதிகளின் படங்களையோ காட்சிகளையோ பார்க்கச் சொல்வதும் கட்டாயப்படுத்துவதும் தவறு. அப்படி நடந்தால் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும்’ என்று குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

நமக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் தவறான உள்நோக்கத்துடன் ஒருவரின் பேச்சோ, செயலோ இருக்குமானால் அவரிடமிருந்து விலகியிருப்பதுடன், அது குறித்துக் குழந்தைகள் தம் பெற்றோரிடம் சொல்வதற்கும் வலியுறுத்த வேண்டும். யாரேனும் உறவினர் குறித்து குழந்தை இப்படிப்பட்ட புகாரைச் சொன்னால் அலட்சியப்படுத்துவதோ, குழந்தையிடம் அப்படியெல்லாம் இருக்காதென்றோ கூறுவதை முதலில் தவிர்க்க வேண்டும். குழந்தை சொன்ன புகாரை நம்புவதுடன் அதற்கு வினையாற்றும் வகையில் செயல்படுவது அவசியம்.

இல்லையென்றால் அந்த உறவினர் அடுத்த முறை தவறு செய்யும்போது, பெற்றோரிடம் அதைச் சொல்வதிலேயே குழந்தைக்குத் தயக்கம் ஏற்பட்டுவிடும். அது குழந்தைக்குப் பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்கும். ஒருவரின் செயலில் பாதுகாப்பற்ற சூழலைக் குழந்தை உணர்ந்தால் ‘இல்லை’, ‘முடியாது’ என்று தனது எதிர்ப்பை தெரிவிக்கக் கற்றுக்கொடுங்கள். அங்கிருந்து விலகி ஓடவும் அருகில் இருப்பவர்களிடம் அதைச் சொல்லவும் வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

கண்டிப்பும் வன்முறையே

பாலியல்ரீதியான வன்முறைகள், குழந்தை களை நெடுங்காலத்துக்கு உளரீதியாகவும் பாதிக்கும். அதற்கேற்ற வகையில் அந்தக் குழந்தைகளைக் கையாள வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை குற்றமற்றவர் என்கிற உணர்வை சமூகமும் பெற்றோரும் முதலில் ஏற்படுத்த வேண்டும். அதுவே குழந்தைக்கு ஒரு பலத்தைக் கொடுக்கும். நம்பிக்கையூட்டி, பொது நீரோட்டத்தில் அந்தக் குழந்தைகளை இணைக்க வேண்டும். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சண்டையிடுவது, குடிக்கு அடிமையான தந்தையின் செயல்கள் உள்ளிட்டவையும் குழந்தைகளை உளரீதியாகப் பாதிக்கும் என்பதைப் பெற்றோர் கவனத்தில்கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் குழந்தைகளை அடிப்பதும் உடல்ரீதியான வன்முறையே.

சமூகரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, நிர்வாகரீதியாகவோ வேறு எந்த வகையிலோ நமக்கு மேலிருக்கும் ஒருவர் நம்மை வதைப்பது எவ்வளவு பெரிய தவறோ, அதற்கு நிகரானதே குழந்தைகள் மீதான பெற்றோரின் ஆதிக்கமும் வன்முறையும். அதனால், கண்டிப்பு என்ற பெயரில் குழந்தையைத் துன்புறுத்தும் எந்தச் செயலும் வன்முறையே என்பதைப் பெற்றோர் உணர்வதுடன், குழந்தைக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்தித்தர முழு மனதுடன் முன்வர வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்